சான்றோர் மலர் எனக்கு தொடர்ந்து எழுத ஆதரவு தந்து வருகிறது. அதற்காக வாசகர்களான உங்களுக்கும் வாய்ப்பு தந்த தெட்சண மாற நாடார் சங்கத்திற்கும், ஆசிரியர் குழுவினருக்கும் மிக்கநன்றி . ஆரம்ப காலத்தில் “எனது பயணங்கள்” என்ற தொடரை சான்றோர் மலரில் எழுதி அந்த தொடர் நூலாக வெளி வந்துவிட்டது. அதன் பின் “முத்துக்கிளி” என்னும் தொடர்கதையை கடந்த 6 வருடங்களாக எழுதினேன். அதற்கு நல்ல ஆதரவு தந்தீர்கள். அதன் முதல் பாகம் “சருகு” என்ற பெயரில் யாவரும் பதிப்பகமும், இரண்டாம் பாகம் “தீதும் நன்றே” என்ற பெயரில் சுவடு பதிப்பகமும் வெளியிட்டுள்ளது. மூன்றாம் பாகம் “ரங்கூன் ராஜத்துரை”, நான்காம் பாகம் “மலராத அரும்புகள்” என்ற தலைப்பிலும் நாவலாகி பிரபல பதிப்பகங்களில் பிரசுரமாக உள்ளது. இதற்கிடையில் சான்றோர் மலரில் மூன்றாவது தொடராக “குலசேகரபட்டினம் லோன் துரை கொலை வழக்கு” என்ற தலைப்பில் இந்த தொடரை எழுதுகிறேன்.
இந்த தொடரை நாவலாக எழுத வேண்டும் என ஆசை. அந்த அளவுக்கு ருசிகரம் உள்ளது. ஆனால் வரலாற்றை நாவலாக திரிக்க கூடாது என நமது அன்பர்கள் அன்பு கட்டளையிட்டனர். எழுத்தாளர் நெல்லை கவிநேசன் அய்யா அவர்களும், கல்வெட்டு ஆய்வாளர் தவசி முத்து மாறன் அய்யா அவர்களும், சிறந்த வாசகரான ரணா அருண்குமார் அவர்களும் இந்த கருத்தை தெரிவித்தார்கள். அவர்களுக்காக செவி சாய்து, இந்த தொடரை வித்தியாசமாக எழுத முயற் சி செய்துள்ளேன். கல்லூரி மாணவி ஒருவர் தனது ஆராய்ச்சி படிப்புக்காக திருச்செந்தூர் வட்டார தியாகிகளை தேடிச்சென்று செய்தி சேகரிப்பது போலவும், அவரிடம் அங்குள்ள கதை சொல்லிகள் தியாகிகள் வரலாற்றை கதையாக சொல்வது போலவும் வடிவமைத்து உள்ளேன். நிச்சயம் இந்த தொடரும் உங்கள் மனதை கவரும் என நம்புகிறேன்.
திருச்செந்தூர் வட்டார தியாகிகள் மறைக்கப்பட்ட வரலாறு, சுதந்திரப்போராட்டத்தில் பல்வேறு சம்பவங்களை கதைகதையாக சுமந்து கொண்டிருக்கிறது. தேரிக்காடுகளில் மறைந்து போன அத்தியாயங்கள் பல உள்ளன. இந்த மறைந்த ருசிகர செய்திகளை ஆவணப்படுத்துவதே இந்த தொடரின் நோக்கம். இந்த வரலாற்றை “தூத்துக்குடி மாவட்டத்தில் அறியப்படாத தியாகிகள்” என்ற தலைப்பில் நூல் எழுத முன்னால் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில் ராஜ் அவர்கள் எனக்கு வாய்ப்பு தந்தார்கள். அந்த நூல் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிட்டது. அந்த வரலாற்றில் திருச்செந்தூர் வட்டாரத்தினை மட்டுமே இந்த தொடரில் எழுத உள்ளேன். படித்து ரசியுங்கள். கருத்தை தெரிவியுங்கள். மிக்க நன்றி. – அன்புடன் முத்தாலங்குறிச்சி காமராசு
1. கிராமத்து ஆராய்ச்சி மாணவி.
