முன்கதை சுருக்கம்
கிராமத்தில் வாழ்ந்த முத்துகிளி செல்போன் தொடர்பில் வீட்டுக்கு தெரியாமல் வயதான தம்பதியினருடன் மும்பை சென்று விடுகிறாள். அவளை நவீன போன் தொடர்பு வசதியுடன் கண்டு பிடிக்கிறான் நவீன். வயதான தம்பதிகளிடம் இருந்து முத்துகிளியை காப்பாற்றும் போது போலிசுக்கும் அவர்களுக்கும் பயங்கர துப்பாக்கி சண்டை நடக்கிறது. போலிசில் மாட்டிக்கொண்ட தம்பதிகள் கொரோனா நோயில் இறந்து விடவே, உடன் இருந்த முத்துகிளி உள்பட தேடிச்சென்ற உறவினர்கள் கொரோனா முகாமில் வைக்கப்படுகிறார்கள். அதன் பின் போலிஸ் கமிஷனர் உதவியுடன் இரண்டு காரில் ஈபாஸ் மூலமாக தமிழகத்துக்கு அவர்கள் அனுப்பி வைக்கப்படுகிறார்கள். சந்திரன் முத்துகிளியை திருமணம் செய்ய ஆசைப்படுகிறான். ஆனால் அது இயலாது என்கிறார்கள். அதற்கு காரணம் அவனது குடும்பத்தில் சாதி மாறி திருமணம் செய்தது என்கிறார் வாசு. அதை பற்றி புரியாமல் தவித்தார் இளங்கோ. உண்மையை புரிந்து கொள்ள சந்திரன் தனது பூர்வீகத்தினை தேடுகிறான். அவன் பூர்வீகம் தெரிந்தவர் தாமிரபரணி தாத்தா. இவன் அவரை பார்க்க சென்ற போது இறந்து விட்டார். தொடர்ந்து யாரிடம் இது பற்றி பேச என தெரியாமல் தவித்தான் சந்திரன். இதற்கிடையில் முத்துகிளி குடும்ப கோயில் கொடை விழா வருகிறது. அதில் குடும்பத்தினை தவிர வேறு யாரும் கலந்து கொள்ள கூடாது. அப்படி கலந்துகொண்டால் மறு கொடைக்கு அவர் உயிரோடு இருக்க மாட்டார்கள் என பலர் கூறியும் கேட்காமல் சந்திரன் அந்த கோயில் கொடையில் கலந்துகொண்டான். கொடை விழா ஆரம்பிக்கும் முன்பே பெரிய சாமியாடி காலில் அரிவாள் வெட்டு பட்டது. இதனால் அவரை ஆஸ்பத்திரிக்கு கூட்டிச்சென்றான் சந்திரன். குணமாகி கோயில் கொடைவிழா நடக்க சந்திரன் காரணமாகி விடுகிறான். இதனால் அனைவருக்கும் இவன் மேல் நல்ல எண்ணம் உருவாகிறது. எனவே நிச்சயம் முத்துகிளியை நாம் திருமணம் முடித்து கொள்ளலாம் என ஆசையுடன் இருந்தான். ஆனால் முத்துகிளியை பெண் பார்கக வந்தவர்களால் ஏற்ப்பட்ட பிரச்சனையால் இவன் ஊரை காலி செய்யும் நிலை ஏற்பட்டது. ஆனால் மறுநாள் காலையில் “லிங்க நாடார் பனையில் இருந்து விழுந்து இறந்து விட்டார் உடனே வா” என வாசு கூறினார். எனவே காரில் ஊரை நோக்கி கிளம்பினான். அங்கு அவர் உடலை ஆஸ்பத்திரியில் கொண்டு வைக்க போலிசுடன் உதவி செய்கிறான் சந்திரன். இனி.
சந்திரன் காலையிலேயே எழுந்தான் . பரபரப்பாக கிளம்பினான். வீட்டை விட்ட வந்தான்.
காரை எடுத்தான். இவன் காரை எடுக்கும்போதே தயார் நிலையில் இருந்த ரத்னம் அய்யாவும் வந்து ஏறிக்கொண்டார்.
கார் கிளம்பியது.
சந்திரன் ரத்னம் அய்யாவை பார்த்தான்.
“ஊர் சங்க மடம் கிட்டே போய்யா”
“சரி அய்யா”
தன்னுடைய காரை சங்க மடம் நோக்கி திருப்பினான் சந்திரன். அதற்குள் ஊர்காரர்கள் அனைவரும் வந்து விட்டனர். நேற்று வந்த இராமனுஜம்புதூர் கோனார் வேனும் காலையிலே வந்து விட்டது. அனைவரும் வேனில் ஏறினார்கள். வாசு காரில் வந்து ஏறிக்கொண்டார்.
கார் மற்றும் வேன் போலிஸ் ஸ்டேஷனை நோக்கி கிளம்பியது.
வாசுதான் பேசினார்.
“லிங்க நாடார் விழுந்தாரே. பனை வாரியம் அட்டை எதுவும் வச்சிருக்காராடே?”
“தெரியலையே?” ரத்னம் பதில் கூறினார்.
“தூத்துக்குடி மாவட்டத்தில இருந்து பனை வாரியம் அட்டை பதிவு பண்ணுனாவுலே. அதுக்கு நம்ம ஊருல முகாம் போட்டு இருந்தாவ. அதுல லிங்க நாடாரும் சொர்ணகிளியும் முத ஆளா நின்னு பதிஞ்சாவளே”.
“அப்படின்னா பதிஞ்சி இருப்பாவ”.
“ஏடே. லிங்க நாடாருக்குத்தான் 65 வயசை தாண்டியிருக்குமே. ஒரு வேளை பென்சன் கின்சன் வாங்கிராறோ-?”.
பென்சன் வாங்கிகொண்டிருந்தால் முறையாக பதிவு செய்திருப்பார் என்று அர்த்தம் அதற்காகத்தான் வாசு அந்த கேள்வியை கேட்டார்.
