முன்கதை சுருக்கம்
ராஜதுரையின் கிராமத்தில் எதிரிகள் தீ வைத்தனர். அடிக்கடி தீ வைக்கிறார்கள் இனிமேல் ஓலை குடிசை கட்டக்கூடாது என ராஜதுரையின் ஊர் மக்கள் பிடிவாதமாக இருக்கிறார்கள். இதனால் சொந்தமாக செங்கல் சூளை உருவாக்கும் முதலாளியை ஊருக்கு கூட்டிக்கொண்டு வருகிறார்கள். அனைவருக்கும் ஓடு வீடு கட்டிகொடுக்கும் முயற்சியில் ஈடுபடுகிறான் ராஜதுரை. அவனை மற்ற சமூகத்தினர் பொறாமையில் கொலை பலியில் சிக்க வைத்து விடுகிறார்கள். இதனால் தாமிரபரணி ஆற்றங்கரையில் இருந்து சிற்றாற்றங்கரைக்கு ஓடினான் ராஜத்துரை. அங்கே உள்ள அரண்மனையில் ராஜதுரையை வேலைக்கு சேர்த்து விட்டாள் அவள் அக்காள் கற்பகம். ஆனால் கற்பகம் மீது காம மோகம் கொண்ட தலைமை காவலன் அவள் கற்பை சூறையாட நாள் குறித்தான். அதை கேள்வி பட்ட ராஜத்துரை கொதித்தெழுந்தான். அந்த காவல்காரை தீர்த்துக்கட்ட முடிவுசெய்தான்.
இனி.
59. இன்னைக்கு மவனே உனக்கு பாயசம் தான்.
“தம்பி நான் சொன்னா கேட்க மாட்டே”
அழுதாள் கற்பகம். ராஜத்துரை பிரமை பிடித்தது போலவே நின்றான். “அக்காளை ஒருத்தன் மானபங்கம் படுத்தப்போகிறேன்னு நம்ம கண் முன்னாலே சொல்கிறான். அவனை சும்மா விட்டா, இந்த உலகத்திலே நாம வாழுறதுல என்ன அர்த்தம்”. அவன் மனது சொன்னது.
“ஏய். எனக்கு உறவுன்னு ரொம்ப நாளு கழிச்சி நீ தான் வந்து இருக்க. வேலைக்கு சேந்து முத நாளே குழப்பம் ஆகி இருக்கு. யய்யா நீ எங்கயோவது ஓடி போயிரு. என் வாழ்க்கையை நான் பாத்துக்கிறேன்”.
எழுந்த கற்பகம் தம்பி மார்பில் சாய்ந்து “ஓ” என கதறி அழுதாள்.
அக்காள் அழுது தீர்க்கட்டும் என அமைதியாக இருந்தான் ராஜத்துரை.
“ஏலே தம்பி. நான் போறேன் என்னை விடு” என்றாள்.
அமைதியாக இருந்தான் ராஜத்துரை. அக்காள் முகத்தினை தீர்க்கமாக பார்த்தான்.
“இல்லை அக்கா. அவனை நம்ம புத்தி மூலம் ஜெயிக்கணும். இந்த மாரி ஆளுக உயிரோட இருக்க கூடாது. அது இந்த பூமிக்கும் பாரம். நம்மள மாரி பாவப்பட்ட ஜென்மங்களுக்கு எரிச்சல். அதனால இவனுவள சும்மா விடக்கூடாது”. தீர்க்கமாக சொன்னான்.
“அப்போ என்ன செய்யணுமுன்னு சொல்லுத”. கற்பகம் ஒரு முடிவுக்கு வந்தவளாய் கேட்டாள்.
“எத்தனை முறை அடங்கி அடங்கி போகும் இந்த ஜென்மம். இதுவும் ஆண்ட பரம்பரைத்தான். நாம உண்டு. நம்ம வேலை உண்டு என இருக்கிறதாலத்தான் இன்னைக்கு கண்டவனெல்லாம் குட்டுதான். பொறுத்து பொறுத்து பாத்தா ஜெயிக்க முடியாது. எதித்து பாக்கணும். முட்டி மோதனும். ஜெயிக்கனும். இல்லாட்டி உயிரை விடணும். ஆனா கண்டிப்பா நம்ம சுய மரியாதையை இழக்ககூடாது”.
ராஜத்துரை பேசியது கற்பகத்துக்கு புரிகிறதோ இல்லையோ. ஆனால் காவல்காரன் கிட்ட அடங்கி போகக்கூடாது என்பதில் ராஜத்துரையோடு சேர்ந்து இவளும் முடிவு செய்தாள். ஏன் பயப்பட வேண்டும். இந்த உடலில் இருக்கும் உயிர் ஒரு புல் தட்டினால் கூட போய் விடும். எப்போது போகிறது. எதற்கு போகிறது என யாருக்கும் தெரியாது. அப்படி இருக்கும் போது இந்த உயிர் வாழுணுமுன்னு நாம் ஏன் மானத்தை இழக்கணும். நாம் ஏன் பயப்படவேண்டும்.
உறுதியானாள் கற்பகம். “ஏலே தம்பி என்ன செய்யலாம்?”
“அவனை கொலை பண்ணிட வேண்டியது தான்”.
“என்ன சொல்ற?”
“ஆமாம் அக்கா . அவன் எச்சிகலை நாயி. என்ன பெரிய காவக்காரன். அவன் ஜோலியை முடிச்சிபுடுவோம்”.
கற்பகம் ராஜத்துரை போடும் திட்டத்துக்கு தலையசைக்க ஆரம்பித்தாள்.
“யக்கோ. நான் பின்னாலே வாறேன். நீ முன்னால போ. அவன் உன்கிட்ட தப்பா நடக்க வருவான். அதுக்குள்ள நான் அங்க வந்து பாளையறுவாளால அவன் தலையை சீவி புடுதேன். இன்னையோட நம்ம புள்ளைய யார் மேலேயாவது. எவனாவது கை வைக்க நினைச்சா, இதுதான் கதின்னு எல்லாரும் நினைக்கணும். ஆமா”.
“ம்”. விரக்தியாக சிரித்தாள். “அவனை கொல்லத்தான் செய்யணும். ஆனால் யாருக்கும் தெரியாம செய்யணும். புத்தியை தீட்டு. இந்த அருவா கிருவாலாம் வேண்டாம்”. கற்பகம் தீர்க்கமாக சொன்னாள்.
“எப்படி அக்கா?”.
“பேசமாக இந்த கள்ளு பயனியில அரளி விதையை அரைச்சி போட்டு அந்த நாசகாரபயலுக்கிட்ட கொடுத்துருவோமா?”
அவரசமாக மறுத்தான் ராஜத்துரை.
