இலவசத் திறன் பயிற்சியில் சேருவதற்கு ஆன்லைன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.
தாட்கோ மற்றும் ICT அகாடமி சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு இலவசத் திறன் பயிற்சியில் சேருவதற்கு ஆன்லைன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களின் மேம்பாட்டிற்காகப் பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அதன் அடிப்படையில் தாட்கோ, மற்றும் தகவல் தொடர்பு தொழில் நுட்பக் கழகம் (ICT Academy) இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இளைஞர்களுக்கு, சென்னை மாவட்டத்தில் மென்பொருள், வலைதளம் வடிவமைப்பாளர் மற்றும் பயன்பாட்டு மென்பொருள் மேம்பாட்டாளர் பயிற்சியும், கோயம்புத்தூர் மாவட்டத்தில் மென்பொருள், வலைதளம் வடிவமைப்பாளர், பயன்பாட்டு மென்பொருள் மேம்பாட்டாளர், தரவுப்பகுப்பாய்வாளர், நுண்நிதிநிர்வாகம் மற்றும் காப்பீட்டு முகவர் பயிற்சியும், மதுரை மாவட்டத்தில் தரவுப்பகுப்பாய்வாளர், மென்பொருள்வடிவமைப்பாளர், நுண்நிதிநிர்வாகம் மற்றும் காப்பீட்டு முகவர் போன்ற பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது.
மென்பொருள் சார்ந்த பயிற்சி பெற இளங்கலை பொறியியல் மற்றும் பி.எஸ்.சி கணினி அறிவியல் ஆகிய பாடங்களில் பட்டம் பெற்று இருக்கவேண்டும். நிதிசார்ந்த பயிற்சிகள் பெற இளங்கலை வணிகவியல் மற்றும் இளங்கலை வணிகநிர்வாகவியல் ஆகிய பாடங்களில் பட்டம் பெற்று இருக்க வேண்டும்.
இப்பயிற்சியினை பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினராகவும், வயது வரம்பு 18 முதல் 35 வயதிற்குள்ளும், மற்றும் குடும்ப ஆண்டு வருமானம் ரூ,3.00 லட்சத்திற்குள் இருக்கவேண்டும். இப்பயிற்சி சென்னை, கோயம்புத்தூர் மற்றும் மதுரை மாவட்டங்களில் நடைபெறவுள்ளது.
இப்பயிற்சியினை முழுமையாக முடித்த இளைஞர்களுக்கு சான்றிதழ் மற்றும் பயிற்சி அளிக்கும் நிறுவனத்தின் மூலமாக தகுதியான நபர்களுக்கு வேலைவாய்ப்பும் ஏற்படுத்தி தரப்படும். இப்பயிற்சியில் சேருவதற்கு தாட்கோ இணையதளமான (www.tahdco.com) என்ற முகவரியில் பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.