“அப்படி தெரியலையே. நம்ம ஊருல தங்க வேலு நாடாரு மகனும், வைகுண்ட நாடாரும் தான் பனை ஏறி பென்சன் வாங்கின மாதிரி கேள்வி பட்டேன்”.
“அப்படின்னா இவிய வாங்கலையா? இல்லை வாங்கிட்டு ஒருத்தருக்கிட்டேயேயும் சொல்லாம இருக்காவளா?”
“வாங்குனா நமக்கு தெரியாம எப்படிடே இருக்கும் போஸ்ட் மேன் மணியார்டர் கொண்டு வருவாவ?” ரத்னம் அய்யா கூறியதை உடனே இடம் மறித்தார் வாசு.
“நீ ஒருத்தன்டே மணியார்டர் இப்ப யாரு கொண்டு வாரா. எல்லோருக்கும் பேங்கில பணம் ஏறிடும். பேங்கில போயித்தான் பணம் எடுக்கணும்.”
“அப்படியா?”.
“ஒரு வேளை பென்சன் வாங்கிட்டு சொல்லாம இருந்தாலும் இப்பாவ”.
“அரசாங்கம் நல்ல நல்ல திட்டம் போட்டுத்தான் வச்சிருக்காவ. ஆனா அதை கிராமத்தில யாரு தெரிஞ்சி வச்சிருக்கா?”.
“சும்மா கிடடே முத மாதிரி கிடையாது. எல்லா விவரமும் கிராமத்துக்காரங்களுக்கு தெரியும். இல்லாட்டியும் ஏஜெண்ட் புகுந்து எல்லாத்தையும் சொல்லி குடுத்துருவா?. பனை வாரியம் பதிவு செய்ய நம்ம ஊருக்கே இரண்டு குருப் வந்துட்டு போவுது தெரியுமா? அவியளுக்கு தனி கமிசன்”. வாசு சொல்லும் போதே வியந்து பார்த்தார் ரத்னம்.
“அடடே இதெல்லாம் எனக்கு தெரியாம போயிட்டே”.
“உமக்கு என்னதான்தெரியுது. இந்த ஊருக்குள்ள ஒண்ணும் புரியாம டியூப் லைட் மாதிரி இருக்கீரு”.
“நம்ம ஊரு மொட்ட பாப்பாத்தி அக்கா இருக்காளா, அவளுக்கு இட்லி வியாபாரமுன்னு பதிஞ்சி பென்சன் வாங்கி கொடுத்துப்புட்டாவ தெரியுமா?”
ரத்னம், வாசு இரண்டு பேரும் பேசிக்கொண்டு இருக்கும் போதே பாளை ஹைகிரவுண்டு ஆஸ்பத்திரிக்கு வேன் வந்து சேர்ந்தது.
பின்னாலே ஏட்டையாவை ஏற்றிக்கொண்டு காரும் வந்து விட்டது.
அனைவரும் இறங்கி அருகில் உள்ள வேப்ப மரத்துக்கு அடியில் வந்தார்கள்.
“ஏடே. அடக்கத்துக்கு தேவையான சாமான் வாங்கனு முன்னா போயிட்டு வரச்சொல்லுங்கடே. நான் முதல் முதலாக போஸ்ட் மாட்டம் முடிச்சு தந்துருவேன். நேத்து காலையில 4 மணிக்கு விழுந்த பாடி. வச்சிக்கிட்டு இருக்க கூடாது சீக்கிரம் போய் அடக்கம் பண்ணுங்க” என்று கூறி விட்டு ஏட்டையா போஸ்ட் மார்டம் அறைக்குள் சென்றார்.
மற்றவர்கள் வெளியே நின்றார்கள் ஏட்டையா பின்னாலேயே சந்திரனும் உள்ளே சென்றான்.
“ஏட்டையா ஏதாவது உதவின்னா நான் செய்யுறேன்” என்றார்.
ஏட்டையா சிரித்தார். “தம்பி இங்க உதவி ஒண்ணும் தேவையில்லை. ஆனா ஆர்வமா இருக்க . வேணுமுன்னா எங்க கூட வந்து நின்னு” என்று பதில் கூறினார்.
“சரி ஏட்டையா?”.
“ரத்னமய்யா, உள்ளேயே பெட்டி, துணி எல்லாம் தந்திருவாங்க, ஒரு மாலையும் போட்டு பாடியை தந்துருவாங்க அவுகளுக்கு மொத்தமா ரேட் பேசுவாங்க. வேணுமுன்னா கொடுத்திருதியளா?”
ஏட்டையாவை பார்த்து சோகத்தோடு சிரித்தார் ரத்னம்.
“யய்யா உழைச்ச மனுசன். போவும் போது கொஞ்சம் மனமா போவட்டும். நல்ல பொட்டி வாங்கி தாறேன். இருக்கத்தண்டியும் நல்ல சட்டை வேஷ்டி அந்த மனுசன் போட்டு பாக்கல. எப்பவும் அழுக்கு வேஷ்டி கட்டிகிட்டு அழைஞ்சிகிட்டு இருந்தாரு. அதனால் நல்ல வேஷ்டி சட்டை எடுத்து தாரேன். அதை போட்டு வாங்கி தாங்க ஏட்டையா”.
ஏட்டையாவுக்கு அது தான் சரியென்று பட்டது.
“அப்படியா. அப்போ சீக்கிரமா போய் வாங்கிட்டு வாங்க. நேரம் ஆகிட கூடாது முதல் போஸ்ட்மார்டம் லிங்க நாடாருத்தான். அதால சீக்கிரம் வாங்க ”. என்றார் ஏட்டைய்யா.
“சரி அய்யா”. ஏட்டையாவிடம் கூறிவிட்டு சந்திரனை கூப்பிட்டார். “யய்யா சந்திரன் வாய்யா நாம காருல போயிட்டு வாங்கிட்டு வருவோம்”.
