தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள அரசர்குளம் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பனையேறும் தொழிலாளி சுடலை. இவரது மனைவி முத்தம்மாள் (60). இவர்கள் இருவரும் பேரன் உதயசங்கரை அழைத்துக் கொண்டு செய்துங்கநல்லூரில் நடைபெறும் வாரச்சந்தையில் பொருட்கள் வாங்குவதற்காக இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர்.
செய்துங்கநல்லூர் கீழதூதுகுழி அருகே வந்துகொண்டிருந்தபோது இவர்களது இருசக்கர வாகனம் எதிர்பாராத விதமாக சாலையில் இருந்த பேரிகார்டில் மோதியது. இதில் தடுமாறி முத்தம்மாள் சாலையில் விழுந்தார். அப்போது பின்னால் இருந்து கால்வாய் கிராமத்திற்கு சென்று விட்டு திரும்பி வந்து கொண்டிருந்த அரசு பேருந்து முத்தம்மாள் தலையில் ஏறியது. இதில் சம்பவ இடத்திலேயே முத்தம்மாள் உயிரிழந்தார். கணவர் சுடலையும் பேரன் உதயசங்கரும் படுகாயமடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் சம்பவ இடத்திற்கு வந்த செய்துங்கநல்லூர் சப் இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார் படுகாயமடைந்த இருவரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இறந்தவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