“வேண்டாமுக்கா. நம்ம பயனி பத்திரகாளி தாய் தந்த கற்பக தரு. நோய் தீர்க்கும் அரு மருந்து. எல்லாரும் நம்பி குடிக்கிற பானம். நம்ம மக்க மட்டுமே தயாரிச்சு கொடுக்கிற அற்புத உணவு. இந்த பதனீ எப்போதும் நோய்த்தான் தீக்கணுமே தவிர மனுசனை தீக்க கூடாது. நம்ம பதனீ பதனீதான் . அதுல சுண்ணாம்பை கலப்படம் செய்யலாமே தவிர, வேற எந்த பொருளையும் கலப்படம் செய்யக்கூடாது. குறிப்பா பின்னாடி கூடி விசம் வைக்கிற கும்பல் நாம இல்லை. என்னைக்குமே எத்தனை தலை முறையானாலும் நம்ம பதனீயை எல்லோரும் தைரியமா குடிக்கணும். நாமளே அதுல விஷம் கலந்து. அந்த பதனீக்கு ஒரு கெட்ட பெயரை ஏற்படுத்திவிடக்கூடாது”. அவன் கூறிய கருத்தை அமோதித்தாள் கற்பகம்.
“ஆமாம். இந்த எண்ணம் நம்ம மக்க மனசுலே வரக்கூடாது”.
“ஆனால் எப்படி இந்த முதலையிடம் இருந்து தப்பிக்க?”
கற்பகம் கண்களில் தாரை தாரையாக நீர் வடிஞ்சுது. “பத்திர காளி தாய் , அந்த காலத்தில் அசுரனை அழிச்சான்னு சொல்லுவாவுளே. இப்பவும் அசுரன் அங்க இங்க தோன்றிக்கிட்டுத்தானே இருக்கானுவ. அவனுவள எப்படி அழிக்க. அதுக்கும் ஒரு வழி சொல்லு தாயி”.
பத்திரகாளி அம்மனை நோக்கி வணங்கினாள்.
“யக்கா. நீ கவலைப்படாதே நாம எப்படியும் அவனை தீத்துக்கட்டுதோம். ஆனா யாருக்கும் சந்தேகம் வராம, அவன் ஜோலியை முடிக்கோம். நீ தைரியமா இரு. கொஞ்ச நேரம் என்னை யோசிக்க மட்டும் விடு”.
“சரி தம்பி”. கண்ணை துடைத்தாள் கற்பகம். பத்திரகாளியாய் அவளுக்கு ஆங்காரம் வந்தது. மனதுக்குள் இதுவரை வெறுப்பாய் இருந்தவளுக்கு அகங்காரம் வந்தது. உண்மைதான், “நம்ம கிட்ட சுரண்ட இழுக்கிறவனை, சும்மா விடக்கூ£து”.
கற்பகம் அருகில் சென்று பதனீர் அடுப்பை பற்ற வைத்தாள். அது கத கத வென்று எரிய ஆரம்பித்தது. ஏற்கனவே பதத்தில் இருந்து பதனீர் பொங்கியது. அதை அடக்க ஆமணக்குகொட்டையை அரைத்து வைத்திருந்தாள். அதை போட்ட வுடன் அப்படியே கொதிப்பு அடங்கியது.
ஆனால் இவள் மனது கொதிப்புத்தான் அடங்கவே இல்லை.
*****
பாளையங்கோட்டை ஹைகிரவுண்ட் மல்டி ஆஸ்பத்திரி.
அதற்குள் விடிந்து விட்டது.
அந்த மல்டி ஸ்பெஷல் ஆஸ்பத்திரி காலையிலேயே சுறுசுறுப்பானது.
அகஸ்தீஸ்வரன் சந்திரனை பார்த்து சொன்னார், “யப்பா இன்னைக்கு ராத்திரி வந்து கதை சொல்லுறேன். விடிஞ்சிட்டு நான் வீட்டுக்கு போயிட்டு வாறேன்” என எழுந்தார்.
இதுவரை வாத்தியார் சொன்ன தனது தாத்தா ராஜத்துரை வரலாறு இவனுக்கு பிரமிப்பு உட்டுவதாகவே இருந்தது. எவ்வளவு பெரிய பரம்பரையில் இருந்து நான் வந்து இருக்கிறேன். நான் எப்படி இந்த ஊரை விட்டு மும்பை போனேன். எனக்கு ஏன் என்னுடைய தாய் மண்ணில் இருக்க வாய்ப்பில்லை. இதற்கெல்லாம் விடையை அகஸ்தீஸ்வரன் வாத்தியார்தான் சொல்ல வேண்டும். நேற்று இரவு முழுவதும் கதை சொல்லிவிட்டார்.
சந்திரனும் கொட்ட கொட்ட முழித்து இருந்து கதையை கேட்டு விட்டான். ஆனாலும் முடியவில்லை. மூன்று தலை முறை வரலாறு அல்லவா? உடனே சொல்லி முடிக்க முடியுமா?.
சந்திரன் அகஸ்தீஸ்வரனிடம் அப்பாவியாக கேட்டான்.
“சரிய்யா. இன்னைக்கு ராத்திரி வருவீயளா?”
“நிச்சயம் வருவேன்”. அகஸ்தீஸ்வரன் புன்சிரிப்பு சிரித்தார்.
“இன்னைக்கு ராத்திரி எங்கள் தாத்தா ராஜத்துரை கதை முழுசும் சொல்லிருங்க”. சந்திரன் கண்களில் ஏக்கம் தெரிந்தது.
“கண்டிப்பா சொல்லுதேன். நீ போய் ரத்தினத்தை பாரு. நானும் அவன் கிட்ட சொல்லிட்டு போறேன். ராத்திரி உன் துணைக்கு வந்திருதேன். அப்படியே கதையும் சொல்லுதேன்”.
“சரி அய்யா”
இருவரும் வார்டு நோக்கி நடந்தார்கள்.
“நீங்கள் முன்னாள் போங்க அய்யா. நான் இப்போ ஓடி வாறேன்” என மாடியை விட்டு கீழே இறங்கி ஓடி வந்தான். மூன்று பேர் குடிக்கும் அளவுக்கு டீயை வாங்கினான்.
அகஸ்தீஸ்வரன் வார்டுக்கு போய் ரத்தினம் அருகில் அமரும் முன்பே டீயுடன் சந்திரனும் அங்கே சென்று விட்டான்.
“அடடே. அதுக்குள்ள எப்படிடே வந்த. நீ என்ன ஸ்பைடர் மேனாடே. 7 வது மாடியில இருந்து குதிச்சா கீழே போன” என்றார் அகஸ்தீஸ்வரன்.
“இல்லைய்யா. நீங்களும் டீ குடிக்கணும். அய்யாவும் குடிக்கணும். அதான் இரண்டு பேருக்கும் சேத்தே டீ வாங்கிட்டு வந்துட்டேன்”.
என சொல்லிவிட்டு, இரண்டு பேருக்கு டீயை கிளாஸ்& இல் ஊற்றி கொடுத்தான்.
அகஸ்தீஸ்வரன் டீயை குடித்தார்.
“பராவாயில்லை டீ சுகர் கம்மியாத்தான் இருக்கு. வயசான ஆள்களுன்னு புரிஞ்சி வாங்கிட்டு வந்திருக்கான், புள்ளையாண்டன்”.
சிரித்தார் ரத்தினம்.
“சரிடே ரத்தினம் நான் கிளம்புறேன். ராத்திரிக்கு வாறேன்”. என கிளம்பினார் அகஸ்தீஸ்வரன்.
அவர் கிளம்பியவுடன், ரத்தினத்தினை குளிக்க சொன்னன் சந்திரன்.