கலாராணி. இவளை ராணி என்றுதான் அழைப்பார்கள். பெயருக்கு ஏற்ப ராணிதான் வீட்டிலும் எல்லோரிடமும் நல்ல பெயர் பெற்றவள். ஒரு குக் கிராமத்தில் பிறந்து இருந்தாலும் அந்த கிராமத்தில் உள்ள அனைவருக்கும் செல்லப்பிள்ளை. அடுத்தவருக்கு உதவுவதில் கெட்டிக்காரி.
கல்லூரியில் முதுகலை இரண்டாம் ஆண்டு வரலாறு பாடம் படித்து வருகிறார். கல்லூரியிலும் அனைவரை விட தனித்துவமாக தெரிவாள். இவள் படிக்கும் வரலாற்று பிரிவில் ஏதாவது சாதிக்க வேண்டும் என நினைப்பவள். இந்த வேளையில் தான் ஒரு நாள் கல்லூரி பேராசிரியர் கல்லூரிக்கு வந்து ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.
“மாணவர்களே உங்கள் அறிவுக்கு ஏற்ற வேலை ஒன்றை உங்களுக்கு தரப்போகிறேன். அதாவது ஒவ்வொருவரும் ஏதாவது ஒன்றை பற்றி ஆய்வு செய்து ஆய்வறிக்கை தயார் செய்து தரவேண்டும். அதற்கு தனியாக மதிப்பெண் உண்டு” என்று சொன்னார்.
நிறைய பேருக்கு இது தேவையில்லாத ஒரு பாடம் போலவே தோன்றியது. ஏதாவது தலைப்பை எடுக்க வேண்டும். அந்த தலைப்புக்காக தேடி அலையவேண்டும். அதன் பின் அவர்கள் தேடிக்கண்டுபிடித்ததை எழுதி கொடுக்க வேண்டும். ஒரு நாள் வைவா வைப்பார்கள். அந்த வேளையில் பேராசிரியர்கள் கேட்கும் கேள்விக்கு சரியாக பதில் சொல்லவேண்டும். மிகவும் கஷ்டமான வேலை. ஏற்கனவே இருப்பதையே படிக்க முடியவில்லை. இதுவேறையா என மனது வேதனைப்படுவர். ஆனால் இது காலத்தின் கட்டாயம். கண்டிப்பாக முதுகலை மாணவர்கள் செய்ய வேண்டிய கடமை.
ராணிக்கு இந்த பாடத்தில் மிகவும் ஈடுபாடாக இருந்தது. களப்பணி செய்ய வேண்டும். புதிது புதிதாக கண்டு பிடிக்க வேண்டும் என்பதில் ஆர்வமாக இருப்பார். எனவே பேராசிரியர் சொன்னதை மிகவும் கவனமாக கேட்டுக் கொண்டிருந்தாள்.
போராசிரியர் மேலும் தகவலை கூறிக்கொண்டிருந்தார்.
“இங்க பாருங்க. ஏதாவது பழைய மாணவர்கள் முடித்து வைத்திருக்கும் கட்டுரைகளை கொண்டு வந்து சமர்பித்து விடாதீர்கள். அப்படி சமர்பித்தால் அது உங்களையும் ஏமாற்றி எங்களையும் ஏமாற்றுவதற்கு சமமாகி விடும். எனவே தேடுங்கள். தேடி தலைப்பு தாருங்கள். புதிய விசயங்களை கண்டு பிடித்து வெளியே கொண்டு வாருங்கள். பிற்காலத்தில் நீங்கள் பட்டய ஆய்வு படிக்க நேரிட்டால் இந்த ஆய்வு மிக்க உதவியாக இருக்கும்” என்றார்.
இதை ராணி நன்கு உற்று நோக்கி கவனித்து வந்தாள்.
ராணியின் கிராமம் மிகவும் பின் தங்கிய கிராமம். அடிப்படை வசதி கிடையாது. சுதந்திரம் கிடைத்து இத்தனை நாள் ஆகியும் அவ்வூருக்கு போக்கு வரத்து வசதி கூட இல்லை. இவ்வூர் மக்கள் சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்றுதான் பஸ் ஏற வேண்டும். இதனால் கல்லூரி படிப்புக்காக இவளை அருகில் உள்ள பட்டணத்தில் ஹாஸ்டலில் சேர்த்து விட்டிருந்தார்கள். அவளுக்கு படிப்பு ஒருபுறம் இருந்தாலும் தன் கிராமத்தின் மீது எப்போதுமே ஆர்வம் அதிகம். கிராமத்தினை நன்று நேசித்தவள். எனவே தனது கிராமத்தினை பற்றி எழுதலாமா? என அவளுக்கு யோசனை பிறந்தது.
