மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தில் பணிபுரியும் ‘WHV’ பெண் சுகாதாரப் பணியாளர்களுக்கு நிலுவையில் உள்ள ஊதிய உயர்வை உடனடியாக வழங்கக் கோரி, மக்களைத் தேடி மருத்துவ ஊழியர்கள் சங்கத்தின் மாநிலத் தலைமை சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வுத் துறையின் கீழ் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் மூலம் இதுவரை சுமார் 3 கோடி பேருக்குப் பரிசோதனைகள் செய்யப்பட்டு, வீடுகளுக்கே சென்று மருந்துப் பெட்டகங்கள் வழங்கப்பட்டுள்ளன.
தமிழகம் முழுவதும் கிராமப் புறங்களில் 8,713 பேரும், நகர்ப் புறங்களில் 2,256 பேரும் கடந்த ஐந்து ஆண்டுகளாக இத்திட்டத்தில் பணிபுரிந்து வருகின்றனர். திட்ட நடைமுறைகளைத் தாண்டி மருத்துவமனைகளில் OP வேலை, வயா டெஸ்ட், ஸ்கூட்டம் டெஸ்ட் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் கட்டாயப்படுத்தி வேலை வாங்கப்படுகிறது.
தங்களுக்கு வழங்கப்படும் ரூ.5,500 ஊக்கத்தொகையிலேயே சொந்தப் பணத்தில் பெட்ரோல், மொபைல் போன், டேட்டா கார்டு மற்றும் நிலையான பொருட்களை வாங்குவதால் குடும்பச் செலவுக்குப் பணம் எஞ்சுவதில்லை என வேதனை தெரிவித்துள்ளனர்.
முக்கியக் கோரிக்கைகள்:
1. ஊக்கத்தொகையை ரூ.5,500-லிருந்து ரூ.15,000-ஆக உயர்த்த வேண்டும்.
2. திட்டப் பணிகளுக்கான அனைத்துச் செலவுகளையும் அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும்.
3. ஊழியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
4. பணிச்சுமையை வரன்முறைப்படுத்த வேண்டும்.
5. ‘WHV’ (Volunteers) என்ற நிலையை மாற்றி முறையான ஊழியர்களாக அறிவிக்க வேண்டும்.
கடந்த 16.03.2026 அன்று சுகாதாரத் துறை அமைச்சருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்படி, மே 1-ஆம் தேதி முதல் ஊதிய உயர்வு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டும் இதுவரை வழங்கப்படவில்லை என்றும், எனவே இக்கோரிக்கைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்றும் சங்கத்தின் மாநிலத் தலைவர் S. கிருஷ்ணமூர்த்தி வலியுறுத்தியுள்ளார்.


