கருங்குளம் அருகே கிளாககுளத்திற்கு செல்லும் சாலை கடந்த மூன்று தினங்களாக மழை நீரால் சூழப்பட்டது. இவ்வூருக்குச் செல்லும் ரயில்வே சுரங்கப் பாதையில் 7 அடி தண்ணீர் தேங்கிய காரணத்தினால் போக்குவரத்து அடியோடு துண்டிக்கப்பட்டது. இதற்கிடையில் கருங்குளம் ஒன்றிய அலுவலகம் மூலமாகப் போடப்பட்ட மங்கம்மாள் சாலையிலும் தண்ணீர் சூழ்ந்து துண்டிக்கப்பட்டது- இதனால் கிளாக்குளம், குருக்கல் கோட்டை மக்கள் சுமார் 15 கிலோ மீட்டர் சுற்றி கருங்குளம் வரும் அவல நிலை ஏற்பட்டது. இதுகுறித்து பல்வேறு ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டது. இதைப் பற்றி கேள்வி பட்ட கருங்குளம் ஒன்றிய சேர்மன் கோமதி ராஜேந்திரன், ஸ்ரீ வைகுண்டம் வட்டாட்சியர் ராதாகிருஷ்ணன், கருங்குளம் ஒன்றிய ஆணையாளர் பாக்கியலீலா, வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வி ஆகியோர் சம்பந்த இடத்துக்குச் சென்றனர்.
அங்கு மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தனர். அதன் பின் கிளாக்குளத்துக்கு தாதன்குளத்தில் இருந்த வருகின்ற மங்கம்மா சாலை ஓடைசீரமைக்கப்படும் பணி துவங்கியது. இதற்குள் ரயில்வே கிராஸிங் சாலையில் உள்ள தண்ணீர் நான்கு மோட்டார் மூலம் வெளியேற்றப்பட்டு இன்று மீண்டும் மினி பஸ் போக்குவரத்தை துவக்கி வைத்தனர். இதற்கான நடவடிக்கை எடுத்த கருங்குளம் ஒன்றிய சேர்மன் கோமதி ராஜேந்திரன் மற்றும் அதிகாரிகளுக்கு பொதுமக்கள் நன்றி கூறினர்.



