தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து வீ த லீடர்ஸ் அமைப்பைச் சேர்ந்த காசிலிங்கம் திடீர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் விவிடி சாலை கான்கிரீட் சாலையாக மாற்றப்பட்டது. இந்தச் சாலை தரமாக அமைக்கப்படாமல், மழைநீர் கால்வாய் இணைப்புகள் திறந்த நிலையில் உள்ளதால் பல்வேறு விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன. மேலும், கான்கிரீட் சாலையின் நடுப்பகுதியில் உள்ள இணைப்புகள் மேடு பள்ளமாக உள்ளதால் சாலையில் செல்லும் வாகனங்கள் நிலை தடுமாறி விபத்தில் சிக்குகின்றன.
மேலும் முக்கிய சந்திப்பு பகுதிகளில் வேகத்தடை இல்லாத நிலையில் அடிக்கடி வாகன விபத்துக்கள் ஏற்படுகிறது. இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகத்திடம் வீ த லீடர்ஸ் அமைப்பைச் சேர்ந்த காசிலிங்கம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டி இன்று தனி ஒருவனாக கவன ஈர்ப்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்.
அப்போது அவர் கூறுகையில் “தூத்துக்குடி மாநகராட்சியில் மத்திய அரசின் நிதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளை மாநகராட்சி நிர்வாகம் தரமின்றி அமைத்துள்ளதாகவும், பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு வருகிறது என்றார்.மேலும் மாநகராட்சியைக் கண்டித்து கோஷங்களை எழுப்பி துண்டு பிரசுரங்களை வழங்கினார்.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த மத்தியபாகம் சப் இன்ஸ்பெக்டர் முத்துமாலை மற்றும் போலீசார் அவரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். திடீர் போராட்டம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.


