இந்திரா காந்தி (இந்திரா பிரியதர்சினி காந்தி) இந்தியாவின் மூன்றாவது பிரதமரும், ஒரே இந்திய பெண் பிரதமரும் ஆவார். அவர், இந்தியாவின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேருவின் ஒரே மகளும் ஆவார். இவரது இயற்பெயர் இந்திரா பிரியதர்சினி, ஃபெரோஸ் காந்தியுடனான திருமணத்திற்கு பின் இந்திரா பிரியதர்சினி காந்தியாக மாறினார், சுருக்கமாக இந்திரா காந்தியாக மாறினார்.இந்தியாவின் இரண்டாவது பிரதமராக இருந்த லால் பகதூர் சாஸ்திரியைத் தொடர்ந்து சில நாட்கள் தற்காலிகப் பதவி வகித்த குல்சாரிலால் நந்தாவுக்குப் பின்னர் ஜனவரி 19 1966-இல், பிரதம மந்திரியாகப் பதவியேற்ற இவர் மார்ச் 24 1977 வரை பதவியில் இருந்தார். 1977-இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பெரும் தோல்வியடைந்த இவர் மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெற்ற தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றார். 14 ஜனவரி 1980-இல் பிரதமராக மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்ட இவர் 1984-இல் கொலை செய்யப்படும் வரை பதவியில் இருந்தார்.
இவர் ஒரு சிறந்த அரசியல் திட்டமிடலாளரும், சிந்தனையாளரும் ஆவார். அரசியல் அதிகாரத்துக்கான அசாதாரண பற்றை அவர் கொண்டிருந்தார். ஆணாதிக்க மனப்பாங்கைக் கொண்ட இந்திய சமுதாயத்தில், ஒரு பெண்ணிடம் எதிர்பார்க்கப்படும் தன்மைகளுக்கு மாறாக வலுவான அதிகார பலத்துடன் மிகவுயர்ந்த பதவியிலிருந்து நாட்டை வழி நடத்தினார்.
ஒரு பிரதம மந்திரியாக, அவருக்குக் கிடைக்கக்கூடிய அனைத்து வளங்களையும் பயன்படுத்தி தனது பலத்தையும் அதிகாரத்தையும் வலுப்படுத்திக் கொண்டார். அவருக்கிருந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி, வலு குறைந்த அமைச்சரவைகளை அமைத்துக் கொண்டதாகக் குற்றம் சாட்டுகிறார்கள். இந்திய தேசிய காங்கிரசிலிருந்த பலம் மிக்க முதிர்ந்த தலைவர்களை ஓரங்கட்டினார். இதன் ஒரு அங்கமாக 1969-இல் குடியரசுத் தலைவர் நியமனத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளைத் தொடர்ந்து ஆளும் கட்சியாக இருந்த இந்திய தேசிய காங்கிரஸ் பிளவுபட்டது. இந்திரா காங்கிரஸ் என்று அழைக்கப்பட்ட, இவருடைய தலைமையில் அமைந்த பிரிவு மிகுந்த பலத்துடன் தொடர்ந்தும் ஆட்சியில் இருந்தது.
1971-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் அவரது கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. அச்சமயத்தில், மேற்கு, கிழக்குப் பாகிஸ்தான்களுக்கு இடையில் ஏற்பட்ட பிணக்கில், கிழக்குப் பாகிஸ்தானின் தனிநாட்டுக் கோரிக்கைக்கு ஆதரவாகப் பாகிஸ்தானுடன் போரைத் தொடங்கி, கிழக்குப் பாகிஸ்தானுக்குள் படைகளை அனுப்பினார். இந்த வெற்றிகரமான நடவடிக்கையினால் கிழக்குப் பாகிஸ்தான், பாகிஸ்தானிலிருந்து பிரிந்து வங்காளதேசம் என்ற தனி நாடாகியது.
1975 இல் அவசர நிலையை அறிவித்த இந்திரா காந்தி, அரசியல் சட்டத்தின் 352 ஆவது விதியை பயன்படுத்தி தனக்கான அதிகாரங்களை அதிகப்படுத்திக் கொண்டதன் மூலம் எதிர்க்கட்சிகளை ஒடுக்க முயற்சித்தார் என்று குற்றம் சாட்டப்பட்டார். 19 மாதங்கள் நீடித்த இந்த நெருக்கடி நிலைமை இந்திரா காந்தியின் செல்வாக்கை பெருமளவு பாதித்தது. எனினும் தனது செல்வாக்கை பிழையாக மதிப்பீடு செய்த இவர், தேர்தலை நடத்திப் பெருந் தோல்வியைத் தழுவினார். இவரது சொந்தத் தொகுதியிலேயே தோல்வியடைந்தார். இவருக்கு வாரிசாக வளர்க்கப்படுவதாகச் சொல்லப்பட்ட இவரது இரண்டாவது மகனான சஞ்சய் காந்தியும் தோல்வியைத் தழுவினார்.
