ஆதிச்சநல்லூரில் உலக தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைப்பதற்காக முதல் கட்ட பணியாக கடந்த அக்டோபர் மாதம் 10ம் தேதி முதல் மத்திய தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணிகள் நடந்து வருகிறது.
இதற்காக ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் நான்கு இடத்தில் அகழாய்வு குழிகள் தோண்டப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. இந்த அகழாய்வில் 200 வருடங்களுக்கு முன்பு ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்ட சுண்ணாம்பு தளம், 2000 ஆண்டுகள் பழமையான சங்க கால வாழ்விடப்பகுதிகள், இரண்டு அடுக்கு முதுமக்கள் தாழிகள் போன்றவை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதுவரை 13க்கு மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கிடைத்துள்ளன.
இதற்காக திருச்சி மத்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அருண்ராஜ் தலைமையில் ஆய்வாளர்கள் செய்து வருகின்றனர். மழை காலமாக இருக்கும் காரணத்தினால் ஷெட் அமைக்கப்பட்டு பணி விரைவாக நடந்து வருகிறது.
இந்த அகழாய்வு பணிகளை காண பல்வேறு இடங்களில் இருந்து கல்லூரி மாணவ மாணவிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் இன்று தூத்துக்குடி செயிண்ட் மேரீஸ் கல்லூரி வரலாற்று துறை முதலாம் ஆண்டு மாணவிகள் 50க்கு மேற்பட்டவர்கள் அகழாய்வு பணிகளை பார்வையிட வருகை தந்தனர். இவர்களுக்கு மத்திய தொல்லியல் துறை ஆய்வாளர் முத்துக்குமார் விளக்கம் அளித்தார். அவர்கள் 2004 ஆம் ஆண்டு அகழாய்வு நடந்த இடம், தற்போது அகழாய்வு நடைபெறும் இடம் போன்றவற்றை பார்வையிட்டனர்.
இந்த நிகழ்ச்சியில் ஆய்வாளர்கள் ராகவேந்திரா, பாரந்தாமன், அருண், மதுரை உயர்நீதி மன்ற வழககிறஞர் டாக்டர் அழகுமணி, எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, கல்லூரி வரலாற்று துறை தலைவர் முனைவர் மாலினி, உதவி பேராசிரியர்கள் முனைவர் விமலா, முனைவர் ஜெயன் டி அல்மைடா உள்பட பலர் உடன் வந்தனர்.
தொடர்ந்து ஆதிச்சநல்லூருக்கு கல்லூரி மாணவ மாணவிகள் படையெடுத்து வருவது ஆய்வாளர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.


