மக்களுக்காக புதிய தொழில் நுட்பங்களை செயல்படுத்துவதில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி முன்னிலையில் உள்ளது என்று தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை செந்தரரராஜன் பேசினார்.
தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டுவரும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் 102ஆவது நிறுவன தின விழா இன்று தூத்துக்குடி ஏ.வி.எம்.கமலவேல் மஹாலில் வைத்து நடைபெற்றது. விழாவில் தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை செந்தரரராஜன் கலந்து கொண்டு சேலம் மாவட்டம் பேலூரில் வங்கியின் 545ஆவது கிளையை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். பின்னர், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு ஆன்லைன் மூலம் கடனுக்கு விண்ணப்பிக்கும் முறையை தொடங்கி வைத்தார்.
விழாவில் பேசிய அவர், நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பே 1921ஆம் ஆண்டே தொடங்கப்பட்ட இந்த வங்கி சாமானியர்களுக்கு உதவி வருகிறது. வங்கிகள் அரசையும் மக்களையும் இணைக்கும் பாலமாகச் செயல்பட்டு வருகின்றன. மக்களுக்காக புதிய தொழில் நுட்பங்களை செயல்படுத்துவதில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி முன்னிலையில் உள்ளது என்றார். வங்கியின் இயக்குநர்கள் மற்றும் ஊழியர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி எஸ்.கிருஷ்ணன் வரவேற்றார். வங்கியின் முன்னாள் இயக்குநர் சி.எஸ்.ராஜேந்திரன், முன்னாள் இயக்குனர் விக்ரமன் மனைவி லட்சுமி பிரபா விக்ரமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் பொதுமேலாளர்கள், துணை பொது மேலாளர்கள், வங்கி அதிகாரிகள், அலுவலர்கள், ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக நவம்பர் 9ம் தேதி தூத்துக்குடியில் கடன் வழங்கும் முகாம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பிரபல தொழில் அதிபர் இதயம் குழும நிறுவனர் வி.ஆர்.முத்து, விருதுநகர் சரஸ் ஏஜன்சீஸ் மதியழகன், எஸ்.பி.கே.அன் கோ. எஸ்.கருப்பசாமி, தூத்துக்குடி வேலவன் குழுமங்களின் தலைவர் ஏ.தங்கவேல் நாடார், ஸ்ரீ ஜெயஜோதி அன் கோ கே.கோகுல் கண்ணன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.


