தூத்துக்குடி மார்க்கெட்டில் பொங்கல் பொருட்கள் விற்பனை களைகட்டியுள்ளது. காய்கறி, கரும்பு, மஞ்சள் குலை உள்ளிட்ட பொருள்களை வாங்க பொதுமக்கள் கூட்டம் மோதுகிறது.
பொங்கல் பண்டிகை ஜன. 15ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனால், பொங்கலுக்குத் தேவையான காய்கறிகளை வாங்க தூத்துக்குடி சந்தையில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. கரும்பு, மஞ்சள், கிழங்கு வகைகள், வாழைப் பழம், பானைகள், புதுப்பானைகள் போன்றவற்றை வியாபாரிகள் உற்சாகமாக விற்பனை செய்து வருகின்றனர்
தூத்துக்குடி மார்க்கெட்டில் ஒட்டன்சத்திரம், மதுரை, ஓசூர், பாவூர்சத்திரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து காய்கறிகள், கிழங்கு வகைகள் வந்து குவிந்துள்ளன. மேலும், உடன்குடி, ஏரல், செபத்தையாபுரம், பேய்க்குளம், ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வாழைத் தார்கள் தூத்துக்குடி சந்தையில் வந்து குவியத் தொடங்கியுள்ளன. நாட்டு வாழை ரூ.1000, கதலி, கற்பூரவல்லி, பூலாஞ்சுன்டு உள்ளிட்டவை ரூ. 600 முதல் ரூ. 950, செவ்வாழை ரூ. 1,600 வரையும் விற்பனையானது.

கிழங்கு வகைகள் கிலோ ரூ.60முதல் ரூ.100 வரையும், கத்தரிக்காய், வெண்டைக்காய், அவரைக்காய், கேரட், பீன்ஸ் உள்ளிட்டவை ரூ.50 முதல் ரூ. 70 வரையும், பூசணிக்காய் ரூ. 30, பல்லாரி ரூ. 30, சின்ன வெங்காயம் ரூ. 70, முருங்கைக்காய் வரத்து குறைவு காரணமாக கிலோ ரூ. 400 வரையும் விற்பனையானது. தூத்துக்குடிக்கு மதுரை மாவட்டம், மேலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து கரும்புக் கட்டுகள் வந்துள்ளன. 15 கரும்புகள் கொண்ட ஒரு கட்டு ரூ. 500 வரை விற்பனையானது.