வாசு வந்தார். “ஏடேய் கொள்ளி கலயம் வாங்க. சுடுகாட்டு காரியத்துக்கு தேவையான பொருளை ஊர் காரங்க வாங்கிட்டு வருவாங்க. அவுங்க கிட்ட பைசாவை கொடுத்து விட்டுறு. நாமா பெட்டியும், சட்டை துணிமணி மாலையை வாங்கிட்டு வருவோம்” என்றார்.
“அதுவும் சரிதான்”. என்று ரத்னம் தனது பையில் இருந்து ரூ 5 ஆயிரம் ரூபாய் எடுத்து கொடுத்தார்.
“ய்யய்யா மாயாண்டி , குடிமகன் முருகன் ஒரு லிஸ்ட் எழுதி கொடுத்து இருக்கான். அதை வாங்கிட்டு வாங்க. அப்படியே உங்களுக்கு பாக்க எதுவும் விடுப்பட்டு இருந்தா அதையும் சேர்த்து வாங்கிட்டு கொடுங்க”
பணத்தினை கையில் வாங்கி கொண்டு மாயாண்டி தலையை சொரிந்தான்.
“இது எங்க காணும்”.
“ என்னய்யா. மத்த பொருள் எல்லாம் நாங்க வாங்கிட்டு வாறோம். நீங்க சின்ன சின்ன பொருள் தான் வாங்கணும். அதுக்கு இந்த பணம் காணாதாக்கும்” வாசு மாயாண்டியிடம் கேட்டார்.
“காணாது. நம்பிக்கை இருந்தா தாங்க. கணக்கு சொல்லுதேன். இல்லாட்டி நீரே போய் வாங்கிட்டு வாரும்”. மாயாண்டி கோபமாக பேசினான்
வாசு, “சரிதாண்டே. ஆன்னா ஊவுன்னா கோபம் மட்டும் பொத்துக்கிட்டு வருது. அடுத்தவன் காசி இல்லையா பாத்து செலவழிக்க வேண்டாமா?”
“ இருக்கட்டும். எதுனாலும் சந்தேகம் பட்டா எப்படி?. நம்பிக்கை வேண்டாமா?. இன்னைக்கு ஒரு நாளைக்கு வேலைக்கு போனா எனக்கு 800 ரூபாய் சம்பளம் கிடைக்கும். அதை விட்டுட்டு வந்திருக்கேன். எதுக்கு ஊரு காரரு துஷ்டி இது. இந்த நேரத்தில நாம ஏதாவதுஉதவ வேண்டாமா? அதுக்குத்தான் வந்திருக்கேன். இங்க வந்து செலவுக்கு பணத்தை இனுக்கி இனுக்கி தந்தா கோபம் வராதாக்கும்”. மாயாண்டி உதறி பேசினான்.
“சரவு இழுக்காதடே. இன்னா கூட 3 ஆயிரம் வச்சிக்கா. பொருளை ஆவுலாதி இல்லாம வாங்கிட்டு வா. எதுல போற?”.
“வேனுல தான்”.
“ஏடே அவ்வளவு பேருமா?”
“ஆமாம் ஊருக்காரனுவ ஒருத்ததை விட்டுட்டு போனா கூட ஆவுலாதி சொல்லுவானுவ”.
“சரி சீக்கிரம் வந்திருங்க. பாடியை சீக்கிரம் தந்திருவாவ போல”
“நாங்க அங்க போயி வாய்ப்பாக்கவா போறோம். சாமான் வாங்கத்தானே. ஒரு நிமிசத்துல வந்திருதோம்”.
சுப்பிரமணி சந்தோஷமாக கிளம்பினான்.
மூன்று பேர் ஏறியதும் பாளையங்கோட்டை மார்க்கெட்டை பார்த்து கார் கிளம்பியது.
அழகான சவப்பெட்டியை சிவலப்பேரி ரோட்டில இருக்கிற கடையில செய்ய கொடுத்தார்கள். “அரை மணி நேரத்தில வேணுமுய்யா”. சவப்பெட்டி செய்பவர் இவர்கள் முகத்தினை பார்த்தார். “வயசானவரா?”
“ஆமாம் பனையில இருந்து விழுந்து செத்துபோயிட்டாரு”
ச் கொட்டினார். “செஞ்சிருவுமய்யா. நீங்க போயிட்டு வாங்க” என வழி அனுப்பி வைத்தார் சவபெட்டி கடைக்காரரு.
அடுத்து மார்கெட்டில பெரிய ஜவுளி கடைக்கு வந்தார்கள். விலை உயர்ந்த வேஷ்டி, ரெடிமேட்டில் சட்டை எடுத்தார்கள். நல்ல அழகான தேங்காய் பூ டவல் எடுத்து கொண்டார்கள்.
பூக்கடை பஜாருக்கு வந்தார். நல்ல அழகான ரோஜாப்பூ மாலை செய்யச்சொன்னார்கள் .
எல்லாமே அரை மணி நேரத்தில் ரெடியாகி விட்டது.
அனைத்தையும் காரில் ஏற்றிக்கொண்டு போஸ்ட் மார்ட்டம் நடக்கும் இடத்துக்கு வந்தனர்.
ஏட்டையா ரெடியாக இருந்தார். சரியாக 10 நிமிடத்தில் போஸ்ட் மார்டம் முடிந்து விடும். “நீங்க பெட்டி வேஷ்டி சட்டை மாலை எல்லாத்தையும் அந்த பக்கமாக கொண்டு போய், அங்க ஒரு தோட்டி இருப்பார். அவர் கிட்டே கொடுங்க” என்றார்.
சந்திரன் அனைத்தையும் கொண்டு போய் கொடுத்தான்.
