செய்துங்கநல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சித்த மருத்துவ விழிப்புணர்வு முகாம் நடந்தது.
இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை சார்பில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் ராஜசெல்வி வழிகாட்டுதலின்படி தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே செய்துங்கநல்லூரில் உள்ள கருங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கொரோனா தடுப்பு மற்றும் சித்த மருத்துவ விழிப்புணர்வு முகாம் நடந்தது.
இந்த நிகழ்ச்சியை கருங்குளம் ஊராட்சி ஒன்றிய தலைவர் கோமதி ராஜேந்திரன் தலைமை வகித்து முகாமை தொடங்கி வைத்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்வி, பாக்கிய லீலா ஆகியோர் முகாமில் கலந்து கொண்டனர். நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் அமுக்ரா மாத்திரை மற்றும் கபசுர குடிநீர் ஆகிய சித்த மருந்துகள் முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் சித்த மருத்துவர்கள் ரதி செல்வம், முருகப் பொற்செல்வி, மருந்தாளுனர் கமலவல்லி ஆகியோர் மருத்துவ ஆலோசனைகளை வழங்கினர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கருங்குளம் சித்த மருத்துவ பிரிவு மற்றும் கருங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலக ஊழியர்கள் செய்திருந்தனர்.