“அய்யா குளிச்சு தாயரா இருங்க. இப்போ முத்துகிளி நாஸ்டா கொண்டு வந்துருவாங்க” என்றான்.
ரத்தினம் பெட்டை விட்டு கீழே இறங்கினார். அவரை தாங்கி பிடித்து உதவினான் சந்திரன். அவர் அருகில் இருந்த கக்கூஸ் உள்ளே நுழைந்தார்.
சிறிது நேரத்தில் முத்துகிளி வேகமாக வார்டுக்குள் வந்தாள். இரண்டு கையிலும் சுமக்க முடியாத அளவுக்கு பை இருந்தது.
“பாவி மனுசி. ஒரு போன் பண்ணியிருந்தா காரில போய் அவளை வி.எம். சத்திரத்தில கூட்டிட்டு வந்திருப்பேன். திமிரு பிடிச்சவா . நம்ம கிட்ட சொல்லக்கூடாதுன்னு பஸ்ல கழுதை பொதி சுமக்கிற மாரி சுமந்து, ஆட்டோ பிடிச்சு வந்தோளோ. இல்லாட்டி நடந்து வந்தாளோ . வேது வேதுன்ன வந்து நிக்கா” மனதுக்குள் சந்திரன் திட்டினான்.
“என்கூட காரில வந்தா ஓட்டிக்கவா போவுது?” சந்திரனுக்கு எரிச்சல் வந்தது.
ஆனால் முத்துகிளி எடுத்து வந்திருந்த நாஸ்டா மனம் இவன் மூக்கு வரை துழைத்தது.
முத்துகிளியை பார்த்து புன்சிரிப்பு சிரிந்தான்.
அவள் பதிலுக்கு வேண்டா வெறுப்பாகவே சிரித்தாள். “அய்யா எங்க இருக்காவ”. கேட்டவள் அவன் முகத்தினை கூட பார்க்கவில்லை.
“பாத்ரூம்புல இருக்காவ. இப்ப வந்துருவாவ”. சந்திரன் பதில் சொன்னான்.
“ம்”. அமைதியாக நின்றாள்.
“பாவி மவா. நம்மை பார்த்து என்ன சாப்பிட்டீயளான்னு ஒரு வார்த்தை கேட்டாளா?”
மனதுக்குள் சந்திரனுக்கு ஏக்கம். ஆனால் முத்துகிளியாவது. இவனிடம் பேசுவதாவது.
“ராங்கி பிடித்தவள். இவ மனசுல காதல் இல்லாட்டி கூட பரவாயில்லை. கொஞ்சம் ஈரமுமா இல்லாம போயிட்டா. பெரிய பாவி. இவளை பாவி மவான்னு சொல்ல கூடாது. ரத்தினம் அய்யா ரொம்ப நல்லவரு. அவரை போய் பாவின்னு சொல்லக்கூடாது”. மனதுக்குள் பேசிக்கொண்டான்.
இவனிடம் சில நிமிடம் நிற்க்க கூட அவளுக்கு பிடிக்கவில்லை. அந்த அறையை விட்டு அவள் வெளியே வந்து விட்டாள். “ஏன் என் கூட நின்னா என்னவாம். என் காத்து பட்டாக் கூட பிடிக்கலை போலும்”. மனது நொந்து போனான் சந்திரன்.
பெரும் மூச்சி விட்டான். “ஜடம். இவளை காதலிக்கிறதுக்கு. ஏதாவது பனை மரத்துக்கு சேலைக்கட்டி. அதை காதலிச்சிட்டு போயிறலாம போல-”.
ரத்தினம் அய்யா வெளியே வந்தார்.
“அய்யா, நீங்க சாப்பிடுங்க. நான் வெளியே போய் குளிச்சிட்டு வாறேன்”. சந்திரன் கிளம்பினான்.
“சீக்கிரம் வந்திருய்யா. இட்லி சூடு ஆற முன்னால சாப்பிடனும். வந்துருய்யா”.
ரத்தினம் பேச்சு கொஞ்சம் ஆறுதலாக இருந்தது.
“சரி”. என்று கிளம்பினான்.
ஹகிரவுண்டில நோயாளித்தான் குளிக்க முடியும். உடன் இருப்பவர்கள் வெளியே இருக்கு நவீன கழிப்பறையில் பணம் கட்டித்தான் குளிக்க வேண்டும். ஆகவே வெளியே கிளம்பினான் சந்திரன். முத்துகிளி முகத்தினை பார்த்தான். அப்போது கூட முத்துகிளி இவனை பார்த்து எதுவும் பேசவில்லை.
“சே. என்ன ஜென்மம் இவள். இவளுக்காக நாம் ஏன் காத்து கிடக்கவேண்டும். அவள் தான் நம்மை காதலிக்க வில்லையே. பின் ஏன் நாம் மெனக்கெட வேண்டும். பேசாமல் மும்பைக்கு சென்று விடலாம். ஏதாவது சவாரி கிடைத்தால் அவர்களை ஏற்றிக் கொண்டு சென்று விடலாம். அங்கே ஏதோ வத்தலோ தொத்தலோ. குஜராத்தியோ, மராட்டியோ கட்டிட்டு வாழ வேண்டியது தான்”. சந்திரன் மனது சொன்னது.
ஆனால் மறுநிமிடம். “டேய் கிராமத்து பிள்ளைக சொல்ல மாட்டாளுவ. ஆனா மனசுக்குள்ள நினைச்சிக்கிட்டு இருப்பாளுவ”. இவனின் மற்றொரு மனது சொன்னது.
யோசித்தான். “இந்த மனம் என்பது குரங்கு. சரி என்னதான் நடக்கும் பாத்திருவோம். இது எல்லாமே ஒரு புறம் இருந்தாலும் கூட சந்திரனின் பூர்வீகம் தெரிய வேண்டும். எப்படியாவது இன்று இரவு அகஸ்தீஸ்வரன் சாரிடம் முழு கதையும் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் . என்ன செய்யலாம்?”.
யோசித்துக்கொண்டே லிப்டில் ஏறினான். தரையில் வந்து இறங்கினான். ஏதோ ஒரு நினைவில் வெளியே வந்தான்.
அடுத்து நிமிடம் காரை எடுத்தான். பழைய ஐகிரவுண்ட் அருகில் இருந்த நவீன கட்டண கழிப்பறைக்கு சென்றான்.
காலை கடனை முடித்தான் . அதன் பின் மனது குளிரும் வரைக் குளித்தான். காரில் வைத்திருந்த மாற்று சட்டையை எடுத்து அணிந்து கொண்டான். தொடர்ந்து காரை மல்டி ஆஸ்பத்திரியை நோக்கி ஓட்டி வந்தான்.
மீண்டும் மல்டி ஆஸ்பத்திரி மாடி மேலே ஏறி வந்தான். அதற்குள் ரத்னம் சாப்பிட்டு முடித்திருந்தார். அவர் அருகில் வந்தவன் மாத்திரையை எடுத்துக்கொடுத்தான். சாப்பிட்டார்.
“நீ வரலேன்னா கஷ்டம் தான். எந்த மாத்திரை. எப்போ சாப்பிடனுமுன்னு தெரியாம முழிச்சிக்கிட்டு இருந்தேன்”. என்றார்.
