பிரணப் குமார் முகர்ஜி (11 திசம்பர் 1935 – 31 ஆகத்து 2020), இந்திய அரசியல்வாதி. 13 ஆவது இந்தியக் குடியரசுத் தலைவராக 2012 முதல் 2017 வரை பதவி வகித்தவர். மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த மூத்த காங்கிரசு அரசியல்வாதியான பிரணப், குடியரசுத் தலைவர் ஆகும் முன்னர் மன்மோகன் சிங் அரசில் நிதி அமைச்சர் ஆக இருந்தார்.முன்னதாக கல்கத்தா பல்கலைக்கழகத்திலிருந்து சட்டப் பட்டத்தைப் பெற்றுள்ளார்.
2012ஆம் ஆண்டு சூலையில் நடந்த இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தலில் பதியப்பட்ட 10,29,750 வாக்குகளில் 69.3% வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.சூலை 25, 2012 அன்று இந்தியக் குடியரசின் பதினான்காவது குடியரசுத் தலைவராகப் ,பதின்மூன்றாவது நபராக) பொறுப்பேற்றார்.
மேற்கு வங்காளம் மாநிலம் பிர்பும் மாவட்டத்தில் உள்ள மிரதி எனும் கிராமத்தில் பிறந்தவர். தந்தை கமதா கின்கர் முகர்ஜி, தாயார் ராஜலட்சுமி. இவரின் தந்தை 1952-64 வரை மேற்கு வங்காளம் மாநில சட்ட மேலவை உறுப்பினராக இருந்தார் . இவர் 1957ம் ஆண்டு ஜூலை 13ம் தேதி சுவ்ரா என்பவரை மணந்தார். இவர்களுக்கு அபிஜித், இந்திரஜித் என்ற மகன்களும், சர்மிஷ்தா என்ற மகளும் உள்ளனர். அபிஜித், மேற்கு வங்காள காங்கிரஸ் கட்சியின் ஜஙிபுர் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார், மகள் கதக் நடன கலைஞராக உள்ளார்.