சரியாக 10.30 மணிக்கெல்லாம் எல்லாம் முடிந்து விட்டது. அடுத்த கட்டம் பாடிக்கு வேஷ்டி சட்டை அணிவித்து தேங்காய் பூ துண்டை தலையில் கட்டி, மாலை அணிவித்து சவப்பெட்டியில் வைத்து ஒரு ஓரமாக வைத்தனர்.
முறைப்படி கையெழுத்து போட்டு செய்யவேண்டிய முறைகளை யெல்லாம் செய்தனர். இலவசமாக பாடியை கொண்டு செல்ல தேவையான கையெழுத்தையும் ஏட்டையா வாங்கி கொடுத்து விட்டார்.
இலவச பிண ஊர்தியும் ரெடியாக வந்துவிட்டது. வசவப்பபுரத்தினை சேர்ந்த கணேசன் தான் டிரைவர். இவர்களுக்கு உதவியாக வந்து அனைத்தையும் முடித்து கொடுத்தார்.
ஏட்டையா சொன்னார். “பராவாயில்லை கொடுத்து வைத்த மனிதர். போஸ்ட் மார்டம் என்றால் சாயாங்காலம் வரைக்கு காத்து கிடக்கணும். ஆனால் இங்கே உடனே முடிந்துவிட்டது. பிண ஊர்தியில் ஏற்றி விட்டால் நான் கிளம்பி விடலாம்”. என்றார்.
“கொஞ்சம் இருங்க ஏட்டையா. சாமான் வாங்க போனவங்களை காணும். ஊரிலேயும் எல்லா மகளும் வந்துட்டாங்களான்னு கேட்கணும். கொஞ்சம் பொறுங்க” என்றார்.
ஊருக்கு போன் செய்தார், முத்துகிளி போனை எடுத்தார். “யம்மா முத்துகிளி, அத்தையோட பிள்ளைய மாரு எல்லாம் வந்துட்டாவுலா?”.
“வந்துட்டவய்யா. மூனாவது காரி மட்டும் மும்பையில் இருந்து பிளேட்டில ஏறி திருவனந்த புரம் இறங்கி காரில் நாகர் கோயில் தாண்டிட்டா. இன்னும் 2 மணி நேரத்தில வந்துருவா”.
“யம்மா. பாடியை வீட்டுக்கு கொண்டுட்டு வரமுடியாது? ரோட்டுல வைச்சி அப்படியே சுடுகாட்டுக்குத்தான் கொண்டு போணும். அதனால நாங்கள் கொஞ்சம் தயாமடியே வாறோம்”. ரத்னம் கூறினார்.
“சரி. அய்யா. நீங்க கிளம்பும் போது போன் பண்ணுங்க”.
ஏட்டையா சொன்னார். “இங்க பாருங்க பெரிசு வேனுல ஏத்தின பொறவு லேட் பண்ண கூடாது. கொஞ்சம் வெயிட் பண்ணியே ஏத்துவோம்”. என்றார்.
“சரி. கொள்ளி கலையம் வாங்க போனவனுவ என்ன ஆனானனுவ. போனை போடுடே” வாசு அலுத்தார்.
ஒவ்வொருவருக்காக போன் போட்டார் ரத்னம் ஒருவரும் போன் எடுக்க வில்லை.
“ஏடே வேன் டிரைவருக்கு போன் போடுடே. என்ன நிலமைன்னு கேளுடே”. வாசு அவரசப்பட்டார்.
ரத்னம் வேன் டிரைவருக்கு போன் போட்டார்.
“என்ன கோனாரே. சாமான் வாங்கிட்டு வந்துட்டானுவளா?”
“நாடாரே. எல்லோரும் எங்க போனனுவன்னு தெரியலை. ஒருத்தன் தலையையும் காணும். நான் வந்த உடனே கிளம்பி வந்துருதேன்”. என்றார்.
“இங்க எல்லா ரெடியாயிட்டு. கொஞ்சம் சீக்கிரமா கிளம்பனும். யாராவது அங்க நின்ன பேசுசொல்லுமுய்யா”. ரத்னம் வேகமாக பேசினார்.
“சரி நாடரே”. டிரைவருக்கு எரிச்சல் வந்தது. “அவ்வளவு பேரும் மளமளன்னு இறங்கி போனவனுவ. எங்க போனனுவ என்ன செய்றாவனுன்னே தெரியலை. ஒருத்தையும் காணோம்” அலுத்துக்கொண்டார் டிரைவர்.
போனை வைத்தார்.
“இவனுவ கொள்ளி கலையம் வாங்க ஊரோட போனானுவ என்ன ஆனானுவ தெரியலையே?” வாசுவிடம் ரத்னம் கூறினார்.
“அதை விடு குழி தோண்டிட்டானுவளா?” வாசுவுக்கு திடீர் சந்தேகம் வந்தது.
அதானே. குழி தோண்டினார்களா இல்லையா அது முதலில் தெரியவேண்டுமே?.
ஊருக்கு போன் அடித்தார் ரத்னம்.
எதிரே கள்ளவாண்ட நாடார் போனை எடுத்தார்.
“என்ன மச்சான் குழி தோண்டியாச்சா?”
“நல்லா தோண்டுனானுவ. குடிகார பயலுவ இரண்டு பேருக்கிட்ட காசுகொடுத்து விட்டேன். இரண்டு திருட்டுபயலும் எங்க போனானுன்னே தெரியலை”. கள்ளவாண்ட நாடார் பேச்சை கேட்டு அதிர்ச்சி அடைந்தார் ரத்னம்.
“என்ன மச்சான் சொல்லுறேரு”.