அந்த பூமி கரிசல் பூமி. வானம் பார்த்தபூமி. இங்கு விளைய வைக்க விவசாயிகள் படும் பாடு இவளை மிகவும் வாட்டும். இந்த பூமியில் பிறந்து விளையும் பயிர்களுக்காக வாழ்ந்து வரும் மக்களை இவளுக்கு மிகவும் பிடிக்கும். எனவே விவசாயிகளை பற்றித்தான் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என நினைத்தாள். ஆனால் விவசாயிகளை பற்றி ஏற்கனவே பலர் ஆய்வு செய்திருப்பார்கள். இதனால் வேறு ஏதாவது புதிதாக செய்யலாமே என ஆசை தோன்றியது.
அன்று கல்லூரி முடிந்தது. ஹாடலுக்கு சென்றால், சாதரணமாக அவளால் அன்று தூங்க முடியவில்லை. “என்ன செய்வது. எதை ஆய்வு செய்வது?”. சக மாணவிகளிடம் கேட்டாள்.
“நான் ஏதாவது ஒரு கோயிலை பற்றி எழுதப்போகிறேன். எப்படியும் அந்த கோயிலுக்கு தல புராணம் இருக்கும். அதுபோக அங்கே வருபவர்கள் போவோர்கள், பூசாரி தர்மகர்த்தா என பேசினால் நிச்சயம் நமக்கு நல்ல தகவல் கிடைக்கும். அதை வைத்து எழுதி கொடுத்து விட வேண்டியது தான்” என்றாள்.
மற்றொருத்தி, “யாராவது இதுபோன்ற கட்டுரை எழுதி தருவார்களா என பார்க்கவேண்டும். அவர்களுக்கு பணத்தை கொடுத்து விட வேண்டியது தான்” என அலட்சியமாக கூறினார்கள்.
ஆனால் ராணிக்கு அதில் எல்லாம் உடன்பாடு இல்லை. “எப்படியாவது. வித்தியாசமான ஒரு தலைப்பை எடுத்து அலைந்து திரிந்து செய்தி சேகரித்து நாம் அருமையான கட்டுரையை சமர்பிக்க வேண்டும். அதற்காக இந்த கல்லூரியிடம் நமக்கு நல்ல பெயரை வாங்க வேண்டும்” என்று நினைத்தாள்.
எதை தேர்ந்தெடுக்கலாம் என்ற கனவிலேயே அவள் தூங்கியும் போனாள்.
மறுநாள். விடிந்தது.
காலை சிற்றுண்டியை முடித்து விட்டு நூலகம் சென்றவள் கண்ணில் அந்த தினசரி நாளிதழ் கிடைத்தது. எப்போதுமே இவளுக்கு தினசரி நாளிதழ் பார்ப்பது வழக்கம். அதில் ஏதாவது செய்தி வித்தியாசமாக இருக்கிறதா என பார்ப்பது தினசரி வேலையாகும். அதோடு மட்டுமல்லாமல் நூலகத்தில் இருந்து நூல் வாங்கி படிப்பதிலும் ஆர்வம் உண்டு.
ஒரு நூலகம் ஆயிரம் சிறைக்கைதிகளை திருத்தி விடும் என்பார்கள். பல அறிஞர்கள் உருவாக நூலகம்தான் முக்கிய பங்கு வகிக்கும் என்பார்கள். எனவே சிறு வயதில் இருந்தே நூலகத்திற்கு செல்வதை ராணி வழக்கமாக கொண்டிருந்தாள்.
அன்று தினசரியை பார்த்துக்கொண்டிருந்தவளுக்கு வித்தியாசமான தகவல் தென்பட்டது. அந்த தகவலை புரட்டி புரட்டி பார்த்தாள்.
ஆம். தூத்துக்குடி மாவட்டத்தில் 75 ஆம் ஆண்டு சுதந்திரதினவிழா கொண்டாடப்போகிறார்களாம். அதற்காக தியாகிகளை பட்டியலிடப் போகிறார்களாம்.
