சட்டப்பேரவையில் 110-வது விதியின் கீழ், தூத்துக்குடியில் ரூ.20,800 கோடி மதிப்பீட்டில் 1,600 மெகாவாட் திறன் கொண்ட புதிய அனல் மின் நிலையம், பால் கொள்முதல் விலை உயர்வு உட்படப் பல முக்கியத் தொழில் மற்றும் கட்டமைப்பு மேம்பாட்டு அறிவிப்புகளைத் தமிழ்நாடு முதல்வர் வெளியிட்டார்.

தூத்துக்குடியில் புதிய அனல் மின் நிலையம்:

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் தற்போதுள்ள பழமையான 5 அலகுகளுக்குப் பதிலாக, பொது மற்றும் தனியார் கூட்டாண்மை முறையில் தலா 800 மெகாவாட் திறன்கொண்ட 2 புதிய அலகுகளுடன், மொத்தம் 1,600 மெகாவாட் திறன் கொண்ட புதிய அனல் மின் நிலையம் ரூ.20,800 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும்.

மின் கட்டமைப்புகள் மேம்பாடு:

மாநிலத்தின் மின் தேவையைப் பூர்த்தி செய்ய ரூ.33,066 கோடி மதிப்பீட்டில் “தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம்” செயல்படுத்தப்படும். இதன் கீழ் 196 புதிய துணை மின் நிலையங்கள் மற்றும் 15,000 கி.மீ. நீள புதிய மின் பாதைகள் அமைக்கப்படும். மேலும், சென்னை மின் பகிர்மானக் கட்டமைப்பை மேம்படுத்த ரூ.1,062 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பால் கொள்முதல் விலை உயர்வு:

கறவை மாடுகளுக்கான தீவன விலையேற்றத்தைக் கருத்தில் கொண்டு, பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்றுப் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு மேலும் ரூ.3 உயர்த்தப்பட்டு, ரூ.44 ஆக வழங்கப்படும். இதனால் அரசுக்கு ஆண்டிற்கு ரூ.720 கோடி கூடுதல் செலவாகும்.

தொழில் துறை அறிவிப்புகள்:

காஞ்சிபுரம்: மதுரமங்கலத்தில் சிப்காட் மூலம் ரூ.175 கோடியில் செமிகண்டெக்டர் மற்றும் மின்னணுவியல் உற்பத்திப் பூங்கா அமைக்கப்படும். இதன் மூலம் ரூ.2,000 கோடி முதலீடும், 5,000 பேருக்கு வேலைவாய்ப்பும் உருவாகும்.

கோயம்புத்தூர்: டிட்கோ சார்பில் ரூ.400 கோடியில் டிஜிட்டல் நிதி மையம் அமைக்கப்படும்.

திருச்சிராப்பள்ளி: வர்த்தகம் மற்றும் தொழில் நிறுவனங்களின் வசதிக்காக மண்டல அளவில் “பல்முனை சரக்கு போக்குவரத்து மையம்” ஏற்படுத்தப்படும்.