“ஆமாம் மாப்பிள்ளை. இந்த பயலுவள நானும் தேடிப்பாக்கேன் கிடைக்கல. ஒரு வேளை சுடுகாட்டுக்கு போயிருப்பானோன்னு போய் பார்த்தா அங்க மம்பெட்டி கிடக்கு. இந்த இரண்டு பயலையும் காணும். எதுவும் பக்கத்து ஊருல டாஸ்மாக் கடை திறக்கான்னு பாக்க போயிட்டானுவ போல”
“அய்யோ மச்சான். இங்க எல்லாம் ரெடியாயிட்டு, இப்ப கொஞ்ச நேரத்தில பாடி கிளம்பிரும். ஊருல வந்து வச்சிக்கிட்டு நிக்க முடியாது. உடனே புதைக்கணும்”. ரத்னத்தின் அவசரம் அவருக்கு தர்மசங்கடத்தினை ஏற்படுத்தியது.
“சரி. ஏதாவது ஒரு வழி செய்றேன்”. கள்ளவாண்ட நாடார் சொல்லும் போதே ரத்னம்முகம் வாடியது. அதை கண்ட வாசு, “என்னடே சொல்லுதான் உன் மச்சான்”.
“குழி வெட்ட போனவனுவள ஆளை காணுமாம்”.
“அவனுவள தீயை வச்சி கொளுத்து. நம்ம கல்கோரி கணக்கு பிள்ளை ஆசாரி இருக்காவளே அவியளுக்கு ஒரு போனை போடு, அவிய கோரியில இருக்கிற ஜேசிபி மிஷினை அனுப்பி குழி தோண்டிருவாவ”. வாசு திட்டவட்டமாக சொன்னர்.
“கல்கோரி காரவிய குழி தோண்ட வருவாளா?”.
“நீர் சொல்லுவே. அனுப்பி வைப்பாரு ஆசாரி”.
உடனே கல்கோரிக்கு போன் போட்டார் ரத்னம்.
ஆசாரிதான் எடுத்தார்.
“என்ன ரத்னம் அய்யா”.
“ஆசாரியய்யா கேள்வி பட்டியளா, லிங்க நாடாரு பனையில இருந்து விழுந்து செத்து போயிட்டாரு”.
“தெரியுமுய்யா”.
“குழி தோண்ட ரெண்டு பயல அனுப்பி வைச்சேன். அந்த பயலுவ எங்க போனானுவன்னுதெரியலை”.
“நீங்க கொஞ்சம் ஜே.சி.பி அனுப்பி குழி தோண்டி தாங்க. உண்டான காசை தந்து புடுதேன்”.
“என்ன இப்படி சொல்லுபுட்டீயே. முதலாளி காலையில சொல்லிட்டாரு. லிங்க நாடாரு சம்பந்தமாக என்ன உதவி வேணுமுன்னாலும் கேளுங்கன்னு. நான் இப்பவே ஜே.சி.பியை அனுப்பி வைக்கேன்”. ஆசாரி உறுதி கொடுத்தார்.
“யய்யா இன்னும் 1 மணி நேரத்தில் பாடி கிளம்பிடும்”.
“கவலையே படாதீங்க குழி ரெடியா இருக்கும்”. ஆசாரி கூறியவுடன் ஆறுதல் அடைந்தார் ரத்னம்.
“யப்பாட” பெரு மூச்சு விட்டாரு ரத்னம்.
அதற்குள் மற்றொரு குண்டை தூக்கிப்போட்டாரு வாசு.
“எல்லாம் சரி. லிங்க நாடாரு பொட்டை பிள்ளையை பெத்தவரு. ஆண் வாரிசு இல்லையே. கொள்ளி யாரு வைப்பா?”.
“இது வேரய்யா. மூத்த மவளேட பிள்ளை இருக்கானுல அவன்தான் கொள்ளி வைக்கனும்”. ரத்னம் கூறினார்.
“அதுக்கு மத்த மகளுவ ஒத்துகிடுவாவளா?” வாசுவுக்கு சந்தேகம் வந்தது.
“ஏன் ஓத்துக்க மாட்டாளுவ?” ரத்னம் கேட்டார்.
“சரி. பொம்பளைய கதை . எதுக்கும் அதையும் சீர் பண்ணிரும் வே”.
ரத்னம் அதுக்காக யோசனை செய்தார்.
சந்திரன் அருகில் நின்று ஆச்சரியத்துடன் பார்த்தான்.
ஒரு பிணம் விழுகிறது. அதை அடக்கம் செய்கிறார்கள். இது தான் வெளியே இருந்து பார்த்தால் தெரிகிறது. ஆனால் அதற்குள் இத்தனை நிகழ்வா?. நினைத்தே பார்க்க இயலவில்லை. தமிழகத்தின் பண்பாடுதான் எவ்வளவு விசேஷமானது.
மீண்டும் முத்துகிளிக்கு போன் செய்தார் ரத்னம்.
“முத்து கிளி, அத்தை சொர்ணகிளிக்கிட்டே போயி யாரு கொள்ளி வைக்கணுமுன்னு ஒரு கேள்வியை கேட்டுரு”.
“சரிய்யா. நான் கேட்கிறேன்”.
என்று போனை வைத்தார்.
*****
முத்துகிளி அத்தையிடம் வந்தார், அழுது அழுது சிவந்து போன முகம், தலைவிரி கோலம் குரல் கூட வெளியே வராத அளவுக்கு சத்தம் குறைந்து இருந்தது.
“அத்தை அய்யா கேட்டாவ, கொள்ளி யாரு வைக்கணுமுன்னு” முத்துகிளி சொன்னது தான் தாமதம் அங்கு மிகபெரிய பிரபளயமே ஏற்பட்டது.
அது வரை அமைதியாக இருந்த அனைவரும் மீண்டும் அழ ஆரம்பித்து விட்டார்கள்.
ஒரு கிழவி ஒப்பாரி ஆரம்பித்து விட்டார்.
“தொத்தி தொத்தி
ஏறினாலும்
தத்தி தாவி பனை ஏறினாலும்
வாரிசு இல்லாம
பரித வித்து போயிட்டியே என் ராஜா” என்றார்.
