காயல்பட்டினத்தில் புதுப்பித்து கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையத்திற்கு காயிதே மில்லத் பெயரை சூட்ட வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வலியுறுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ப்ரைமரி ஊழியர் கூட்டம் கட்சியின் தலைமை அலுவலகமான தியாகி பீ.எச்.எம். முஹம்மத் அப்துல் காதிர் மன்ஸிலில், நகர தலைவர் எம்.எஸ். நூஹ் ஸாஹிப் தலைமையில் நடைபெற்றது. தகவல் தொழில் நுட்ப அணி மாவட்ட அமைப்பாளர் எஸ்.கே. சாலிஹ் கிராஅத் ஓதி துவக்கி வைத்தார்.
அண்மையில் காலமான கட்சியின் நிர்வாகிகள், அபிமானிகள், அவர்களது குடும்பத்தாரின் மறைவுக்கு கூட்டத்தில் இரங்கல் தெரிவித்து துஆ செய்யப்பட்டது. தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் மன்னர் பாதுல் அஸ்ஹப் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தி, கூட்ட அறிமுக உரை ஆற்றினார். நகரச் செயலாளர் ஏ.எல்.எஸ். அபூ சாலிஹ் வரவேற்புரையைத் தொடர்ந்து, என்.டீ. முஹம்மத் இஸ்மாஈல் புகாரீ, எம்.கே. முஹம்மத் அலீ என்ற ஹாஜி காக்கா உள்ளிட்டோர் கருத்துரை ஆற்றினர்.
ஹாஃபிள் வி.எம்.டீ. முஹம்மத் ஹஸன், இம்மாதம் 24-ஆம் நாள் அன்று நடைபெற உள்ள தனது மகனின் திருமண நிகழ்ச்சிக்கு தேசிய தலைவர் பேராசிரியர், மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மத் அபூபக்கர், முதன்மை துணைத் தலைவர் எம். அப்துர் ரஹ்மான் உள்ளிட்டோர் வரவுள்ள தகவலைத் தெரிவித்து, அனைவரும் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளரும், தமிழ்நாடு சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும், காயல்பட்டினம் மண்ணின் மைந்தருமான கே.ஏ.எம். முஹம்மத் அபூபக்கர் இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
இக்கூட்டத்தில் மத்திய அரசின் முஸ்லிம் விரோதப் போக்கு வெளிப்படையாக தெரியும் இக்காலச் சூழலில் சமுதாயத்தை எப்படி வழி நடத்துவது என்பது குறித்தும், தூத்துக்குடி மாவட்டத்தில் குறிப்பாக காயல்பட்டினத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய கட்சியின் வளர்ச்சிப் பணிகள், மக்கள் நல பணிகள் குறித்தும், விரைவில் நடைபெற உள்ள தூத்துக்குடி மாவட்ட மாநாடு குறித்து அவர் விளக்கிப் பேசினார்.
கடந்த 15.11.2024. அன்று நடைபெற்ற கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுள், காயல்பட்டினத்தில் புதுப்பித்துக் கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையத்திற்கு கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் பெயரைச் சூட்ட வேண்டும், காயல்பட்டினம் ரயில் நிலைய நடைமேடையை உயர்த்த வேண்டும், கடந்த அதிமுக ஆட்சியின்போது காயல்பட்டினம் நகராட்சியில் மேற்கொள்ளப்பட்ட வார்டு மறு வரையறையில் உள்ள குறைபாடுகளை நீக்கி சீர் செய்ய வேண்டும் என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நகர பொருளாளர் கே.எம்.டீ. சுலைமான் நன்றி கூற, கே.எம். சாமு ஷிஹாபுத்தீன் துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் மாவட்ட – நகர நிர்வாகிகளும், உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.


