திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மாசித் திருவிழா வருகிற 21ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் மார்ச் 2ஆம் தேதி நடைபெற உள்ளது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் முக்கியத் திருவிழாக்களில் ஒன்றான மாசித் திருவிழா, பிப்ரவரி 21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவை முன்னிட்டு பிப். 20ம் தேதி மாலையில் யானை மீது கொடிப்பட்ட வீதியுலா நடக்கிறது. பிப். 21 (சனிக்கிழமை) அதிகாலை 1 மணிக்கு நடைதிறப்பு, காலை 5 மணிக்கு கொடியேற்றம் நடைபெறுகிறது.
பிப். 25 (5-ஆம் திருவிழா) இரவு குடைவரைவாயில் தீபாராதனை நடைபெறுகிறது. பிப். 27 (7-ஆம் திருவிழா) சண்முகபெருமானின் உருகு சட்டசேவை மற்றும் மாலை சிவ அம்சம் (சிவப்பு சாத்தி) கோலத்தில் வீதியுலா நடைபெறுகிறது. பிப். 28 (8-ஆம் திருவிழா) காலை பிரம்மா அம்சம் (வெள்ளை சாத்தி) மற்றும் மதியம் விஷ்ணு அம்சம் (பச்சை சாத்தி) கோலத்தில் வீதியுலா நடைபெறுகிறது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் மார்ச் 2ஆம் தேதி நடைபெற உள்ளது. மார்ச் 3ல் தெப்ப உற்சவம் நடைபெறுகிறது. மார்ச் 4ம் தேதி திருவிழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளைத் தக்கார் ரா. அருள்முருகன் மற்றும் இணை ஆணையர் க. ராமு உள்ளிட்ட கோயில் பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.


