தருவைக்குளத்தில் மக்களின் நோய் நொடிகள் மற்றும் துன்பங்கள் நீங்க இறைவேண்டல் செய்யும் பொருட்டு, புனித செபஸ்தியார் திருவுருவம் தாங்கிய சப்பரப் பவனி நடைபெற்றது.
தூத்துக்குடி அருகே உள்ள தருவைக்குளம் பகுதியில் நோய் நொடிகளிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் பொருட்டு இன்று காலை 7 மணி முதல் ஊர் முழுவதும் உள்ள மக்களை நேரில் சந்தித்து ஆசி வழங்கும் வகையில், புனித செபஸ்தியாரின் திருவுருவம் தாங்கிய சப்பரம் தருவைக்குளத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டின் முன்பாகவும் கொண்டு செல்லப்பட்டது.
பங்குத் தந்தை மணி அந்தோணி மற்றும் பிரான்சிஸ் பவுல் ஆகியோர் இணைந்து, ஊர் மக்களுக்கு வழங்கப்படும் ‘நோய் தீர்க்கும் கஞ்சி’யினை ஆசீர்வதித்துத் தொடங்கி வைத்தனர். சப்பரப் பவனியில் திரளான பங்கு மக்கள் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்தனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கட்டளைக்காரர்கள் மற்றும் மீனவ சங்கங்கள் இணைந்து செய்திருந்தன.