“சரி அய்யா. இதய மாத்திரை. சரியா போடனும். ரத்தம் இளகிற மாத்திரை சரியான டைமுக்கு போடணும். மீண்டும் ரத்தம் உறைஞ்சிற கூடாதுன்னு டாக்டர் சொன்னாரு. அதான் சரியான நேரத்துக்கு மாத்திரை எடுத்து தாரேய்யா”. சந்திரன் சிரித்தான்.
“ம். நீ யாரு பெத்த பிள்ளையோ. கடவுள் என் குடும்பத்தோட உன்னை சேர்த்து விட்டு இருக்காரே. அந்த கடவுளுக்குத்தான் நன்றி சொல்லணும்”. ரத்தினம் சொன்னவுடன் பதில் சொன்னான்.
“அப்படி சொல்லதீங்க அய்யா. நான் தான் குடும்பமுன்னு ஒண்ணுமில்லாம கிடைச்சத சாப்பிட்டு, கிடைச்ச இடத்தில படுத்து எதுக்கு வாழுதோமுன்னு தெரியாமலேயே வாழ்ந்துகிட்டு இருந்தேன். உங்க குடும்பத்தோடு சேர்ந்த பொறவு தான் என் வாழ்க்கையில அர்த்தம் புரியுது”.
சொல்லி விட்டு முத்துகிளியை பார்த்தான் சந்திரன். அங்கே எந்த ரியாக்சனும் தெரியவில்லை.
“தம்பி நீயூம் சாப்பிடு” என்றார்.
முத்துகிளி தட்டை எடுத்து வைத்து விட்டு, அங்கிருந்து கிளம்ப எத்தனித்தாள்.
“ஏப்பு முத்துகிளி. தம்பிக்கு இட்லி வச்சி கொடு. ஆம்பிளை பிள்ளை வச்சா சாப்பிடுவான்” ரத்தினம் சத்தம் கொடுத்தார்.
வேண்டா வெறுப்பாக தட்டை எடுத்து அதில் நான்கு இட்லியை எடுத்து வைத்தாள். அதன் பின் தேங்காய் சட்னியை ஊற்றினாள். அவனிடம் நீட்டினாள்.
தட்டை பெற்றுக்கொண்டான். ஆனால் முத்துகிளி முகத்தில் தான் எந்தவொரு சிரிப்பும் தெரியவில்லை.
தன்னை அனாதை போலவே உணர்ந்தான். இவள் தான் தன்னை ஒரு பொருட்டாகவே நினைக்கமாட்டேன் கிறாளே.
இதே முத்துகிளி தனக்கு மனைவியாக வருவாளா?. பாசத்தோடு உணவு பரிமாறுவாளா?. அத்தான் ஏதாச்சம் வேணுமா? என்று கேட்பாளா? என்றெல்லாம் கனவு கண்டு கொண்டிருந்தான்.
ஆனால் அந்த கனவு நனவாகுமா? ரத்தினம் அய்யா கூட நம்மை ஏற்றுக்கொண்டு விட்டார் போல. ஆனால் இவளை மும்பையில் உயிரை பணயம் வைத்து காப்பாற்றினேனே. அதை நினைத்து பார்க்கிறாளா?
அட நினைத்து பார்க்காவிட்டாலும் பராவாயில்லை. என்னை பார்த்தாலே வேண்டா வெறுப்பா பார்க்கிறாள். ஒரு வேளை முத்துகிளி வேறு யாரையாவது காதலிக்கிறாளோ?. அப்படி தெரியவில்லையே? பிறகு ஏன் என்னை நேசிக்க மாட்டேன்கிறாள்.
அவன் மனது சாப்பிட பிடிக்காமல் தான் இருந்தது. ஆனாலும் வயிறு பசி அவனை மயங்க செய்தது.
“மானம் அது இதுன்னு பாத்து என்னை பட்டினி போட்டுறாதடே” அவன் மனதோ மீண்டும் அடம் பிடித்தது.
அடம் பிடித்த மனதை பாய்போல ஒரு பக்கம் சுருட்டி வைத்தான்.
இட்லி நன்றாக இருந்தது. மல்லிகைப்பூ போல என்று சொல்லுவார்களே . அதுபோலவே இருந்தது. சட்னி அதை விட சூப்பராக இருந்தது.
இவன் தேங்காய் சட்னியை சப்புக்கொட்டி சாப்பிட்டான்.
“அய்யா இதய நோயாளிக்கு தேங்காய் சட்னி வைக்க கூடாதாம் பக்கத்து வீட்டு ஆச்சி சொன்னாவ. இனிமே தேங்காய் சட்னி நம்ம வீட்டுல கிடையாது” என்றாள் முத்துகிளி.
ரத்னம் அய்யா அப்பாவியாக சிரித்தாள்.
“அடப்பாவி தேங்காய் சட்னி எவ்வளவு சுவையா இருக்கு. உங்கப்பாவுக்கு வேணுமுன்னா வேண்டாம். எனக்கு வச்சி தாடி” என உரிமையாக கேட்கணும் போல இருந்தது. ஆனால் அந்த உரிமை நமக்கு எங்கே உள்ளது.
எப்படியோ சாப்பிட்டு முடித்தான். தட்டை தானே கழுவினான்.
அப்பா அருகில் கட்டிலில் உட்கார்ந்து இருந்தாள் முத்துகிளி. அப்பாவின் சட்டை பட்டன் சரியாக மாட்டாமல் இருந்தது. அதை சரி செய்து மாட்டினாள். அப்பாவின் தலை முடி சிதறி கிடந்தது. அதை தான் கொண்டு வந்திருந்த சீப்பை எடுத்து சரியாக சீவினாள்.
அதன் பின் சந்திரன் கொண்டு வந்த தட்டை எடுத்து பத்திரப்படுத்தினாள்.
“அய்யா படுங்க” என்று தலையணையை எடுத்துக்கொடுத்தாள். ரத்னம் அய்யா படுத்தார்.
“ம். வயலுக்கு, தோட்டத்துககு அங்க இங்க ஓடிக்கிட்டு இருந்த நான். இப்போ படுத்தே கிடக்கேன். எனக்கே மாச்சலா இருக்கு”.அலுத்துக்கொண்டார் ரத்னம்.
“ஆஞ்சியோ எடுத்து பாத்தா. ஒண்ணுமில்லைன்னு தெரிஞ்சா மறுநிமிசம் வீட்டுக்கு போயிறலாமுய்யா”
“ம்-”
“காப்பீட்டுக்கு அப்ளய் பண்ணியிருக்காவுலாம். வந்திரும்”.
அந்த இடத்தில் தனக்கு வேலை ஒன்றும் இல்லை. அப்பாவும் மகளும் பேசட்டும் என அங்கிருந்து வெளியே வந்தான் சந்திரன்.
வாசு தாத்தா வந்தார்.
“என்னடே சந்திரா வெளியே வந்துட்ட”.
“ஒண்ணுமில்லை தாத்தா”.
“நீ வெளிய தாண்டே நிக்கணும். நான் என்ன சொன்னாலும் கேட்க மாட்டுக்க. அந்த குடும்பத்தில நீ நுழைய முடியாது”. எக்களமாய் சிரித்தார்.
“தாத்தா”.
