சாகும் அமீதுபாட்ஷா கந்தூரி விழாவை முன்னிட்டு ஊர்வலம் வருவார்கள். இந்த ஊர்வலத்தினைக் காண பெருங்கூட்டம் காத்து கிடக்கும். இந்த கூட்டத்தில் திருமணம் வேண்டி, பிள்ளைபேறு வேண்டி காத்து கிடப்பார்கள். அந்த சமயத்தில் மக்கள் ஊர்வலத்தினைப் பார்த்தலே போதும், மறுவருடம் நிறைவேறி விடுமாம். இதற்காக ஒரு கூட்டம் காத்து கிடக்கிறது.
அதற்கு அடுத்த படியாக இங்கு கொண்டு வரும் பானையில் உள்ள பால் சோறு, இந்த சோறு வாங்கி சாப்பிட்டால் நினைத்தது எல்லாம் நடக்குமாம். ஆகவே அந்த பானைசோறு தர்க்கா உள்ளே வரும் முன்பே கல்லை வைத்து உடைத்து உணவை உண்டு விடுவார்கள். இந்த உணவை உடைத்து உண்பதற்கு ஒரு கூட்டம் காத்து கிடக்கிறது.
மொத்தத்தில் இந்த தர்காவில் மக்கள் கூட்டம் கந்தூரி திருவிழாவின் போது அலை மோதிக்கொண்டே இருக்கும்.
முகைதீன் பசீர் அப்பா தர்க்கா. இவர் மேலப்பாளையத்தினை சேர்ந்தவர். இவர் இயற்பெயர் முகம்மது முகைதீன். ஒரு 7 வயது இருக்கும் போது அம்மை நோயினால் இவருக்கு இரண்டு கண்ணும் தெரியாமல் போய் விட்டது. எனவே அவர் என்ன செய்ய என்று தெரியாமல் அல்லாவை வேண்டி நின்றார். அதன் பின் கடையநல்லூர் இமாம் இவரது குருநாதர். அவர் பெயர் கோஜ் முகம்மது. அவர் களைத் தன் குருவாக கொண்டு அவரிடம் தனக்கு பாடஞ்சொல்லி தரக்கேட்டார். அவரும் வேண்டிய உதவிகள் செய்தார். அவரது முதுகிலேயே 6666 திருவசனங்களை எழுதி பாடம் கற்று தந்தார். எழுதிய திருவசனங்களை மனதில் வைத்து அவர் பாடம் கற்றுக்கொண்டார். மிக பெரிய புலவராக மாறிவிட்டார். தமிழ்ப் புலமை மிக்கவரான இவர் சிற்றிலக்கியம் உருவாக்குவதில் வல்லவரானார். ஒரு காலகட்டத்தில் மிகப்பெரிய கல்வியாளராக மாறி விட்டார். அதன்பின் இங்கேயே அடக்கமாகி விட்டார் என்கிறார் மேலப்பாளையம் எழுத்தாளர் த.மு.ச காஜா மொய்தீன் என்பவர்.
இவரைப் பற்றி மேலப்பாளையம் கலிப்பா முகைதீன் வாப்பா கூறும் போது, “தனது குருநாதர் வெளியே சென்ற போது இவர் மட்டும் தனியாக வீட்டில் இருந்தார். அப்போது ஒரு அதிசயம் நடந்தது. அதாவது குருநாதர் வெளியே போய் விட்டு வந்த போது, அவர் யாரிடமோ பேசிக் கொண்டிருந்தார். யார் என்று கேட்ட போது, அவர் உங்களிடம்தான் பேசிக்கொண்டிருந்தேன். என்றார். நீங்கள் தான் உங்கள் உமிழ் நீரை என் நாக்கில் கொடுத்தீர்கள். அது சுவையாக இருந்தது என்றார்”. குருநாதர் ஞானமாமேதை மகான் மாப்பிள்ளை லெப்பை ஆலிமிடம் சென்று இதுப்பற்றி கேட்டார். அதற்கு அவர் சொன்ன பதில், நபிகள் நாயகத்திற்கு ஒப்பான எவரோ உன் சிஷ்யருக்கு உபதேசம் செய்துள்ளார். அவன் பிற்காலத்தில் பெரிய மகானாகி விடுவான். என்று கூறினார். உண்மைதான் முகம்மது முகைதீன் பிற்காலத்தில் பஷீர் அப்பா ஒலியுல்லாவாக மாறி விட்டார். என்று கூறினார்.