எனினும் இவரது கட்சிக்கு மாற்றாகப் பதவியில் அமர்ந்த பல கட்சிக் கூட்டணி, உட்பூசல்கள் காரணமாக அதன் முழுப் பதவிக்காலத்தையும் நிறைவு செய்ய முடியாமல் மூன்று ஆண்டுகளில் கவிழ்ந்தது. இவ்வாறு எதிர்க்கட்சிகளின் இயலாத்தன்மை வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்டதனால், அடுத்து நடைபெற்ற தேர்தலில் இந்திராவையே மக்கள் மீண்டும் தெரிவு செய்தனர். இந்திரா தனது முன்னைய தவறுகளிலிருந்து பாடம் படித்துக்கொண்டார். அவருடைய இரண்டாவது ஆட்சிக்காலம் மிதமான அதிகாரத்துவம் கொண்டதாகவே அமைந்தது.
எனினும் இவரது இந்த ஆட்சிக்காலம் சுமுகமானதாக அமையவில்லை. இக்காலத்தில் இவருக்கு வாரிசாக வரக்கூடியவரென எதிர்பார்க்கப்பட்ட சஞ்சய் காந்தி தானே செலுத்திய விமானத்தில் விழுந்து நொறுங்கியதில் காலமானார். சீக்கியத் தீவிரவாதம் வளர்ந்துவந்தது. சமய மற்றும் தீவிரவாதத் தலைவராக இருந்த ஜர்னைல் சிங் பிந்தரன்வாலேயின் அதிகரித்து வந்த செல்வாக்கு இந்திய ஒருமைப்பாட்டுக்குச் சவாலாக அமையுமென இந்தியத் தலைவர்கள் அஞ்சினார்கள். இந்திரா படையை அனுப்பித் தீவிரவாதிகளை ஒடுக்க எண்ணினார். சீக்கியர்களின் புனிதக் கோயிலான பொற் கோயிலுக்குள் ஆயுதங்களுடன் ஒளிந்திருப்பதாகக் கருதப்பட்ட தீவிரவாதிகளையும், அவர்களின் தலைவரையும் பிடிக்க இராணுவம் பொற்கோயிலுக்குள் புக அனுமதி வழங்கினார். தொடர்ந்து இடம்பெற்ற படை நடவடிக்கைகள் இந்திராவை சீக்கியர்களின் கோபத்துக்கு ஆளாக்கியது. இதன் தொடர்ச்சியாக, அக்டோபர் 31, 1984-இல் சீக்கியர்களான, அவரது சொந்தப் பாதுகாவலர் இருவராலேயே சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்திரா காந்தியின் பிந்தைய ஆண்டுகள் பஞ்சாப் பிரச்சனைகளுடன் தொல்லையில் இருந்தது. பஞ்சாபில் சீக்கியத் தீவிரவாதம் வளர்ந்து வந்தது. சமய மற்றும் தீவிரவாதத் தலைவராக இருந்த ஜர்னைல் சிங் பிந்தரன்வாலேயின் அதிகரித்து வந்த செல்வாக்கு இந்திய ஒருமைப்பாட்டுக்குச் சவாலாக அமையுமென இந்தியத் தலைவர்கள் அஞ்சினார்கள். இந்திரா படையை அனுப்பித் தீவிரவாதிகளை ஒடுக்க எண்ணினார். 1984 ஜூனில், ஜர்னையில் சிங் பிந்தரன்வாலாவின் சிக்கிய சுந்திர போராட்டக் காலிஸ்தான் பிரிவினைவாத குழு, சிக்கியர்களின் புனிதத்தளமான பொற்கோயிலுக்குள் முகாமிட்டிருந்தது. இதனைத் தீர்க்க ஆபரேசன் புளூஸ்டார் என்ற நடவடிக்கை இந்திரா அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டது. சீக்கியர்களின் புனிதக் கோயிலான பொற் கோயிலுக்குள் ஆயுதங்களுடன் ஒளிந்திருப்பதாகக் கருதப்பட்ட தீவிரவாதிகளையும், அவர்களின் தலைவரையும் பிடிக்க இராணுவம் பொற்கோயிலுக்குள் புக அனுமதி வழங்கினார். பொற்கோயிலுக்குள் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இருந்த