இது என்ன ஒப்பாரி புதுசா இருக்கு என முத்துகிளி யோசிக்கும் முன்பே ஒவ்வொருவரும் ஏங்கி ஏங்கி அழ ஆரம்பித்துவிட்டார்கள்.
ஒரு காலத்தில பாட்டிகள் ஒப்பாறி வைக்கவே கிராமத்தில் இருப்பார்கள். இப்போ ஒப்பாறி வைக்க ஆளே இல்லை. அப்படியே ஒப்பாறி வைத்தாலும் இப்படித்தான் எதையாவது சொல்லி அழுவார்கள். யாருக்கும் புரியாது. இதுபோல தொந்தரவு வரக்கூடாதுன்னு தான் ஒப்பாறி வைக்க இசைக்குழுவே ஆரம்பித்து இருக்கிறார்கள். நெல்லை தூத்துக்குடி தென்காசி மாவட்டத்தில் இதுபோன்ற இசைக்குழுவினர் பலர் உள்ளனர்.
அந்த குழுவினரே ஆட்டேவில் ரேடியோ கட்டிக்கொண்டு வருவார்கள். தப்பட்டம் அடித்து ஒப்பாரி பாட்டு பாடுவார்கள். இறந்தவர் புகழை பற்றி எழுதி பாடி குடும்பத்தினரை கௌரவிப்பார்கள். கிட்டத்தட்ட அது உள்ளத்தால் அழுவது அல்ல. செயற்கையாக, பணம் வாங்கி விட்டோம் என்பதற்காக அழுவது. எல்லாமே செயற்கையாகி விட்டது.
செயற்கை சமையல், செயற்கை அழுகை, தீடீர் சவப்பெட்டி, தீடிர் குழி, தீடீர் சாவு பாட்டு, தீடிர் தீடீர் எல்லாமே தீடீர்.
வேகமான உலகம்.
ஒருகாலத்தில் சுடுகாட்டுக்கு பாடியை கொண்டு செல்ல தள்ளுவண்டி வைத்திருப்பார்கள். இல்லையென்றால் நாலு பேர் சுமப்பார்கள். இப்போது அதுவும் இல்லை. பெட்டி தயாரிக்கும் இடத்தில் கூறிவிட்டால் ஊர்வலம் கொண்டு செல்ல வேன் வந்து விடும்.அந்த வேனை மாலையால் ஜோடித்து அதில் இறந்தவர் உடலை ஏற்றி செல்லும் வழியில் ஒப்பாரி பாட்டு போடுவார்கள். இல்லை கைலாயத்துக்கு செல்லும் பாடல்களை போடுவார்கள். எல்லாமே ரெடிமேட். ஏன் செய்கிறோம். எதற்கு செய்கிறோம் என்றே தெரியவில்லை. இதற்கு இது என்று எதையும் அடையாள படுத்துவதும் இல்லை. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். எல்லாவற்றிற்கும் பணம் கொடுக்க வேண்டும்.
இதுபோன்று ஆயிரம் இருந்தாலும் கொள்ளி வைக்க மகன் வேண்டுமே. மகன் இல்லையென்றால் வேறு யார் கொள்ளி வைப்பார்கள். இது மற்றவர்களுக்கு வேடிக்கையாக இருந்தாலும் சொர்ணகிளிக்கு வேடிக்கையாக இருந்தது.
சொர்ணகிளி அழுகை முடிவதற்குள் அரை மணி நேரம் ஆனாது.
சொர்ணகிளி ஒரு நாள் பனையேறும் கணவருக்கு கஞ்சி கொண்டு செல்கிறார். அப்போது அவர்கள் இருவரும் பேசி கொண்ட அந்த காலம் நினைவுக்கு வந்தது.
கணவர் பனையில் இருந்து இறங்கி வரப்பில் அமர்ந்து இருக்க, கஞ்சியை கொடுக்கிறாள் முத்துகிளி.
“யய்யா நான் ஒன்னு சொன்ன தப்பா நினைக்க மாட்டியளே”.
“என்ன சொர்ணம்”.
“யய்யா நான் செத்து போயிட்டா எனக்கு கொள்ளி யாருய்யா வைப்பா?”.
“நான் இருக்கேனே. நான் வைப்பேன். நீ. ஏன் கவலை படுதே”.
சொர்ணகிளி கண்களில் கண்ணீர் முட்டியது. “ஐந்து பொட்ட பிள்ளையை பெத்தோம். கொள்ளி வைக்க ஒரு பிள்ளை இல்லாம போயிட்டோமே”. தேம்பி தேம்பி அழ ஆரம்பித்து விட்டாள்.
லிங்க நாடாருக்கு தர்மசங்கடமாக இருந்தது.
“அழாதே ஒரு வேளை நான் முதலில செத்துபோயிட்டா எனக்கு யார் கொள்ளி வைப்பான்னு தானே நீ அழுத” லிங்க நாடார் சொர்ணகிளியை பார்த்து கேட்டாள்.
கண்ணீர் மல்க தலையாட்டினாள் சொர்ணகிளி.
“கவலையே படாதே. நம்ம மூத்த மக சிங்கம் மாறி ஆம்பிள்ளை பிள்ளையை பெத்து வைச்சிருக்கா. பொறவு எதுக்கு நமக்கு கவலை”. என்றார் சிரித்தப்படி.
அந்த சிரிப்பிலும் அவர் கண்களில் இருந்து கண்ணீர் சொட்டியது. அதில் ஆண்பிள்ளை பிள்ளை இல்லை என்ற ஏக்கம் இருந்தது.
நிகழ் காலத்துக்கு வந்தாள் முத்துகிளி.
மூத்தவளை கூப்பிட்டாள், “யம்மா, உம் பிள்ளையை கொள்ளி வைக்க சொல்லு” என்றார்.
மூத்தவள் தாயை அணைத்துக்கொண்டு அழ ஆரம்பித்து விட்டாள்.