மேலப்பாளையத்தில் மேலும் புகழ் வாய்ந்த ஒரு தர்க்கா வெள்ளை கலிபா தர்க்கா. இந்த தர்க்காவின் இசையும் உண்டு. அதே வேளையில் அதிசயமான நிகழ்ச்சிகளும் உண்டு. இந்த தர்க்காவில் பலர் அடக்கமாகி உள்ளார்கள். தற்போது இந்த தர்காவை செய்யது அலி ரிபாய் என்பவர் நிர்வாகித்து வருகிறார். இவர் பெரிய கவிஞர். ஆனால் படிக்காத கவிஞர். அவர் என்னிடம் பேசும் போது, “நான் பிறவியிலேயே வெள்ளை கலிபா அவர்களின் புண்ணியத்தில் கவிஞன் ஆகி விட்டேன்”. என்றார். இந்த தர்க்காவில் மழை பெய்யவேண்டும் என்றால் மழை பைத் பாடினால் மழை வந்து விடும் என்கிறார். அதே நேரம் மழை அதிகமாக பெய்கிறது. தங்கள் வீட்டில் நடக்கும் நிகழ்ச்சிக்கு அது கஷ்டமாக இருக்கும் என்றால் தீப்பெட்டிவாங்கி இந்த தர்க்காவில் வைத்தால் போதும், மழை நின்று விடும் என்கிறார்.
அது உண்மை என்பது போல பலதீப்பெட்டிகள் தர்காவில் இருந்ததை எங்களிடம் காட்டினார். இந்த தர்க்காவில் மிக அதிகமான பழமையான இசைக்கருவிகள் உள்ளது. இந்த இசை கருவிகளை எல்லாம் தர்க்காவில் நடைபெறும் கந்தூரி விழாவின் போது பயன்படுத்துவார்களாம். இவரது பாட்டனார். ஒரு வாள் வைத் திருந்தார். அந்த வாளை வைத்து ஒரு ஆளை மூன்று துண்டாக வெட்டி, அவரை பின் ஒட்ட வைத்து விடுவாராம். இதை அப்போதைய மாவட்ட ஆட்சி தலைவர் முன்னாலேயே நடத்தி காட்டியுள்ளாராம். தற்போது நாங்கள் அதை யெல்லாம் செய்யவில்லை ஆனால் அவர் பயன்படுத்திய வாளை பத்திரமாக வைத்துள்ளேன். என்று என்னிடம் காட்டினார்.
மேலும் கந்தூரி விழாவின் போது தனது உடலையே கிழித்து அதில் வாளை நிறுத்துவது. உடலில் வாளை வைத்துக்கொண்டு முதுகில் மற்றொருவரை ஏறச்சொல்வது. என்று பல தத்துருபமான, அதே வேளையில் உடலை வருத்தும் வேலைகளையும் செய்து காட் டினார்கள். இந்த 21 &ஆம் நூற்றாண்டில் இப்படியும் நடக்குமா? என மூக்குமேல் விரலை வைக்கும் அளவுக்கு அங்கே அற்புதங்கள் நிகழ்ந்து கொண்டிருந்தது. அதை நானும் பார்த்து அதிசயத்து போனேன்.
ஒரு ஆணியும் அதை சுற்றி ஒரு குண்டு போல வைத்து, அதில் சிறு சிறு சங்கிலி கட்டி தொங்க விட்டிருந்தார்கள். இதை ஒரு மனிதன் உச்சந்தலையில் ஓங்கி செருகி விடுவார்களாம். இதில் ரத்தம் வராது. காயம் தெரியாது. என்றார்கள். ஆச்சரியமாக இருந்தது. பில்லி சூனியம் நீங்க, பேய் பிடித்தவர்கள் குணம் பெற இதை பயன்படுத்துகிறார்கள். இதன் பெயர் “தபூஸ்” என்பதாகும்.
இதுபோல மேலப்பாளையத்தில் தர்க்காவில் நடக்கும் ஆச்சரியமான சம்பவங்கள் பல பல. ஆனாலும் இங்கு தோல் சம்பந்தபட்ட தொழில்கள் நடக்கிறது. பீடி கம்பெனிகள் மிக அதிகமாக இருக்கிறது. மேலும் மும்பைக்கு தோல் தொழில் செய்யவே.. இங்கிருந்துதான் ஆள்கள் சென்றுள்ளனர். குறிப்பாக மும்பை தாராவியில் முதல் தமிழர்களின் குடியேற்றம், மேலப்பாளையத்தில் இருந்து தான் துவங்கியுள்ளது.
இதுபோன்று வியாபராத்தில் மேலப்பாளையம் சந்தை மிகவும் விசேஷமாகும்-. சுத்து பட்டியில் இந்த சந்தை மிகவும்பெரியது. செவ்வாய்கிழமை தோறும் நடக்கும் இந்தசந்தையில் முன்னொரு காலத்தில் லட்சகணக்கில் மக்கள் கூடியுள்ளார்கள். தற்போதும் இங்கு கூடும் மக்கள் கூட்டத்துக்கு குறைவில்லை.
ஆனால் சுகாதரம் இவ்வூரில் மோசமாகஉள்ளது. இந்த ஊரின் நடுவில் ஒ-டும் பாளையங்கால்வாயில் சாக்கடை அதிகமாக கலக்கிறது. இந்தசாக்கடை கலக்குவதை தடுக்க மாவட்ட ஆட்சித்தலைவர் மரு. சுகுமார் அவர்கள் மூலமாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்காக கடந்த 9.05.2025 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.சுகுமார் தலைமையில் திருநெல்வேலி கமிஷனர் சுகபுத்திரா ஆகியோர் கொண்ட குழுவினர் வித்தியாசமான பணி ஒன்றை பாளையங்கால்வாயில் செய்தோம்.