போதினும், அந்த நேரத்தில் இராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியது. இதில் பொதுமக்களும் பாதிக்கப்பட்டனர். இந்திரா காந்தியின் இந்த நடவடிக்கை சர்வதேச ஊடகத்தால் பெரிதும் கண்டனத்திற்குள்ளானது. பாதிக்கப்பட்ட இராணுவ மற்றும் பொதுமக்களின் எண்ணிக்கையில் அரசாங்க எண்ணிக்கையும், அரசு சார்பற்ற எண்ணிக்கையும் வேறுபடுகிறது. நான்கு அதிகாரிகள், 79 வீரர்கள் மற்றும் 492 சிக்கியர்கள் என்று அரசாங்கம் கணக்கிட்டது; அரசுசாரா கணக்கீடு இதை விட அதிகமாக இருந்தது. ஒருவேளை 500 அல்லது அதற்கு மேலான துருப்புகளும், துப்பாக்கி சூட்டில் சிக்கி கொண்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 3,000 சிக்கியர்களும் இருந்திருக்கலாம். உண்மையான ஆவணங்கள் இல்லாததால், பாதிக்கப்பட்ட பொதுமக்கள் குறித்த துல்லியமான விபரங்கள் சர்ச்சைக்குரியதாக இருந்தது. தாக்குதல் நடத்தப்பட்ட நேரம் மற்றும் முறையும் பரவலாக விமர்சிக்கப்பட்டன. இதைப் பயன்படுத்தி பெரும்பாலான விமர்சனங்கள் சிக்கியர்கள் மீதான ஒரு தனிப்பட்ட தாக்குதல் என்பதாக இந்திரா காந்திக்கு எதிராகத் திருப்பி விடப்பட்டது. சிக்கியர்களின் சுதந்திரம் பற்றிய யோசனைகளையும், காலிஸ்தான் என்றழைக்கப்படும் ஒரு பிரிவினைவாத அரசை உருவாக்குவதற்கான யோசனையையும் போதித்தன் மூலம் “விரோதத்தை” வளர்த்து வந்த பயங்கரவாதி பிந்தரன்வாலேயை முடிவுக்கு கொண்டு வருவதற்காக முன்னெடுக்கப்பட்ட தாக்குதல் என்று கூறி அதை அவர் நியாயப்படுத்தினார்.
தொடர்ந்து இடம்பெற்ற படை நடவடிக்கைகள் இந்திராவை சீக்கியர்களின் கோபத்துக்கு ஆளாக்கியது. இதன் தொடர்ச்சியாக, சீக்கியர்களான, அவரது சொந்தப் பாதுகாவலர் இருவராலேயே சுட்டுக் கொல்லப்பட்டார். இந்திரா காந்திக்கு எண்ணிலடங்கா காவலர்கள் இருந்தனர். அவர்களில் இருவர் சத்வந்த் சிங் மற்றும் பீண்ட் சிங், இருவருமே சீக்கியர்கள். அவர்கள் 1984 அக்டோபர் 31ஆம் தேதி, புதுடெல்லியில் உள்ள எண் 1, சப்தர்ஜங் சாலையில் இருந்த தலைமை அமைச்சரின் வீட்டுத் தோட்டத்தில் தங்களின் சேவை ஆயுதங்களால் இந்திரா காந்தியைப் படுகொலை செய்தனர். ஐரிஷ் தொலைக்காட்சிக்காக பிரிட்டிஷ் நடிகர் பீட்டர் உஸ்தினோவ்வால் ஓர் ஆவணப்படத்திற்கு பேட்டி அளிப்பதற்காக, இந்திரா சத்வந்த் மற்றும் பீண்ட்டின் காவலில் இருந்த விக்கெட் கேட்டைக் கடந்து சென்றார். அந்த சம்பவத்தைத் தொடர்ந்து உடனடியாக கிடைத்த தகவலின்படி, பீண்ட் சிங் அவரின் பக்கவாட்டு ஆயுதத்தால் அவரை மூன்று முறை சுட்டார், சத்வந்த் சிங் ஒரு ஸ்டென் சப்மெஷின் துப்பாக்கியால் 30 ரவுண்டுகள் சுட்டார். அவரின் பிற காவலாளிகளால் பீ்ண்ட் சிங் சுட்டு கொல்லப்பட்டார், சத்வந்த் சிங் சுடப்பட்டு, கைது செய்யப்பட்டார்.