“ஏடே இனம் இனத்தோடத்தான் சேரணும். அது தான் எல்லாத்துக்கும் நல்லது. உனக்கு இந்த உறவு ஒட்டாதுடே”.
“தாத்தா என் மனசு ரொம்ப வலிக்குது. என்னை புண்படுத்தாதீங்க” இவனால் அவரிடம் வெளிப்படையாக பேச முடியவில்லை. மனதுக்குள்தான் பேசினான்.
“ஏடே எட்டாத கனிக்கு ஆசைப்படாதன்னுத்தான் சொல்லுதேன். கடைசியில ஏமாந்து போவாத”.
தாத்தா வேகமாக உள்ளே சென்றார்.
அறிமுகத்தில் சிரிப்பு நடிகர் போல வந்த தாத்தா இப்போது வில்லன் போல எப்போதும் கிராஸ் செய்கிறார். இவர் ஏத்துற வெறுப்புல எப்படியாவது முத்துகிளியை அடையணுமுன்னு ஆசை கிளம்புது. இருதலை கொல்லி எறும்பு போல ஆனான் சந்திரன். என்ன முடிவு எடுக்கப்போகிறான்.
அமைதியாக இருந்தான். “இவர் எப்போதும் சாதி சனம். சாதி சனமுன்னு பேசுறாரே. நான் இந்த சாதியை சேர்ந்தவன் இல்லையா?”. எப்படி ராஜத்துரை நாடார் பேரன் வேறே சாதிக்காரனா போவான். அதுக்கு காரணம் என்ன? உண்மையிலே எங்க குடும்பத்துல என்ன நடந்தது. ஏன் நாங்க இந்த ஊரை விட்டு போனோம். ஏன் இந்த ஊருக்குள்ள நாங்க சேரக்கூடாது. இவுக எல்லாம் ஏன் எங்களோட இனபெந்து கிடையாது.
பல கேள்விகள் வேகமாக இவன் மனதில் வந்து போய்க்கொண்டு இருந்தது.
“இப்போத்தான் வாத்தியார், எங்க தாத்தா கதையை சொல்லிட்டு வாராறு. தாத்தா ரொம்ப நல்லவரு மாதிரித்தான் தெரியுது. அதுவும் அவர் பெரிய ஹீரோவா வேறே இருந்து இருக்கிறாரு. இந்த ஜாதி ஜனத்துக்கு நல்லது தான் செஞ்சி இருக்காரு. இன்னும் அப்பா கதையை சொல்லனும். நாம ஏன் சாதி கெட்டு போனோமுன்னு தெரியணும்”.
அவன் மனது பயங்கரமாக கொதித்தது.
“அட முத்துகிளியை கெட்டுறோமோ இல்லையோ. என் பூர்வீகம் தெரியணும். அது தெரியாம மும்பை போக கூடாது”.
தீர்க்கமாக முடிவெடுத்தான்.
“அட நம்ம பூர்விகத்தை காட்டி நான் சரியானவன்தான். நானும் பனையேறி குடும்பம்தான்னு நிருபணம் செஞ்சி , முத்துகிளியை திருமணம் செஞ்சி அவளை கூட்டிக்கிட்டுக்கிட்டுத்தான் மும்பை போகணும். இந்த வாசு தாத்தா முன்னால நான் நிமிர்ந்து நிக்கணும். இறைவா என் பூர்விகம் அதற்கு உதவியா இருக்கணும்”.
புலம்பல் புலம்பல். ஒரே புலம்பல் தான். ஆனால் அவன் மனதில் ஒரு வைராக்கியம் இருந்தது.
“அட இனிமே எதுக்கு மும்பை போகணும். இங்கேயே தங்கி ரத்னம் அய்யாவுக்கு சேவகம் செஞ்சுக்கிட்டு வீட்டோட மாப்பிள்ளையா இருக்கணும்”.
ஒரு வழியாக முடிவு செய்தான். அதற்காக நான் என்னவேணுமுன்னாலும் செய்வேன்.
உள்ளே போன தாத்தா வந்தார். இவனுடன் மூஞ்சி கொடுத்து போசமாலேயே இருந்தாரு. மதியம் வந்தது.
காலையிலேயே மதியம் சாப்பாட்டையும் கையோடு கொண்டு வந்திருந்தாள், முத்துகிளி. பாவம் ராத்திரி 4 மணிக்கெல்லாம் எழுந்து சமையல் செய்து இருப்பால் போல.
இருதய நோயாளிக்கு நல்லது என சாலை மீன் கொழம்பு வைத்திருந்தாள். முழுசு முழுசாக சாலை மீனை எடுத்து தட்டில் வைத்து ரத்னத்துக்கு கொடுத்தாள். அப்பாவோடு சேர்ந்து தானும் சாப்பிட்டாள். மீதி சாப்பாட்டை வெளியே கொண்டு வந்து தாத்தாவிடம் கொடுத்தாள்.
“தாத்தா இதுல இரண்டு பேருக்கும் சாப்பாடு இருக்கு . அப்படியே அந்த பார்க்கில போய் உட்காந்து சாப்பிட்டுட்டு வாங்க. கொஞ்சம் வெரசலா வாங்க . நான் ஊருக்கு போவணும்” என்றாள்.
வாசு தாத்தா அந்த பையுடன் கிளம்ப, இவன் நாய் போல பின்னாலே ஒடினான்.
“ஏடே பரமசிவன் கழுத்தில பாம்பு இருந்தாத்தான் மருவாதி . கண்ட இடத்தில இருந்தா மருவாதி இல்லை. அவன் அவன் இருக்க இடத்தில இருக்கணுமுடே. அப்பத்தான் மரியாதை”. வாசுவுக்கு சரியான பதில் சொல்ல நினைத்தான் சந்திரன்.
“தாத்தா. அதுக்காக என்னை என்ன சொல்ல வாறீய”
“உன்னைத்தான் சொல்லுதேன். உன் இடத்தில போய் இரு, நீ ராஜா. நானும் மதிப்பேன் . இந்த ஊர் ஜனமும் மதிக்கும். ஆனா இப்படி நாயி மாரி நாக்கை தொங்க போட்டுட்டு அலைஞ்சா. தெரு நாய்க்கு விழுந்த மாறி கல் எரித்தான் விழும்”
சே. ரொம்ப கேவலப்படுத்துகிறார் இவர்.
ஆனாலும் பொறுத்துக்கொண்டான்.
“ஏன் தாத்தா. நான் இந்த ஆஸ்பத்திரியில ஒரு சேவகனா இருந்துட்டு போறேன். உங்களுக்கு என்ன?”
“இங்க நீ யாரு. டாக்டரா? இல்லாட்டி கம்பவுண்டரா? இல்லாட்டு தூக்கி பெருக்குதாவனுவலே அந்த தோட்டியா? யாரு நீ”
“ம். நான் மனுசன் தாத்தா. இந்த மனுசனுக்கு கொஞ்சம் மரியாதை கொடுங்க”
“மனுசனுக்கு மரியாதை கொடுக்கலாம். உன்னை மாரி பொண்ணுக்காக அலையிற மயிராண்டிக்கெல்லாம் மரியாதை கொடுக்க முடியாது. நீ யாருடே. எங்க ஜாதி சனத்துக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்”
திரும்பவும் சவுக்கடி விழுந்தது போல் இருந்தது.
