தூத்துக்குடி மாநகராட்சி மயானத்தில் குளம் போல் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் கடந்த 23ஆம் தேதி பெய்த கன மழையின் காரணமாக நகரின் பல்வேறு இடங்களில் வெள்ள நீர் தேங்கியது. பல இடங்களில் வெள்ள நீர் வடிந்துள்ளது. ஆனால், மழை விட்டு 10 தினங்கள் ஆகியும் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள மாநகராட்சி மயானத்தில் தேங்கிய வெள்ளநீர், வடியாமல் குளம் போல் தேங்கியுள்ளது.
இதனால் உடல்களை புதைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி மாநகர் பகுதியில் உயிரிழந்தவர்களின் பெரும்பாலான உடல்கள் இங்குதான் புதைக்கவும், தகனமும் செய்யப்படும். வெள்ளநீர் சற்றும் வடியாததால் உயிரிழந்தவர்களின் உடல்களை புதைக்க முடியாமல் எரிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். வெள்ள நீரை வெளியேற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