முத்துகிளி அப்படியே அங்கிருந்து நகர்ந்தாள். அவளுக்கு முடிவு தெரிந்து விட்டது. கொள்ளி வைப்பது யார் என்பது முடிவாகி விட்டது. போனில் அப்பாவோடடு தொடர்ப்பு கொண்டாள். அவர் யாரிடமோ பேசிக்கொண்டிருந்தார். உடனே சொல்லணும். அப்பா இதற்காக வேறு ஏற்பாடு செய்து விடக்கூடாது. எனவே சந்திரனுக்கு போன் அடித்தாள்.
முத்துகிளி போன் வருகிறது என்றவுடன சந்திரனுக்கு சந்தோஷம், ஆவலுடன் எடுத்தான். “என்ன முத்துகிளி?”.
“அய்யா கிட்ட கொடுங்க” முத்துகிளி சந்திரனிடம் ஆர்வமில்லாமல் பேசினாள்.
“அய்யா இன்னொரு போனுல பேசுதாவ. வேறு ஏதாவது சொல்லுணுமா?” அப்படியாவது நம்மிடம் பேசமாட்டாளா என்ற நம்பிக்கையில் பேசினான். ஆனால் அவள் பிடிகொடுக்கவில்லை.
“நான் அய்யா கிட்டத்தான் பேசணும். கொடுங்க”
ம் கூம் பிரயோசனம் இல்லை. அவள் நம்மிடம் பேச பிரியப்படவில்லை.
“கொஞ்சம் லயனுல இருங்க கொடுக்கேன்”.
ரத்னம் அருகே வந்தான், “அய்யா முத்து கிளி போனுல இருக்கவ” என்றான்.
அவர் பேசிக்கொண்டிருக்கும் போனை கட் செய்து விட்டு இந்த போனில் முத்துகிளியிடம் பேசினார்.
“என்னம்மா. யாரை கொள்ளி வைக்க சொன்ன அக்கா”
“ய்யய்யா, மூத்த அக்காவோட மகனை கொள்ளி வைக்க சொல்லிட்டாவ”.
“சரிம்மா. நீ. பாத்துக்க. பம்பாய் காரி கிட்டவந்தவுடனே போன் பண்ணு. நாங்க இங்கிருந்த கிளம்பி வாறோம்”.
“சரிய்யா”. போனை வைத்து விட்டார்.
சந்திரனுக்கு எரிச்சலாய் இருந்தது. முத்துகிளி போன் பேசும் போது ஏதாவது நம்ம கூட பேசுவா? நீங்க எப்படி இருக்கீய ன்னு கேப்பா? காலையிலேயே போனீயளே சாப்பிட்டீயளான்னுகேட்பா? ன்னு நினைச்சான். ஆனா ஒண்ணும் கேட்கவில்லை. இவ என்ன பொண்ணுதானா? ஏன் என்னை இவளுக்கு பிடிக்கவில்லையா? அல்லது பிடித்தாலும் பிடிக்காத மாதிரி நடக்கிறாளா?. இந்த பெண்ணே ஒரு புரியாத புதிரா இருக்காளே.
வசப்பபுரம் பிண ஊர்தி டிரைவர் வந்தார். “யய்யா வேன் ரெடியா இருக்கும் ஏத்திறாமா?” என்றார்.
“கொஞ்சம் இருங்கய்யா” என்றார் ரத்னம்.
“யய்யா நான்சொல்லுதேன்னு தப்பா நினைக்காதீய்ய. ஊர் காரங்க இப்பே வரமாட்டாவ”. வேன் டிரைவர் வித்தியாசமாக சிரித்தார்.
“ஏன் அய்யா?”.
“அய்யா. அவ்வளவு பேரும் உங்களுக்கு சப்போர்ட் பண்ண வந்திருக்காவுன்னு நினைக்கீய. இல்லை. எல்லோரும் தண்ணீ அடிக்க வந்திருக்காவ. உங்க ஊரு மட்டுமில்ல இப்போ எல்லா கிராமத்திலேயும் இதுதான் நடக்கு. உங்களுக்கு இது புதுசு. நாங்க தினமும் பாக்கிறோமுய்யா”
வேன் டிரைவர் கூறியவுடன ரத்னம் முகம் இருண்டது.
ஏட்டைய்யா கூறினார். “ஆமாய்யா. டாஸ்மாக் 12 மணிக்கு திறப்பாவ. அதுவரைக்கு இவனுவ மார்க்கெட்டை விட்டு வர மாட்டானுவ. அதுக்கப்புறம் பாட்டில் வாங்கிட்டுத்தான் எல்லோரும் வருவானுவ. நீங்க வேணுமுன்னா 12 மணிக்கு போன் பண்ணி பாருங்க. அவ்வளவுபேரும் உங்க கிட்ட பேசுவானுவ”
அமைதியாக இருந்தார், ரத்னம். அருகில் வாசு வந்தார்.
“எல்லாமே மாறி போச்சு. இந்த உலகம் எங்கபோய் நிக்கபோவுதோ தெரியலை. இப்பெல்லாம் சனிக்கிழமை ஆனா விபத்து அதிகமாகி போச்சு. எல்லாம் இந்த குடி பார்க்க பார்வைத்தான்” வாசு சலித்துக்கொண்டார்.
“கொத்தனாருக்கும் சம்பளம் 1000 ரூபாய், கையாளுக்கு சம்பளம் 800 ரூபாய். யாரு எப்படி போனாலும் சனி கிழமை சம்பளம் போட்டே ஆகணும். சம்பளம் வாங்கின உடனே நிறைய பேரு டாஸ்மாக் கடையில போய் காத்து கிடந்து ஹோட்டர் வாங்கி அடிச்சிட்டு, எதித்தாப்பல போறே மோட்டார் பைக் மேலே மோதி விபத்தை உண்டாக்கி புடுறாவ”. வாசு சொன்னதை ஏட்டையா ஆமோதித்தார்.