இவரும் பார்க்கில் போய் உட்கார்ந்தார்கள். சாப்பாட்டை பிரித்தார் வாசு. இரண்டு தட்டில் சோற்றை வைத்தார். இவருக்கும் மீன் கறி குழம்பை ஊற்றினார். ஒரு தட்டை அவனிடம் தள்ளினார்.
தண்ணீர் பாட்டிலை திறந்து இருவருக்கும் நடுவில் வைத்தார். Êசாப்பாடு வேண்டாம் என எழுந்து விடலாம் என நினைத்தான். இவரிடம் சண்டை போட்டு ஏன் முத்துகிளி சமைத்த சாப்பாட்டை சாப்பிடாமல் இருக்கணும். இருவரும் ஒருவரை ஒருவர் சரிவர பாக்காமலையே சாப்பிட்டனர். அதன் பின், இரு தட்டையும் எடுத்து அருகில் உள்ள பைப்பில் கழுவினான். அதன் பிறகு கூடையின் உள்ளே கொண்டு வைத்தான். அதன் பின் மாடிக்கு வந்தார்கள். கூடையை உள்ளே வைக்க சென்றான் சந்திரன்.
ரத்தினம் தூங்கி கொண்டிருந்தார். அருகில் கீழே துணியை விரித்து முத்துகிளையும் தூங்கி கொண்டிருந்தார். அப்போதும் அவள் முகத்தில் கௌரவம். இருமாம்பு. ஆனால் அது தான் இவனுக்கு ரொம்ப பிடித்திருந்தது.
“ரொம்ப அவசரப்பட்டாள். இங்க வந்து அப்பா கிட்ட படுத்து தூங்கிறா? இவளை எந்த லிஸ்டில சேககன்னே தெரியலை?”
அவள் விழித்து பார்ப்பாள் என நினைத்தான். அவள் நினைத்து பார்ப்பதாக தெரியவில்லை.
இவனும் வெளியே வந்தான். காலையில் யாரோ வாங்கி வைத்திருந்த தினசரி பேப்பரை விரித்து வாசு குறட்டை விட்டு தூங்கிக் கொண்டிருந்தார்.
“மனுசன் என் மனசை நோகுற மாரி பேசிட்டு, எவ்வளவு அசால்டா தூங்குதான் பாரு?”
இவனுக்குத்தான் தூக்கமே வரவில்லை. எப்படியாவது இன்று இரவு வாத்தியாரிடம் கதை கேட்கவேண்டும்.
வரண்டா வழியாக நடந்தான். இவனை அறியாமலேயே 7 மாடியும் ஏறி ஏறி இறங்கினான். ஒரிடத்தில் நிற்கவே இல்லை. ஏன் நடக்கிறோம் என்றும் தெரியவில்லை. நடந்து கொண்டே இருந்தான்.
ஒரு பக்கம் கேன்சர் நோயாளி. ஒரு பக்கம் கிட்னி பாதிக்கப்பட்டவர், ஒருபக்கம் இதயம் செயலிழந்தவர், ஒரு பக்கம் மனநலம் பாதிக்கப்பட்டவர், மற்றொரு பக்கம் விபத்தில் மிகவும் கோரமாக காயமடைந்தவர். எங்கு பார்த்தாலும் நோயாளிகள். அத்தனை பேரும் மிகவும் ஏழ்மை நிலையில் இருக்கும் பாமர மக்கள்.
மறுபுறம் எமர்ஜென்சி வார்டு. அருகில் ஆபரேசன் தியேட்டர். எல்லாமே வித்தியாசமாக இருந்தது. அதன் முன்னால் நோயாளி மீண்டும் உயிரோடு வருவாரா? என சோகமான முகத்துடன் காத்துக்கிடககும் மக்கள். எத்தனை நோய்கள். இவையெல்லாம் எங்கிருந்து வந்தது.
எதனால் வருகிறது. இதை கொடுத்த இறைவனே குணபடுத்தவும் மருத்துவம் கொடுத்து இருக்கிறான். அந்த மருத்துவத்துக்காகத்தான் இத்தனைபேர் காத்து இருக்கிறார். மீண்டு வருவார்கள் என நம்பிக்கையோடு இருக்கிறார்கள்.
உறுதியானான்.
“ஆம். எங்கிருந்தோ நம்மை முத்துகிளி அருகில் அனுப்பியுள்ளான் கடவுள். எதற்காக?. ஏன்?. எதனால்?”.
இதற்கெல்லாம் ஒரே பதில். முத்துகிளி எனக்குத்தான் என இறைவன் முடிவு செய்து விட்டான்.
தீர்க்கமாக முடிவெடுத்தான்.
மாலை 4 மணி ஆனது. எல்லோருக்கு டீ வாங்கி கொண்டு மேலே சென்றான். அனைவரும் தூங்கி முழித்து இருந்தார்கள். நால்வரும் டீயை குடித்து முடித்தார்கள்.
சரியாக 6 மணிக்கு வீட்டுக்கு கிளம்ப ஆயத்தமானாள் முத்துகிளி. கூடவே வாசு தாத்தாவும் கிளம்பினார். அவருக்கு முத்துகிளியை தனியாக விட்டு விடக்கூடாது. இவன் காரை தூக்கி கொண்டு போய் பிக்கப் பண்ணி விடக்கூடாது என்ற எண்ணம். அதான் அவ பின்னாலே கொடுக்கு பிடிச்சிட்டு போறாரு. கிழடு. மோசமான கிழடு.
போகும் போதும் சும்மா போகவில்லை வாசு.
“ஏடே ராத்திரி நல்ல ஹோட்டலுல இட்லி வாங்கி ரத்தினத்துக்கு குடு. 8 மணிக்கெல்லாம் ரத்தினத்தை தூங்க வைச்சிரு” என ஆடர் போட்டார் வாசு.
“ம்”. சந்திரன் கூறி விட்டான். “போரும்வே. எனக்கு தெரியுவே. நான் முத்துகிளி மேலே எவ்வளவு பாசம் வைச்சிருக்கேனோ. அதை விட இவர் மேலே ஒரு படி மேலேயே வச்சிருக்கேன்” சந்திரன் மனதுக்குள் சொல்லிக்கொண்டான்.
வாசுவும் முத்துகிளியும் மறையும் வரை மாடி மேல் நின்று பார்த்தான். கடைசியில் தன்னை பார்த்து கை அசைத்து வழி அனுப்புவாள் என நினைத்தான்.
அவள் திரும்பியே பார்க்கவில்லை.
இவன் மனது கனத்தது.
“ஒரு வேளை நமக்கும் முத்துகிளிக்கும் பிரிவு வர காரணம் இந்த இழவெடுத்த வாசு தாத்தாவாத்தான் இருக்குமுன்னு நினைக்கேன். இந்த கெழட்டு பயலை முதலில சங்கை நெருச்சி கொல்லனும்”
மனதுக்குள் ஒரு நிமிடம் வில்லனாக மாறி விட்டான்.அதன் பின் திரும்பினான்.
எள்ளு எண்ணைக்கு காயுதுன்னா, இந்த எலி புலுக்கை எதுக்கு காயுது.
இவன் காத்து கிடந்தான்.
