தூத்துக்குடியில் 4 நாளாக நடைபெற்ற நெய்தல் கலை விழா நிறைவு பெற்றது. ஆயிரக்கணக்கான மக்கள் கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தனர்.
தூத்துக்குடி மாவட்ட நிா்வாகம் மற்றும் ஸ்பிக்- கிரீன் ஸ்டாா் நிறுவனம் இணைந்து நடத்திய நெய்தல் கலை விழா, தூத்துக்குடி வ.உ.சி கல்லூரி மைதானத்தில் கடந்த 7 ஆம் தேதி தொடங்கியது. தமிழகம் முழுவதும் இருந்து 300-க்கும் மேற்பட்ட கலைஞா்கள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினா். நிறைவு நாளான நேற்று ஞாயிற்றுக்கிழமை பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோா் மைதானத்தில் திரண்டனா்.

நிறைவு விழாவில் தூத்துக்குடி ராஜேந்திரன் குழுவினரின் சிலம்பாட்டம், சக்கரத்தாழ்வாா் குழுவினரின் ஒயிலாட்டம், கனிகா குழுவினரின் சிலம்பாட்டம், முத்துப்பெருமாள் குழுவினரின் கணியான் கூத்து, காயல்பட்டினம் சூபி குழுவினரின் இசை நிகழ்ச்சி, முருகசாமி குழுவினரின் பம்பை, கைச்சிலம்பம், அந்தோணிசாமி குழுவினரின் உவரி களியல் ஆட்டம், ராமா் குழுவினரின் பறையாட்டம், கிடாக்குழி மாரியம்மாள் – இளையராஜா குழுவினரின் இசை நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றன.
நெய்தல் விழா சிறப்பாக நடைபெற உறுதுணையாக இருந்தவா்களுக்கு மக்களவை உறுப்பினா் கனிமொழி பரிசுகளை வழங்கி பாராட்டினாா். நிகழ்ச்சியில், அமைச்சா்கள் பெ. கீதாஜீவன், அனிதா ஆா். ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ், மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி, தமிழ்நாடு மாநில மகளிா் ஆணையத் தலைவா் குமாரி விஜயகுமாா், ஸ்பிக் நிறுவன முழுநேர இயக்குநா் எஸ்.ஆா். ராமகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.


