தருவை கிராமத்தினை எத்தனை தடவை சுற்றி வந்தாலும் பல்வேறு தகவல்கள் கிடைத்துக் கொண்டே இருக்கிறது.
6.08.2024
மீண்டும் தருவையை நோக்கி கிளம்பினேன். காலை 6 மணிக் கெல்லாம் எனது சிஷ்யன் சுடலை மணிச் செல்வன் வந்து வீட்டுக்கு வெளியே காரை எடுத்துக் கொண்டு வந்தான். எங்களை எதிர்பார்த்து பேரன் நாட்டார் குளம் எஸ்.கே. திருப்பதி புது பஸ் ஸ்டாண்டில் காத்திருந்தார்.
ஸ்ரீஇந்த தடவை பயணத்தில் பல அற்புத தகவல்கள் கிடைக்கும் என உறுதியாக நம்பினேன். காரணம் தோரண மலை பரம்பரை அறங்காவலர் செண் பக ராமன் அய்யாவுக்கு எங்க ளோடு பயணத்துக்கு வந்து விட்டார். நானே எதிர்பார்க்க வில்லை. அவருக்கோ அலுவல்கள் அதிகம். ஆனாலும் எங்கேளோடு களப்பணியாற்ற வந்து விட்டார்.
செண்பகராமன் அய்யா செய்யும் ஆன்மிக பணிக்கும், சமுதாய பணிக்கும் ஈடு இணை எதுவுமே இல்லை. அவர் தந்தை ஓய்வு பெற்ற மறைந்த ஆசிரியர் ஆதிநாரயணன் அவர்கள் வழியில் பல்வேறு திருப்பணிகளை தோரண மலைக்கு செய்து கொண் டிருக்கிறார். ஆவுடையானூர் டாக்டர் தர்மராஜ் அய்யா போன்றோர் உதவியோடு அவர் செய்யும் திருப்பணிக்கு அளவே இல்லை.
1000க்கும் மேற்பட்ட படிகள் கட்டியது, செல்லும் வழியில் மண்டபங்கள் கட்டியது உள்பட பல்வேறு திருப்பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. அதோடு மட்டுமல்லாமல் கோயில் வளாகத்தில் தினமும் அன்ன தானம் நடைபெறுகிறது. கோயில் வளாகத்தில் இலவச நூலகம் இயங்கி வருகிறது. கல்வி கற்கும் மாணவர்கள் , போட்டி தேர்வை சந்திக்கும் மாணவர்களை தயார் படுத்தும் அற்புத நிகழ்வும் தோரண மலை வளாகத்தில் நடைபெறுகிறது. பௌர்ணமி தோறும் கிரிவலம் மிகச்சிறப்பாக நடந்து வருகிறது. விவசாய கருவிகளுக்கு பூஜை செய்து, விவசாயிகளையும் கௌரவித்து, அவர்களை கொண்டு சித்திரை மாத பிறப்பில் பல சமூக பணியாற்றும் திறமை யானவர்களை அழைத்து வந்து அவர்களுக்கு ஆதிநாரயணன் நினைவு தோரண மலையான் விருது வழங்கி கௌரவித்து வருகிறார்.
அதோடு மட்டுமல்லாமல் தான் பிறந்த முத்துமாலையம்மன் புரம் கிராமத்தில் இவர் பங்குக்கு ஒதுக்கப்பட்ட வீட்டை நூலக மாகவும், இடத்தினை விளை யாட்டு மைதானமாகவும் மாற்றி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விட்டிருக்கிறார். இந்த அளவுக்கு சமூக ஆன்மிக பணி செய்யும் இவர்பெரிய குபேரர் அல்ல. சென்னையில் வாடகை வீட்டில் வசித்துக் கொண்டு பொறி யாளராக தனியார் நிறுவனத்தில் பணியாற்றி கொண்டு அந்த வருமானத்தில் தனது மூன்று குழந்தைகளை படிக்க வைத்து பெரியவர்களாக ஆக்கி இருக்கிறார்.
குடும்பபணியையும் செவ்வண செய்து, தான் பணியாற்றும் பொறியாளர் பணியையும் சரியாக செய்துக்கொண்டு இறைப்பணியும் ஆற்றிக் கொண்டிருக்கிறார். விரைவில் தோரணமலை முருகனுக்கு கும்பாபிசேகம் செய்ய வேண்டும் என்பதே இவரது நோக்கம். நிச்சயம் பக்தர்கள் உதவியுடன் செய்து முடித்து விடுவார் என்ற நம்பிக்கை அனைவருக்கும் உண்டு.
தோரணமலை பரம்பரை அறங்காவல் இன்று எங்களோடு தாமிரபரணி களப்பணிக்கு வருகிறார் என்றவுடன் எங்கள் குழுவு-க்கு கூடுதல் சந்தோசம் வந்து விட்டது .
நெல்லை புது பஸ்ஸடாண்டில் செண்பகராமன் அய்யாவும், பேரன் திருப்பதியோடு வந்து இணைந்துகொண்டார். பஸ் நிலையத்தில் நின்ற இருவரையும் எங்கள் காரில் ஏற்றிக்கொண்டு தருவை கிராமத்தினை நோக்கி கிளம்பினோம்.
எனக்கு எப்போதும் தருவையில் உதவி புரியும் இரண்டு பேர். ஒருவர் வெல்டிங் வொர்க்ஷாப் மந்திரி, மற்றொருவர் கேபிள் மந்திரி அவர்கள் இருவரையும் தொடர்ப்பு கொண்டேன். அவர்களுக்கு முக்கிய வேலை இருப்பதால் இன்று வர இயலாத நிலை என்றார். எனவே என்ன செய்ய வென்று தெரியவில்லை. கோபாலசமுத்திரம் நண்பர் நிவேக் அவர்களுக்கு போன் செய்தேன். அவர் எப்படியும் 1 மணி நேரம் கழித்துத் தான் வரஇயலும் என்று கூறிவிட்டார்.