அந்த செய்தியை ஆர்வமாக பார்த்தப்படியே மேலும் தொடர்ந்து படித்தாள்.
ஆசாதிகா அம்ரித் மஹோத்சவ் (கிக்ஷ்ணீபீவீ ளீணீ கினீக்ஷீவீt விணீலீஷீtsணீஸ்) முயற்சியின் ஒரு பகுதியாக இதற்காக ஒரு டிஜிட்டல் களஞ்சியம் உருவாக்க போகிறார்களாம். தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பாக சுதந்திரப் போராட்டத்திற்காகவும், அதில் ஒரு அங்கமாக உருவான முக்கிய நிகழ்வுகளுக்காகவும், உயிர்த் தியாகம் செய்த சுதந்திரப் போராட்ட வீரர்களைக் கண்டறிந்து ஆவணப் படுத்த முயற்சி செய்கிறார்களாம்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சில முக்கிய வரலாற்றாசிரியர்களைத் தேடி, இரண்டு முக்கியமான பங்களிப்பாளர்களை அடையாளம் கண்டார்களாம். அவர்கள் வழங்கிய கதைகள் மற்றும் ஆதாரங்களைக்கேட்டு, 26 முக்கிய நபர்களின் பட்டியலையும் சில நிகழ்வுகளைப் பற்றிய விரிவான விளக்கங்கள் பெற்றுக்கொண்டார்களாம்.
தொடர்புடைய இடங்கள் மற்றும் தொல்பொருட்களைப் புகைப்படம் எடுக்கத் தொடங்கினார்களாம்.
இதற்காக, புகைப்படக் கலைஞர்களுடன், அரசு குழு வினரும் ஈடுபட்டார்களாம். அசோகா பல்கலைக் கழகத்தில் உள்ள தன்னார்வலர்களின் உதவியுடன் இந்த விவரங்களை தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் பதிவு செய்தார்களாம்.
இந்த செய்தி அப்படியே ராணியின் கண் முன்னால் வந்து நின்றது. தியாகிகள் நமது மாவட்டத்தில் எத்தனை பேர் இருப்பார்கள். நாம் ஏன் ஆய்வுக்காக இந்த தலைப்பை எடுத்துக் கொள்ளக்கூடாது என்று நினைத்தாள்.
நிச்சயம் நாம் தியாகிகளை பற்றித்தான் தகவல் சேகரிக்க வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்தில் வ.உ.சி, பாரதியார், வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற வெளியே தெரிந்த தியாகிகள் நிறைய பேர் உள்ளனர். அவர்களை பற்றி திரட்டி நாம் ஏன் கட்டுரை சமர்பிக்க கூடாது என்று நினைத்தாள்.
அதை நடைமுறைப்படுத்தவும் திட்டமிட்டாள்.
அன்று கல்லூரி வகுப்பில் மீண்டும் பேராசிரியர் வந்தார். “என்ன தலைப்பு சரி செய்து விட்டீர்களா?” என்று கேட்டார்.
ஒரு மாணவி எழுந்து, “நேற்று தானே கூறியிருக்கிறார்கள். ஒரு வாரம் அவகாசம் கொடுங்கள். தலைப்பு சொல்கிறேன்” என்றாள். அதையும் அனைத்து மாணவர்களும் அமோதித்தார்கள்.
ஆனால் ராணி எழுந்தாள், “மேம் தூத்துக்குடி மாவட்ட சுதந்திரபோராட்ட தியாகிகள்” என்றாள்.
பேராசிரியர் அவள் முகத்தினை பார்த்தார்.
“எத்தனை தியாகிகள் இருக்கிறார்கள்” என்று கேட்டார்.
“மேம் வீரபாண்டிய கட்டபொம்மன், பாரதியார், வ.உ.சி, வாஞ்சி நாதன்” என்றாள்
பேராசிரியருக்கு சிரிப்பு வந்தது.
