சேரன்மகாதேவி ஆற்றில் அற்புதமான ரயில்வே பாலம் இருந்தது உங்களுக்கு தெரியுமா? 1902 ஆம் ஆண்டு நெல்லை டவுணில் இருந்த கல்லிடைக்குறிச்சிக்கு ரயில் பாதை அமைக்கும் போது இந்த பாலத்தினை அமைத்தனர். பிரமாண்டமான இரும்பு பாலம். இதை சுற்றி இரும்பு கூண்டு, இந்த இடத்தில் ரயில் செல்லும் போது மிகச்சிறப்பாக இருக்கும். தாமிரபரணியில் நிறைந்து செல்லும் ஆற்று வெள்ளத்தின் மேல் கூண்டுக்குள் ரயில் வண்டி சிக்கியது போல தூரத்தில் நின்று பார்த்தால் தெரியும். சினிமா காரர்களுக்கு நெல்லை வந்தால், பாடல் காட்சிகள், சண்டை காட்சிகள் என இந்த பாலத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து காட்டுவார்கள்.
தற்போது இந்த பாலத்தினை உடைத்து விட்டு அகல ரயில் பாதை அமைத்து விட்டனர். இதே தடத்தில் ரயில்வே பாதை அமைக்க முடியாமல் அருகில் தனியாக பாலம் அமைத்து விட்டனர். பழைய ரயில் கூண்டு பாலத்தினை அப்படியே காட்சி பொருளாக விட்டிருக்கலாம். நினைவு சின்னமாக இருந்திருக்கும். ஆனால் அதை கழற்றி விட்டு பாலத்தின் சுவரை மட்டும் அப்படியே விட்டு விட்டனர். அந்த சுவரின் வேலைப்பாடே மிக அழகாய் உள்ளது. கூண்டு பாலம் இல்லாவிட்டாலும் கப்பல் இழந்த கடல் போல் காட்சியளித்தாலும், கம்பீரமாய் உள்ளது.

படத்தில் நான் இளமையாக ரயில்வே கூண்டு பாலம் முன்பு நின்று எடுத்த படம், அடுத்து அதே வழிதடத்தில் பாலமும் கூண்டும் இல்லாமல் நான் மட்டும் முதுமையாக நின்று எடுத்த தற்போதைய படம். அடுத்த படத்தில் புதிய ரயில் பாதையில் நான் நிற்கும் படம். எதையோ இழந்து விட்டது போல நமக்கு தோன்றுகிறதா?