“உண்மைதான். இதுவரைக்கு விபத்து அதிகமாக நடக்கிறது சனிக்கிழமையாத்தான் இருக்கு”. விரக்தியாக பேசினார் ஏட்டையா.
போலிசுக்கு பயம் இல்லை. எதுக்குமே பயம் இல்லை. ரொம்ப கேவலமா இருக்கு. இந்த நாடு எதைநோக்கி போகுதுன்னே தெரியலை. எல்லாமே பணம் தான். பணத்துக்காக எதையும் செய்வான். தண்ணீ போடனுமுன்னா என்னனாலும் செய்வான். இதுதான் உலகம்.
ரத்னம் தனது சிறுவயது காலத்தினை நினைத்து பார்க்கிறார்.
அப்போது காமராஜர் ஆட்சி காலம் நடந்து கொண்டிருந்தது. மதுவிலக்கு நாட்டில் இருந்தது. யாராவது ஒருவர் கள்ளு போட்டு விற்பார். அந்த கள்ளை குடித்தவர்களை போலிசு பிடித்துக் கொண்டுபோய் விடுவார்கள்.
போலீஸ் அரை டவுசர் தான் போட்டு விரைப்பாக இருப்பார்கள். அவர்களது கால்சட்டையும் விரைப்பாக இருப்பார். செய்துங்கநல்லூருக்கு ஒரு ஏட்டுதான் தலைமையா இருப்பார். மத்தவங்க எல்லோரும் போலீசுதான். 5 போலீஸ்தான் இருப்பாங்க. அவங்களை பார்த்து ஊரே பயப்படும். போலீஸ் சைக்கிளில் லத்தி கம்பை வைத்துக்கொண்டு கிராமத்துக்கு வருவார் . அவரிடம் வித்தியாசமான ஊசில் இருக்கும். அந்த ஊசிலை அவர் ஊதியவுடன் ஊரே அமைதியாகிவிடும். சிறுகுழந்தைகள் அழுதாலும் ஊசில் சத்தம் கேட்குது பார் அந்த போலீஸ் கிட்டே பிடிச்சுகொடுத்து விடுவேன் என தாய் தன் குழந்தையை பார்த்து மிரட்டும் காலம்.
போலீஸ் பெயரை சொன்னவுடன் அந்த குழந்தை அப்படியே தனது அழுகையை நிறுத்தி விடும். இப்போ போலீஸ் சிரிப்பு போலீசாகி விட்டது.
ஒரு நாள் ரத்னத்தின் பெரியப்பா பெரிய நாடார் நன்றாக கள்ளு குடித்து விட்டு ரோட்டில் நடந்து வந்து கொண்டிருந்தார். எதிர்பாராத விதமாக போலீஸ் எதிரே வந்துவிட்டார். வசமாக மாட்டிக்கொண்டார்.
அப்போது குடிப்பவர்கள் ஊதச்சொல்லி அவர் குடித்திருக்கிறார் என்று தெரிந்தால் உடனே கைது செய்து விடுவார்கள்.
ஒரு நாள் பெரியப்பா கள்ளு குடித்து விட்டு ரோட்டில் நடந்து வந்து கொண்டிருக்கிறார். அப்போது எதிரே போலீஸ் வந்து விட்டது. போலிஸ் நிச்சயம் ஊத சொல்வார் . எனவே அருகில் இருந்தவர்கள் எல்லாம் பயந்து போய் விட்டார்கள்.
பெரிய நாடாருக்கும் கொஞ்சம் பதட்டம் தான். ஆனாலும் தன்நிலை தவறவில்லை. ஆனால் உடனே ஒரு யுக்தியை கையாண்டார். பெரிய நாடார் பொடி போடும் வழக்கம் கொண்டவர்.
தனது இடுப்பில் வேஷ்டி மடிப்பில் இருந்த பொடி பொட்டினத்தினை எடுத்தார். செபத்தியாபுரம் பட்டணம்பொடி . அதை கையில் எடுத்து அப்படியே வாயில் வைத்து பல் தேய்ப்பது போல தேய்த்தார்.
ஏட்டையா அதற்குள் அருகில் வந்து விட்டார்.
“யோவ் என்னவே கள்ளு குடிச்சிருக்கீறீரோ”.
“இல்லை எஜமான்” திரு திருவென முழித்தார்.
“பொய் சொல்லாதுமுவே. அதான் பாத்தாலே தெரியுதே. முழிக்க முழியும், மொறையும். ஊதுவே”
பெரிய நாடார் பரபரக்க முழித்த படி நின்றார்.
“என்னவே சொல்லுதது விளங்கல. ஊதுவே”. கடுப்பானார் ஏட்டையா.
“எஜமான்”. முகத்தினை சுழித்தார் பெரியநாடார்.
“அப்ப குடிச்சிருக்கீறுரு. நடைய கட்டுமே ஸ்டேஷனுக்கு”.
“இல்லை எஜமான ஊதுதேன்”.
பொடி போட்ட வாயுடன் புஸ் என ஊத பொடி முழுவதும் ஏட்டையா மூச்சியிலே தெரித்தது.
“யோவ் அறிவில்ல . நிறுத்துவே”.
“அதான் சொன்னேன் எஜமான். ஓட்டைப்பல்லு. ஊதுனா போட்ட பொடி சிந்திரும் அதான் பயந்தேன். நீங்க சொன்னவுடனே தட்ட முடியலை”.
என ஈ என ஓட்டை பல்லை காட்டினார்.
“யோவ் மூஞ்சி போறாவும் பொடிய்யா. தண்ணீ கொண்டாரும்”.
அதற்குள் அருகில் இருந்த அம்மா ஓடிப்போய் தண்ணீர் கொண்டு வந்தார்கள்.
ஏட்டைய்யா மூஞ்சை கழுவினார்.
(முத்துகிளி தொடர்து கூவுவாள்)
¬


