தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்குக் கடத்த முயன்ற ரூ.5 லட்சம் மதிப்பிலான சோப்புகளை க்யூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி திரேஸ்புரம் மீன்பிடி துறைமுகப் பகுதியில் இருந்து இலங்கைக்குச் சட்டவிரோதமாகப் பொருட்கள் கடத்தப்படுவதாக க்யூ பிரிவு போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து க்யூ பிரிவு ஆய்வாளர் விஜய அனிதா உத்தரவின் பேரில், உதவி ஆய்வாளர் ராமச்சந்திரன், சிறப்பு உதவி ஆய்வாளர் ராமர், தலைமை காவலர்கள் இருதய ராஜகுமார், இசக்கிமுத்து மற்றும் காவலர்கள் பழனி, பாலமுருகன், கபிரியேல் ஆகியோர் நேற்று இரவு திரேஸ்புரம் பகுதிகளில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
இரவு சுமார் 9:15 மணி அளவில், திரேஸ்புரம் மீன்பிடி துறைமுகத்தின் வடக்கு பகுதியில் உள்ள வாடையில் ஒரு ஃபைபர் படகில் பொருட்களை ஏற்றிக் கொண்டிருந்ததைக் கண்ட போலீசார் அங்கு விரைந்தனர். போலீசாரைக் கண்டதும் கடத்தல்காரர்கள் அனைவரும் இருட்டில் தப்பி ஓடிவிட்டனர்.
அங்கு சோதனையிட்டதில் பதிவு எண் இல்லாத, இரண்டு என்ஜின்கள் பொருத்தப்பட்ட அதிவேக பைபர் படகு பறிமுதல் செய்யப்பட்டது. படகில் இலங்கைக்குக் கடத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த 5 அட்டைப் பெட்டிகளில் இருந்த 1200 பப்பாளி வாசனை சோப்புகள் (Nature Power Papaya Soap) கைப்பற்றப்பட்டன.
கைப்பற்றப்பட்ட சோப்புகளின் சர்வதேச சந்தை மதிப்பு சுமார் 5 லட்சம் ரூபாய் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தப்பி ஓடிய கடத்தல்காரர்களைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் படகு குறித்து மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது.


