கோவில்பட்டியில் தேசிய நூலகர் தினத்தை முன்னிட்டு 1000 அரசு பள்ளி மாணவிகள் தங்களை நூலக உறுப்பினராக இணைத்துக் கொண்டனர்.
நாடு முழுவதும் ஆகஸ்ட் 12ம் தேதி இந்திய நூலக தந்தை எஸ்.ஆர். அரங்கநாதனின் பிறந்தநாளை தேசிய நூலகர் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியை ஜெயலதா தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியை உஷா ஷோஸ்பின் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் முத்து முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ் ஆசிரியை கெங்கம்மாள் வரவேற்றார். விழாவில் 1000 மாணவிகள் அரசு கிளை நூலகத்தில் நூலக உறுப்பினராக இணைத்துக்கொண்டு, “செல்போன் பயன்பாட்டை குறைத்து பள்ளி பாட புத்தகத்தோடு நூலக புத்தகத்தையும் வாசித்து பொது அறிவை வளர்த்து விரும்பும் துறைகளில்சாதனை புரியவும்,வாசிப்பு பழக்கம் குறித்து அனைவரிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
1000 நூலக உறுப்பினருக்கான கட்டணத் தொகை முப்பதாயிரத்தை சுவிட்சர்லாந்து சங்கமம் தொண்டு நிறுவனம் நூலகத்துறைக்கு வழங்கியது. அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியின் பழைய மாணவியும் மருத்துவருமான கமலா மாரியம்மாள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நூலக உறுப்பினர் அட்டைகளை வழங்கினார். இதில் உதவி தலைமை ஆசிரியர்கள் கண்ணன், சீனிவாசன் உள்பட ஆசிரியர்கள், மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் அறிவியல் ஆசிரியர் பிரிவின் நன்றி கூறினார்.


