செய்துங்கநல்லூர் பதஞ்சலி வியாக்கிரபாதீஸ்வரர் கோவிலில் ஆரூத்ரா தரிசன திருவிழா 2 ம் நாளை முன்னிட்டு நடராஜ பெருமானுக்கு 1008 சங்காபிசேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது.
தூத்துக்குடி மாவட்டத்தில் பழமையான சிவஸ்தலங்களில் ஒன்று செய்துங்கநல்லூர் பகுதியில் அமைந்துள்ள பதஞ்சலி வியாக்ரபாதீஸ்வரர் திருக்கோவில். இந்த கோவிலில் ஆரூத்ரா தரிசன திருவிழா நேற்றைய தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
11 நாட்கள் திருவிழாவில் 10 நாட்கள் கோவிலில் அமைக்கப்பட்டுள்ள யாக சாலையில் சிறப்பு ஹோமம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. 2 ம் நாளான இன்று காலை கோவில் நடை திறக்கப்பட்டு கோவில் வளாகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த 1008 வலம்புரி சங்குகளுக்கு சிறப்பு பூஜைகளும் அதனை தொடர்ந்து யாகசாலை பூஜையும் நடந்தது. பின்னர் கோவில் அபிசேக மண்டபத்தில் விநாயகர், சுப்பிரமணியர், சுவாமி நடராஜர் சிவகாமி அம்பாள், காரைக்கால் அம்மையார், மாணிக்கவாசகர் மற்றும் சண்டிகேஸ்வரருக்கு சிறப்பு அபிசேகமும் அதனை தொடர்ந்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட 1008 சங்குகள் கொண்டு சிறப்பு அபிசேகமும் நடந்தது.
பின்னர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய நடராஜ பெருமான் உள்ளிட்ட சுவாமிகளுக்கு திருநடன மஹா தீபாரதனையும் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