அதன் பின் டாக்டர் ரவுண்ட்ஸ் வத்தார்.
கொஞ்ச நேரத்தில் கீழே இறங்கி பெரிய ஹோட்டலில் டிபன் வாங்கி வந்தான். டிபனோடு ரத்தினம் அய்யாவை போய் பார்த்தான். அவருக்கு சாப்பாடு கொடுத்து விட்டு, மாத்திரையை கொடுத்தான். 8மணிக்கெல்லாம் அவரை தூங்க வைத்து விட்டான்.
அனைத்து நோயாளிகளும் தூங்கி விட்டார்கள். நர்ஸ் இவனை பார்த்தவுடன் புரிந்து கொண்டான். நம்ம இனிமே வெளியே போய் விட வேண்டியது தான்.
வெளியே வந்தான். வாத்தியாரை காணவில்லை. இன்றைக்கு வந்து விடுவாரா? இதுவரை காணவில்லையே. என்னவாயிருக்கும். பலவாறாக அவனுக்கு எண்ணம் சென்றது.
சரியாக 9 மணி இருக்கும் அகஸ்தீஸ்வரன் சார் வந்து சேர்ந்தார்.
இன்று எப்படியாவது முழுகதையை கேட்டு விட வேண்டும் என்ற ஆர்வத்தோடு அவர் அருகில் வந்து அமர்ந்தான்.
“வாத்தியார் அய்யா சாப்பிட்டு விட்டீயளா?”
“ம். சாப்பிட்டுட்டேன்டே. நீ சாப்பிட்டீயா?”
தலையசைத்தான்.
“என்னடே என்னைத்தான் தேடிக்கிட்டு இருக்கியா?. ரொம்ப அசதியா இருந்துச்சு. வீட்டில படுத்துறலாமுன்னு நினைச்சேன். ஆனா உன்னை பாத்தா பாவமா இருந்துச்சு. நீ வேறே பூர்வீக கதையை கேட்டு பரக்கபரக்க முழிச்சிக்கிட்டு கிடக்க. அதான் இன்னைக்கு உன் பூர்வீக வரலாற்றை சொல்லிட்டு போனுமுன்னு வந்தேன்”.
“வாத்தியாரே ரொம்ப சந்தோசம்”-.
அவன் கையை உறுதியாக பற்றி கொண்டான் சந்திரன்.
அகஸ்தீஸ்வரன் ராஜத்துரை வரலாற்றை தொடரா ஆரம்பித்தார்.
******
பதனீர் கொதித்துக்கொண்டிருந்தது. கற்பகம் மதுரையை எரிக்கபோகும் கண்ணகி போல அந்த தீ சுவாலை முன்பு அமர்ந்து இருந்தாள்.
அரண்மனை கீரைக்காரி கற்பகத்தினை நோக்கி ஓடியே வந்தாள்.
“ஏய் கற்பகம். கற்பகம். அந்த காவல் காரன் வீரபாண்டியன் இருக்கானே. அவன் பொண்டாட்டி உன்னை பாக்கணுமுன்னு வந்திருக்காவ”.
நிமிர்ந்தாள் கற்பகம்.
“என்ன சொல்லுத?”.
“ஆமாம். அன்னா நிக்காவ பாரு”.
அங்கே அந்த பெண் நின்று கொண்டிருந்தாள். கையில் வெள்ளி தூக்குசட்டி ஒன்றை வைத்திருந்தாள். அவள் விறுவிறுவென கற்பகத்தினை நோக்கி நடந்து வந்தாள்.
ராஜத்துரையும் அதிர்ந்த படியே அவளை பார்த்தான்.
அரண்மனை பெண் . கம்பீரமாக இருந்தாள். பட்டு சேலை கட்டியிருந்தாள். நல்ல நகை நட்டு போட்டிருந்தாள். பேரழகி என்று சொல்ல முடியாவிட்டாலும் , அரண்மனை தீவனம் கொழுமொழுவென்று இருந்தாள் அந்த பெண்.
அவள் முகத்தில் கௌரவம் தெரிந்தது.
“கற்பகம் மேல் தப்பு தவறா சொல்லி வைச்சிருப்பானோ அந்த காவல்காரன். அதனால அவக்கிட்ட சரவு இழுக்க வந்திருக்காளோ அந்த அம்மா”. பெரிய சண்டியர் வந்தா கூட ஒத்தைக்கு ஒத்தை பார்த்து விடலாம். இங்க பொம்பளை வாறா. இவளை எப்படி சமாளிக்க போறேன். பலவறாக யோசித்தான் ராஜத்துரை.
சட் என்று எழுந்தாள் கற்பகம் ஆனால் எல்லாமே தலை கீழாக நடந்தது.
அந்த அம்மா இவளை பார்த்து வுடன் ஓடியே வந்தாள். அதன் பின் கட்டி பிடித்து அழ ஆரம்பித்து விட்டாள்.
ராஜத்துரைக்கு ஒன்றும் ஓடவில்லை. இந்த அம்மாவை எதிரி என நினைத்தோம் . ஆனால் இவள் அப்படித் தெரியவில்லை. எதற்காக அழுகிறாள். ஏன் அழுகிறாள். எதுவுமே புரியவில்லை, ராஜத்துரைக்கு. ஆனால் ஒன்று மட்டும் புரிந்தது. “இந்த அம்மா நமக்கு உதவ வந்து இருக்கா”.
கற்பகத்துக்கும் அழுகை தாங்க முடியவில்லை. நா தழுதழுக்க பேசினாள்.
“அம்மா. காவல்கரைவியத்தான் என்னை தப்பா” விக்கி முழுங்கியபடி பேசினாள் கற்பகம்.
“எனக்கு எல்லாம் தெரியும். வண்டிக்காரன் எல்லாம் சொன்னான்”. அந்த அம்மா உறுதியாக சொன்னாள்.
ராஜத்துரை சுற்றிப்பார்த்தான். அங்கே அந்த வண்டிக்கார தாத்தா நின்று கொண்டிருந்தார். அவர் தன் பின்னாலேயே சங்கரன் கோயிலில் இருந்து வேகமாக வண்டியை ஓட்டி வந்து இருக்கிறார். அதோட மட்டுமில்லாம இந்த அம்மாவிடம் சொல்லிவிட்டார். ஆகவே தான் இந்த அம்மாவும் இங்க வந்து இருக்கிறார்.
தாத்தாவை நோக்கி கையெடுத்து கும்பிட்டான்.
தாத்தா சிரித்தப்படியே வந்து ராஜத்துரையின் கும்பிட்ட கையை பிடித்து, பிரித்து விட்டு, கட்டி பிடித்து , தலையை தடவி ஆறுதல் சொன்னார்.
“தாயி. நாங்க காவக்கார குடும்பம். நாங்கத்தான் இந்த வயக்காட்டை மட்டுமில்லை மக்களையும் முள் மொறிவு இல்லாம காப்பாத்தனும். பொண்டு பிள்ளைகளும் கற்பு அழிய விடாம பாதுகாக்கணும். ஆனா எம்புருசன் ஒரு மிருகம். இப்படி மோசமா அலையுதானு. எனக்கு இன்னைக்கு வரைக்கும் தெரியாது”
கற்பகம் அழுதாள்.
