கோவில்பட்டி ரோட்டரி சங்கம், பாரதியார் நினைவு அறக்கட்டளை சார்பில் எட்டையாபுரத்தில் மகாகவி பாரதியின் 102வது நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது.
நாட்டின் விடுதலைக்கு தனது புரட்சி எழுத்துக்கள் மூலம் விடுதலை எழுச்சியூட்டிய எட்டையாபுரத்து முண்டாசு கவிஞன் மகாகவி பாரதியின் 102வது நினைவு தினம் செப்டம்பர் 12ம் தேதி எட்டையாபுரத்தில் கடைபிடிக்கப்பட்டது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு செப்டம்பர் 11ம் தேதி நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டு வந்தது.
மகாகவி பாரதி செப் -11ம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு மேல் இறந்ததால் சென்னை மாநகராட்சி இறப்பு சான்றிதழ் செப்12ம் தேதி 1921 ம் ஆண்டு என வழங்கியுள்ளது. இறப்பு சான்றிதழில் செப்-12 என உள்ளதால் பாரதி மணி மண்டப கல்வெட்டுகளிலும் செப்டம்பர் 12 என திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து செப்டம்பர் 12ம் தேதி மகாகவி பாரதியின் நினைவு தினம் கடைபிடிக்கப்படுகிறது.
எட்டையாபுரத்தில் நடந்த நிகழ்ச்சியில் எட்டையாபுரம் தமிழ் பாப்திஸ்து துவக்கப்பள்ளி, மாரியப்ப நாடார் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் 70-க்கும் மேற்பட்டோர் பாரதியின் வேடம்புனைந்து பாரதியின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி பாரதியின் புகழை பரப்பிடவும், அனைவருக்கும் உயர் கல்வி கிடைத்திடவும், ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் சம உரிமை, சமவாய்ப்பு கிடைத்திடவும், நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபடவும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
பின்பு பாரதியின் பாடல்களைப் பாடி கோஷங்களை எழுப்பி பாரதி இல்லத்தில் உள்ள திருவுருவ சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி ரோட்டரி சங்க தலைவர் வெங்கடேஷ் தலைமை வகித்தார். பாரதியார் நினைவு அறக்கட்டளை தலைவர் முத்து முருகன், ரோட்டரி மாவட்ட துணை ஆளுநர் முத்துச்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரோட்டரி சங்க செயலாளர் சரவணன் அனைவரையும் வரவேற்றார்.
பாரதி வேடம் அணிந்த இளம் பாரதிகளுக்கு ரோட்டரி மாவட்ட தலைவர் விநாயகா ரமேஷ், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் டயனா ஜெயந்தி ஆகியோர் பரிசுகளை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் தமிழ் பாப்திஸ்து துவக்கப்பள்ளி தலைமையாசிரியர் லால்பகதூர்கென்னடி, ரோட்டரி சங்க நிர்வாகிகள் நாராயணசாமி, வேல்முருகன், நடராஜன், உள்பட ஆசிரியர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.