“நமது மாவட்டத்தில் சுதந்திரபோரட்ட தியாகிகளுக்கு பஞ்சமே இல்லை. வருடந்தோறும் யாராவது இந்த தலைப்பினை எடுத்து எழுதியிருப்பார்கள். அப்படியே யாராவது எழுதி இருந்தால் அதை பார்த்து அப்படியே காப்பி பேஸ்ட் பண்ணி கொடுத்துறலாம். அப்படி எதுவும் திட்டம் போட்டு இருக்கீயோ”.
இப்போது எல்லா மாணவிகளும் சிரித்தார்கள்.
ராணிக்கு இப்போது முகம் சிவந்தது. “அறிந்த தியாகிகள் மட்டும் தான் பண்ண இயலுமா? ஏன் அறியாத தியாகிகள் 27 பேரை மாவட்ட நிர்வாகம் கண்டு பிடித்து இருக்கிறதே. அவர்களை நாம் ஏன் பட்டியலிடக்கூடாது”. மனதுக்குள் ஆத்திரம் வந்தது.
“ஏன் மேம். நீங்க சொல்றது எல்லாம் ஊர் அறிந்த தியாகிகள். நான் அறியப்படாத தியாகிகள் பற்றி ஆய்வு பண்ணி எழுதப்போகிறேன். அது கூடாதா மேம்”.
பேராசிரியர் வாயடைத்து நின்றார். ராணியிடம் ஏதோ புதுத்திட்டம் இருக்கிறது. ஆகவே தான் ஆணித்தரமாக பேசுகிறாள்.
மற்ற மாணவர்களும் சிரிப்பதை நிறுத்திக்கொண்டார்கள்.
ராணி தொடர்ந்தாள், “மேம் ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு தியாகிகள் இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் நம் கண்ணுக்கு தெரிவதில்லை. அவர்களை தேடிக்கண்டு பிடித்து எழுதப்போகிறேன்” என்றாள்.
இப்போது பேராசிரியருக்கு சந்தோசமாக இருந்தது. ஆனாலும் இது முடியுற காரியமா? தியாகிகளை தேடி அதுவும் அறியப்படாத தியாகிகளை தேடி அலைய முடியுமா?
பேராசிரியர் கேட்டும் விட்டார், “ராணி உனக்கு இது தேவையில்லை. ஏதாவது முடியுற வேலையை செய்”. என்றார்.
“இல்லைமேம் எனக்கு முடியும். நான் தூத்துக்குடி மாவட்டத்தில அறியப்படாத தியாகிகள் குறித்துதான் பண்ணப்போறேன்” என்று கூறினாள்.
அவளுடைய உறுதி அனைவரையும் திகைக்க வைத்தது.
“முடியுமா? தனியொரு ஆளாக அறியப்படாத தியாகிகளை கண்டறிய முடியுமா? அதுவும் ஒரு மாணவியால் முடியுமா?”
பல கேள்விகள் பேராசிரியரை சுற்றி சுற்றி வந்தது. ஆனாலும் ராணியின் மனம் தளராதபேச்சு பேராசிரியருக்கு சந்தோசத்தினை வரவழைத்தது.
அன்று கல்லூரி முடிந்தது. ஹாஸ்டலுக்கு வந்தாள் ராணி. அவளுடைய கல்லூரி தோழி செல்வி கேட்டாள்.
“ஏன் ராணி இப்படி அவசரப்பட்டே. கொஞ்சம் அமைதியா இருந்து இருக்கலாமே. மெதுவா யோசனை பண்ணி சொல்லியிருக்கலாமே”.
“ஏன் முடியாதா?”
“இல்லை ஆண் பிள்ளை என்றால் மோட்டார் பைக் இருக்கும், அவன் எல்லா ஊருக்கும் போயிட்டு வரலாம். ராத்திரி பகல் அலையலாம். நாமா அப்படியா? தூத்துக்குடி மாவட்டம் விளாத்தி குளத்தில இருந்து தெற்க திருச்செந்தூர் கடல் வரைக்கு கிடக்கு நாம அலையமுடியுமா?”
ராணிக்கு யோசனையாகவே இருந்தது. ஆனாலும் உறுதியான அவளுடைய எண்ணத்தில் இருந்து மாற்றி கொள்ள மணம் இல்லை.
“ஏன் பெண் என்றால் எதுவும் செய்ய இயலாதா? முடியாதா? ஏன் சாதித்த பெண்கள் எல்லாம் சோதனை இல்லாமல் தான் சாதித்து இருப்பார்களா?” பல எண்ணங்கள் இவள் மனதில் தோன்றியது.