அவள் கற்பகத்தினை கண்ணீரை துடைத்தாள். “இங்க பாரு நீ அழக்கூடாது”.
“இவன் யாரு?”.
“என் தம்பி”
“புதுசா வேலைக்கு சேந்து இருக்கானே அவனா?”
“ஆமாம்”.
“ஏய். தம்பி இங்க வா. என் புருசனுக்கு இதுல பாயசம் வச்சி இருக்கேன். அவனுக்கு பாயசம் ரொம்ப புடிக்கும். நான் சொன்னேன்னு போய் கொடுத்துட்டு வா. நீ வர்ற வரைக்கும் நான் இங்கத்தான் இருப்பேன்” என்றாள்.
ஒன்றும் புரியாமல் விழித்தான் ராஜத்துரை.
“டேய் பிடி”. அதிகாரமாக சொன்னாள் அந்தப்பெண்.
“கையில் பிடித்தான், அந்த தூக்குச்சட்டியை. அது வெள்ளி தூக்குச்சட்டி. அரண்மனை முத்திரை குத்தியிருந்தது.
“ம். போ”. சத்தமிட்டாள்.
அவள் சத்தம் மகுடிக்கு அடிபணிந்த பாம்பு போல இவனை நடக்க வைத்தது.
தாத்தாவை பார்த்தான்.
தாத்தா, “தைரியமா போயிட்டு வா” என தலையை அசைத்து சைகையால் சொன்னார்.
நடந்தான் கம்பீரமாக. வீறு நடைபோட்டு சென்றான். சித்தாத்து கரையில் சற்று மேட்டில் மானூர் கால்வாய் செல்லும் இடத்தில் உள்ள களத்து மேட்டிற்கு வந்தான்.
அங்கே.
மிகவும் தோரணையாக அமர்ந்து இருந்தான் தலைமை காவலன் வீரபாண்டியன்.
“என்ன லே சங்கரன்கோயிலுக்கு போயிட்டு எப்ப வந்த?”.
“இப்பதான் வந்தேன்”.
“கையில என்ன?”
“அரண்மனையில இருந்து உங்க சம்சாரம் கொடுத்து விட்டாவ”.
“என்னது?”
“பாயசமாம்”.
சிரித்தான். “ரொம்ப நாளா ஆசைப்பட்டு கேட்டேன். இன்னைக்குத்தான் கொடுத்தாளா?. கொண்டா குடிப்போம்”. மீசையை முறுக்கினான். அதன் பின் அந்த தூக்குச் சட்டியை கையில் வாங்கினான். தொடர்ந்து தனது மீசை பாயசம் குடிக்கும் போது பட்டு விடக்கூடாது என்று அதை ஒதுக்கி வைத்துக்கொண்டு குடிக்க ஆரம்பித்தான்.
“இன்னைக்கு ரொம்ப சுவையா இருக்கு லே”.
அந்த பாயசம் முழுவதையும் மிச்சம் வைக்காமல் ஒரே மூச்சாக குடித்து முடித்தான்.
“ம். நல்லா இருக்கு”.
எல்லோரும் அமைதியாக இருந்தார்கள்.
“என்ன லே உன் அக்காவை வரச்சொல்லியிருந்தேனே”.
கண்கள் சிவந்தது ராஜத்துரைக்கு கோபம் வந்தது. நரம்பு புடைத்தது. “ஏலேய் என் ஒரு கைக்கு காணமாட்டே. மவனே விட்டேனா” என்று அவனின் களரி அடிமுறை புஜம் துடித்தது. ஒரு குத்து குத்துனா நரம்பி தெரிச்சிடும்.
பின்னாலேயே வந்த வண்டித்தாத்தா அவன் தோளை பிடித்தார். “அமைதியா இருய்யா”.
தன்னைத்தானே அடக்கி கொண்டான்.
பாயசத்தினை குடித்தவன் உடலில் தீடீரென்று மாற்றம் ஏற்பட்டது. அடுத்த நிமிடம் வயிற்றுக்குள் ஏதோ செய்வது போல இருந்தது. வயிற்றை பிடித்தான். அதன் பின் அருகில் உள்ள கல்லில் அமர்ந்தான் . கண் எல்லாம் மறைவாகிக் கொண்டிருந்தது. எழுந்தான். எழு முடியவில்லை. நடந்தான் நடக்க முடியவில்லை. உட்கார்ந்தான் உட்கார முடியவில்லை. ஏதோ நடக்குது.
“ஏ. ல . இது என் வீட்டுக்காரி தந்த பாயசம் தானா?. இல்லை. நீ எதையாச்சும் கலக்கிட்டு கொண்டு வந்தியா?”
சொல்லி முடிக்கும் முன்பே முட்டங்கால் போட்டு நிற்க ஆரம்பித்து விட்டான்.
ம். ராஜத்துரை யோசித்தான். என்ன நடக்குது . ஒன்றுமே புரியலை. பரக்க பரக்க முழித்தான்.
“ஏய் வண்டிக்காரா வண்டியை கட்டுடா எனக்கு ஒரு மாதிரி இருக்கு” கத்தினான் காவல்காரன்.
அவன் அருகே நின்ற மெய்க்காப்பாளர்கள் ஓடிவந்து அவனை பிடித்தனர். “என்ன அய்யா செய்யுது”.
“டேய் வயித்துக்குள்ள என்னவோ பண்ணுது. என்னை வைத்தியர் வீட்டுக்கு தூக்கிட்டு போங்கடா?” துள்ள துடிக்க ஆரம்பித்தான்.
அவரை தூக்கினர். அவன் வந்த வில்லு வண்டியிலே அவனை தூக்கி போட்டார்கள். வண்டியை தட்ட, ஓட்டங்காளை இரண்டும் வேகமாக ஒட ஆரம்பித்தது..
வண்டிக்கார தாத்தா ராஜத்துரையிடம் வந்தார்.
“ஏடேய். நீ இம்ம இங்க நிக்காத. நேர உங்க அக்கா கிட்ட போயி. யக்கா உனக்கு பயம் ஒண்ணுமில்லேன்னு சொல்லிட்டு வேறே எந்த ஊரை பாத்தாவது ஓடிரு”.
ஒண்ணும் புரியாம விழித்தான்.
“என்ன தாத்தா இங்க நடக்கு”. ராஜத்துரை அப்பாவியாக கேட்டான்.
“அவனுக்கு பாயாசம் வச்சிட்டாவ. அதுவும் அவன் பெண்டாட்டி வீர நாச்சியாரே வச்சிட்டாவ. இனிமே அவனை காப்பாத்த முடியாது”. வண்டி காரத்தாத்தா அழுத்தமாக சொன்னனர்.
“என்ன பாயாசம் வச்சிட்டாவுளா?”
“ஆமாம். இனிமே காவல்காரனை காப்பாத்த முடியாது. இனிமே அவன் எந்த பொண்ணு வாழ்க்கையிலும் குறுக்கே வர மாட்டான்”.
ராஜத்துரைக்கு புரிந்தும் புரியாமலேயும் இருந்தது. அடுத்த நிமிடம் அக்காள் வீட்டை நோக்கி நடந்தான்.
(முத்துக்கிளி தொடர்ந்து கூவுவார்)


