தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் மீன்வளர்ப்பில் நீர்த்தர மேலாண்மைக்கான புதிய உத்திகள் பற்றிய நாடளாவிய கருத்துப்பட்டறை நடைபெற்றது.
தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் நிறுவன தினத்தை முன்னிட்டு இன்று தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நாடளாவிய கருத்துப்பட்டறை நடைபெற்றது. ஆண்டுதோறும் நடைபெறும் “பெர்ல் அக்வா” என்பது தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதன்மை திட்டமாகும்.
இந்த ஆண்டிற்கான கருத்துப்பட்டறையின் கருப்பொருள் “மீன்வளர்ப்பில் நீர்த்தர மேலாண்மைக்கான புதிய உத்திகள்” ஆகும். பாரம்பரிய தீபம் ஏற்றி விழா இனிதே துவங்கியது. உதவிப் பேராசிரியரும் அமைப்புச் செயலாளருமான து. மணிமேகலை வரவேற்புரை வழங்கினார். இந்நிகழச்சியின் போது பெர்ல் அக்வா 2025-க்கான கருத்தரங்கு கட்டுரை தொகுப்பு மலர் வெளியிடப்பட்டது.
சென்னை ஷெங்லாங் பயோடெக் மற்றும் பான் இந்தியா தொழில்நுட்ப சேவைத் தலைவர் அ. குமரேசன் சிறப்புரை வழங்கினார். அவர் தனது உரையில், முதுகலை மற்றும் பட்டப்படிப்பை பயிலும் மாணவ, மாணவிகள் தங்களது ஆராய்ச்சிக்கென புதிய ஆராய்ச்சித் தலைப்புகளைத் தேர்வு செய்யவும், உயர்ந்த நிலையை அடைய தங்களது விளக்கக் காட்சித் திறனை மேம்படுத்தவும் ஊக்கப்படுத்தினார்.
தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வர் ப. அகிலன் தனது தலைமை உரையில் இக்கல்லூரியின் முதன்மை திட்டமான “பெர்ல் அக்வாவின்” முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். மேலும், தனது உரையில் மீன்வளர்ப்பின் நீர்த்தர மேலாண்மையில் புதிய உத்திகளின் முக்கியத்துவத்தைப் பற்றி எடுத்துரைத்தார்.
சென்னை ஷெங்லாங் பயோடெக் மற்றும் பான் இந்தியா தொழில்நுட்ப சேவைத் தலைவர் அ. குமரேசன், இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் சென்னை மத்திய உவர்நீர் மீன் வளர்ப்பு நிறுவனத்தின் மூத்த விஞ்ஞானி த. சதீஷ்குமார், இறால் பண்ணையாளர் எஸ். பாலகிருஷ்ணன், இராமநாதபுரம், டாக்டர் எம்.ஜி.ஆர். மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் ஓய்வு பெற்ற பேராசிரியர் த. மணிகண்டவேலு முதலியோர் பேச்சாளர்களாகக் கலந்து கொண்டு இறால் வளர்ப்பில் நீர்த்தர மேலாண்மை, இறால் வளர்ப்பில் நோய் மேலாண்மை, அதன்; தடுப்பு முறைகள் மற்றும் நிலையான இறால் வளர்ப்பு மேலாண்மை என்ற தலைப்புகளில் உரை ஆற்றினார்கள்.
நீர்வளச் சூழலியல் மேலாண்மை துறையின் தலைவர் (பொ) து. மணிமேகலை, நிகழ்ச்சியின் அமைப்புச் செயலாளராக நிகழ்ச்சியை வழி நடத்தினார். உதவி பேராசிரியரும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளருமான அ. ஜூலியட் செல்வராணி நன்றியுரை வழங்கினார். இக்கருத்துப்பட்டறையில் மாணவ, மாணவியர் மீன் மற்றும் இறால் பண்ணையாளர்கள், தொழல்நுட்ப வல்லுநர்கள், கல்வித்துறையில் உள்ளோர் என 153 பேர் கலந்து கொண்டு பயன்பெற்றனர். இக்கருத்துப் பட்டறையில் கலந்துகொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டன.