ஆனாலும் உறுதியாக இருந்தாள் நிச்சயம் அறியப்படாத தியாகிகளை படம் பிடித்து வெளிச்சத்துக்கு கொண்டு வரவேண்டும்.
காலங்கள் கடந்தது.
இதைப்பற்றி 6 மாதங்கள் கல்லூரியே மறந்து இருந்தது. அதன் பிறகு இறுதி கட்ட வேலையாக இந்த கட்டுரை தலைப்பை உடனே சமர்பிக்க வேண்டும் என்று நிர்வாகம் கட்டளையிட்டது.
ராணி நூலகத்தில் பழைய நூல்களையெல்லாம் தேட ஆரம்பித்தாள்.
அதோடு மட்டுமல்லாமல் தினசரி நாளிதழில் தியாகிகள் பற்றிய கட்டுரை எதுவும் வெளியே வருகிறதா? எனவும் தேடிப்பார்த்தாள்.
இது சம்பந்தமாக எந்த குறிப்பு வந்தாலும் அதையெல்லாம் சேகரித்து வைத்துக்கொண்டாள்.
ஆனால் தியாகிகள் பற்றி பெரிதாக தெரியவில்லை. நெட்டில் போய் தேடி தேடிப் பார்த்தாள். அங்கேயும் எதுவும் கிடைக்கவில்லை. “என்ன செய்யலாம்” யோசித்து பார்த்தாள்.
கலெக்டர் ஆபிஸ் போனால் அவர்கள் தேடிக்கண்டு பிடித்திருக்கும் தியாகிகள் குறித்து தகவல் சேகரிக்கலாம். ஆனால் அதை யார் சேகரித்து இருக்கிறார்கள். யாரை போய் பார்க்க வேண்டும் என பல யோசனை இருந்தது. அதற்கு நேரம் இருக்குமா? எனவே தோன்றியது.
மறுநாள்
கல்லூரிக்கு சென்றார்கள்.
அன்று பேராசிரியர் “தலைப்பை தரவேண்டும்” என்று கேட்டார்.
ஒவ்வொரு மாணவ மாணவிகளும் ஒவ்வொரு தலைப்பையும் சொன்னார்கள்.
எல்லோருமே ஆங்காங்கே அவர்கள் மிகவும் சுலபமாக போய் வரக்கூடிய பெரிய கோயில்களை பற்றியே தலைப்பு எடுத்து இருந்தார்கள்.
கிட்டத்தட்ட இவளை தவிர அனைவரும் தலைப்பு கொடுத்து விட்டார்கள்.
ராணி முறை வந்தது.
“என்ன ராணி தலைப்பு என்ன எடுத்து இருக்கிறாய்?” என்று பேராசிரியர் கேட்டார்.
மீண்டும் சொன்னாள், “தூத்துக்குடிமாவட்டத்தில் அறியப்படாத தியாகிகள்” என்றாள்.
சிரித்தார் பேராசிரியர்.
“ஓகே. நிறைய அலையணும். உன் இஷ்டம்” என்றார்.
“சரி மேம். நான் சேகரித்து விடுவேன்” என்றாள்.
அவள் மனதில் வைராக்கியம் இருந்தது. ஒரு பெண்ணாக நான் சாதிப்பேன் என மனதில் உறுதி எடுத்துக்கொண்டாள்.
முடியுமா? ராணி சாதிக்க முடியுமா?
தூத்துக்குடி மாவட்டத்தில் அறியப்படாத தியாகிகள். வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. பாரதியார் போன்றோர்கள் மிக பிரபலம். இப்படி இருக்கும் போது அறியப்படாத தியாகிகளை கண்டு பிடிக்க முடியுமா? அவர்களை எங்கிருந்து தேடி கண்டு பிடிப்பாள்.
ஆனால் பிடிவாதமாக இருந்தாள் ராணி.
“நிச்சயம் முடியும்” என ஆணித்தரமாக இருந்தாள்.
இதற்காக அவள் பல கஷ்டங்களை அனுபவிக்கப் போகிறாள் என்பது அப்போது யாருக்கும் தெரியவில்லை.
(அறியப்படாத தியாகிகளை தேடுவோம்)