அப்போது தான் எனக்கு ஒரு புதிய நண்பர் நினைவுக்கு வந்தார். கடந்த ஜுலை 14 ந்தேதி மேகலிங்கபுரம் அரசு பொது நூலகத்தில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழா நடந்தது. அந்த விழாவிற்கு தருவையை சேர்ந்த பிச்சுமணி என்பவர் வந்திருந்தார். அவருடன் நான் பேசிக்கொண்டிருக்கும் போது தருவையில் பச்சையாறு தாமிரபரணி ஆற்றுடன் சேரும் இடத்துக்கு செல்ல வேண்டும் என்று கூறினேன். அவர் கண்டிப்பாக தருவை வாருங்கள் நான் கூட்டிக்கொண்டு செல்கிறேன் என்றார். எனவே அவர் போன் எண்ணை தேடினேன் . கிடைக்கவில்லை. எனவே வாசிப்பு இயக்க செயலாளரும் முடிவைத்தானேந்தல் பள்ளி ஆசிரியருமான சரவண குமாருடன் தொடர்ப்பு கொண்டேன். இவர் சிறந்த பேச்சாளர். ஆதிச்சநல்லூருரில் உலக தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அடிக்கல் நாட்டும் போதும் பேச்சாளர். தூத்துக்குடி மாவட்ட ஆட்சி தலைவர் சுதந்திர தினவிழா, குடியரசு தினவிழாவில் அறிவிப்பாளர்.
அவரிடம் பேசினேன். அவர் பிச்சுமணி அய்யாவின் எண் தந்தார். இதற்கிடையில் நூலகர் அகிலனிடம் போனில் பேசினேன். அவரிடம் எனக்கு ஒரு ஆனந்த தகவல் கிடைத்தது. அகிலன் தருவையில்தான் வசிக்கிறேன். எனக்கு பச்சையாறு சங்கம் எனக்கு தெரியும். நானும் உடன் வருகிறேன் என்றார் எனக்கு மிக சந்தோசமாக இருந்தது.
நாங்கள் தருவைக்கு சென்றோம் . அங்குள்ள இசக்கியம்மன் கோயில் எதிரே உள்ள கூரை உணவகத்தில் உணவருந்தினோம். இந்த ஹோட்டல் கிட்டத்தட்ட கேரள மாதிரி தான். அதிகாலை டிபனுக்கும் ஆம்லெட் போட்டு தருகிறார்கள். இங்கு விவசாயிகளுக்கு மட்டுமல்ல, வழிபோக்காக செல்பவர்களும் இங்கு வந்து காலை உணவை சாப்பிட்டு செல்கிறார்கள். நாங்கள் செவ்வாய் கிழமை, நிறைய கோயிலுக்கு போக வேண்டும் என்பதால் சை சாப்பாடு தான் சாப்பிட்டோம்.
காலை உணவை முடிக்கும் போதே அங்கு நூலகர் அகிலனும் வந்து சேர்ந்து விட்டார். இதற்கிடையில் நாங்கள் தேடி வந்த அனைவரும் தருவை பஜாரில் கூடி விட்டார்கள். பிச்சை மணி அய்யா, நிவேக் அய்யா, கேபிள் டிவி மந்திரி அய்யா ஆகியோர் அங்கே நின்று கொண்டிருந்தார்கள். புதிதாக எனக்கு வல்லபபாண்டியன் என்ற நண்பரையும் அறிமுகம் செய்து வைத்தார்கள். இவருக்கு நிறைய விவரங்கள் ஊரைப்பற்றி தெரிகிறது. நிறைய தகவலை கூறினார். அதோடு மட்டுமல்லாமல் தனக்கு உடல் நிலை சரியில்லை என்றாலும், ஊர் வரலாறை பேச வேண்டும் என்றவுடன் முதல் ஆளாக வந்து எங்களிடம் அறிமுகம் செய்து கொண்டார்.
நாங்கள் தாமிரபரணி ஆற்றில் பச்சையாறு சேரும் இடத்துக்கு செல்ல வேண்டும் என்றவுடன் எங்களுக்கு வழிகாட்டியாக பெருமாள் அய்யா நியமிக்கப்பட்டார்கள். அதோடு மட்டுமல்லாமல் நண்பர்கள் எல்லாம் ஆலங்கால் பாலம் என்று சொல்லக்கூடிய பச்சையாறு கரையில் கொண்டு எங்களை விட்டு விட்டு திரும்பினர். தோரணமலை முருகன் கோயில் பிரசாதத்தினை வல்லபன் அய்யாவிடம் செண்பகராமன் அய்யா வழங்கினார்.
பிரசாதத்தினை வாங்கிய அவருக்கு சந்தோசம். தோரண மலை முருகனே எங்களுக்கு அருள் புரிய வந்து விட்டார் என மகிழ்ந்தனர்.
அவர்களிடம் விடைப் பெற்றுக்கொண்டு நாங்கள் பெருமாள் அய்யா தலைமையில் தாமிரபரணி ஆற்றுக்குள் சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் வயல்வெளி வழியாக நடக்க ஆரம்பித்தோம். எங்கு பார்த்தாலும் பச்சைபசேல் என இருக்கும் அவ்விடம் எங்கள் மனதை கொள்ளை கொண்டது.
( நதி வற்றாமல் ஓடும்)