தூத்துக்குடி இனிகோ நகர் கடற்கரைப் பகுதியில் இருந்து கடல் வழியாக இலங்கைக்குக் கடத்துவதற்காக ஆட்டோவில் கொண்டு வரப்பட்ட சுமார் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான 8 மூட்டை வாசனை ஷாம்புகளைக் க்யூ பிரிவு போலீசார் இன்று அதிகாலையில் அதிரடியாகப் பறிமுதல் செய்து, கடத்தலில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுநரைக் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி நகர உட்கோட்டம், தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இனிகோ நகர் கடற்கரைப் பகுதியில் இருந்து கடல் வழியாக இலங்கைக்குப் பொருட்கள் கடத்தப்படுவதாகக் க்யூ பிரிவு காவல் ஆய்வாளர் விஜய் அனிதாவுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன் பேரில், உதவி ஆய்வாளர் ராமச்சந்திரன், சிறப்பு உதவி ஆய்வாளர் ராமர், தலைமைக்காவலர்கள் இருதய ராஜ்குமார், இசக்கிமுத்து, காவலர்கள் பழனி, பாலமுருகன் மற்றும் பேச்சுராஜா ஆகியோர் அடங்கிய போலீசார் குழுவினர் நேற்று இரவு முதல் இனிகோ நகர் பகுதியில் தீவிரக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இன்று (19-06-2026) அதிகாலை சுமார் 01:00 மணியளவில், இனிகோ நகர் கடற்கரையின் தெற்குப் புறப் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றிருந்த ஆட்டோவை போலீசார் வளைத்துப் பிடித்துச் சோதனையிட்டனர். அப்போது அந்த ஆட்டோவில் 51 அட்டைப் பெட்டிகளில், 8 மூட்டைகளாகப் பேக் செய்யப்பட்டிருந்த மொத்தம் 48,960 சன்சில்க் மற்றும் கிளினிக் பிளஸ் வாசனை ஷாம்புகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவை அனைத்தும் படகு மூலம் இலங்கைக்குக் கடத்துவதற்காகக் கொண்டு வரப்பட்டது விசாரணையில் உறுதியானது.
இதனைத் தொடர்ந்து, கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட ஆட்டோ மற்றும் சுமார் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான வாசனை ஷாம்பு மூடைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், இக்கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய ஆட்டோ ஓட்டுநரான தூத்துக்குடி தாளமுத்து நகர் அடுத்த வெள்ளைப்பட்டி, அந்தோணியார் கோவில் தெருவைச் சேர்ந்த அந்தோணிராஜ் மகன் மரிய நிசாந்தன் (32) என்பவரை கைது செய்தனர். இக்கடத்தலின் பின்னணியில் உள்ள சர்வதேசக் கடத்தல் கும்பல் மற்றும் படகு உரிமையாளர்கள் குறித்துக் க்யூ பிரிவு போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


