காந்தியடிகள் இந்திய சுதந்திர போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தவர். பெண்கள் முன்னேற்றம், சமுதாய மறுமலர்ச்சி, தீண்டாமை ஒழிப்பு முதலியவற்றுக்காகவும் அரும் பாடு பட்டார். அவர் தன் வாழ்வில் எளிமையை ஓர் அறமாகப் போற்றினார். இந்தியாவில் அவர் காலடி படாத இடமே இல்லை. அவருக்கு தமிழ்நாட்டின் மீதும் தமிழ்மொழியின் மீதும் அதிகமான பற்று உண்டு.
அதே வேளையில் காந்தியடிகளுக்குத் தமிழ்நாட்டின் மீதும் தமிழ் மக்கள் மீதும் மிகுந்த அன்பு உண்டு. அவர் பலமுறை தமிழ்நாட்டில் பயணம் செய்துள்ளார். அவர் தமிழ்நாட்டுக்கு வரும் போதெல்லாம் பல்வேறு மாற்றங்கள் நடந்துள்ளது. அப்படி பல சம்பவங்களை பற்றி மேகநாதன் அறிந்திருந்தான். ஆகவே தான் காந்தியடிகளை பார்க்க வேண்டும் என ஆசைப்பட்டான். எனவே தான் சைக்கிளில் மிதி மிதி என மிதித்து நாங்குநேரி நோக்கி சென்றான்.
அவன் சைக்கிளை மிதிக்கட்டும், அதற்குள் காந்தியடிகளுக்கும் தமிழகத்துக்குமான நெருக்கத்தினை அலசுவோம்.
1919 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் காந்தியடிகள் சென்னைக்கு வந்தார். அப்போது ஆங்கில அரசு ரெளலட் சட்டம் என்னும் கடுமையான சட்டத்தை நடைமுறைப்படுத்தி இருந்தது. அதனை எதிர்த்துப் பெரிய போராட்டத்தை நடத்தக் காந்தியடிகள் திட்டமிட்டார். அதைப் பற்றிய கருத்தாய்வுக் கூட்டம் இராஜாஜியின் வீட்டில் நடைபெற்றது. காந்தியடிகள், அங்கு ஒரு மெத்தையில் அமர்ந்து இருந்தார். அவருக்கு அருகில் இராஜாஜியும் மற்ற தலைவர்களும் நின்றுகொண்டு இருந்தனர்.
அப்போது அங்கு வந்த பாரதியார் விரைந்து சென்று காந்தியடிகளின் அருகில் அமர்ந்தார்.
“திரு. காந்தி அவர்களே! நான் இன்று மாலை ஒரு பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளேன். அதற்குத் தாங்கள் தலைமைதாங்க முடியுமா?” என்று கேட்டார்.
அவரை அமைதியாக பார்த்த காந்தியடிகள். வித்தியசமான ஒரு மனிதன். முறுக்கு மீசை, தலையில் தலைப்பாக. கவிதத்துவமாக பேசும் அவரின் மொழி நடை. இவையெல்லாம் அவரை கவர்ந்தது. ஆனாலும் அவரால் சரி என்று பதில்சொல்ல இயலவில்லை. ஏன் என்றால் அன்று பல வேலைகள் காந்தியடிகளுக்கு இருந்தது.
எனவே பாரதியாரை நோக்கி “இன்று எனக்கு வேறு பணி இருக்கிறது. உங்கள் பொதுக்கூட்டத்தை நாளை நடத்த முடியுமா?” என்று கேட்டார் .
முண்டாசு கவிஞனோ. தனது உருட்டு விழிகளால் அவரை பார்த்து ” உங்களுக்காக எனது பொதுக்கூடத்தினை மாற்றி வைக்க முடியாது. திட்டமிட்டபடி கூட்டம் நடக்கும். தாங்கள் தொடங்கப்போகும் இயக்கத்துக்கு என் வாழ்த்துகள்” என்று கூறிய பாரதியார் எழுந்தார். அவரை அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்தனர். நாளைக்கு காந்தியடிகள் வருகிறேன் என்கிறார். ஒரு நாள் தானே மாற்றி வைக்கலாமே என்று அனைவரும் நினைத்தனர். ஆனால் பாரதியார் யார் பேச்சையும் எதிர்பார்க்காமல் எழுந்தார்.
“நான் போய் வருகிறேன்” என்று கூறிவிட்டு கோபத்துடன் எழுந்து சென்றுவிட்டார்.
அவரை பார்த்த காந்தியடிகள் அவரின் வித்தியாசமான முண்டாசு தோற்றத்தினை கண்டு இராஜாஜியை நோக்கினார்.
அவர் அருகில் வந்தார், “இவர் யார்?” என்று காந்தி வியப்புடன் கேட்டார்.
“இவர் எங்கள் தமிழ்நாட்டுக் கவிஞர்” என்றார் இராஜாஜி.
“அப்படியா! இவரைப் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும். துடிப்புடன் இருக்கிறார். காரியத்தினை சாதிக்க வல்லவர்” என்றார் காந்தியடிகள்.
பாரதியார் மீது முதல் சந்திப்பிலேயே நல்ல மதிப்பை கொண்டவர் காந்தியடிகள். ஆகவே தான் அவரைப்பற்றி நல்ல மதீப்பீட்டை செய்தார். ஆனால் அவர் நடத்திய கூட்டத்தில்தான் காந்தியடிகள் கலந்துகொள்ள இயலவில்லை.
1921 ஆம் ஆண்டு.
அது செப்டம்பர் மாதம்.
வடகிழக்கு பருவமழை பெய்துகொண்டிருக்கும் நேரம்.
காந்தியடிகள் தமிழ்நாட்டிற்கு வந்தார்.
சென்னையில் இருந்து புகைவண்டியில் மதுரைக்குச் சென்றார்.
எங்கு பார்த்தாலும் உழவுத்தொழில் நடந்துகொண்டிருகிறது. உழவு தொழில் செய்பவர்கள் ஏழை விவசாயிகள்.
அவர் செல்லும் வழியில் பெரும்பாலான மக்கள் இடுப்பில் ஒரு துண்டு மட்டுமே அணிந்து இருப்பதைக் கண்டார்.
அந்த சமயத்தில் காந்தியடிகள் நீளமான வேட்டி. மேல்சட்டை, பெரிய தலைப்பாகை அணிந்து கொண்டிருந்தார்.தனது உடையை தானே பார்க்கிறார். அதே வேளையில் ரயில் சன்னல் வழியே அங்கே வேலை செய்யும் ஏழை மக்களை பார்க்கிறார். இவரது மனது வேதனை கொள்கிறது.
“என்னடா இது நமது இந்தியர்களின் நிலமை இப்படி மோசமாக இருக்கிறதே” என நினைத்தார்.
அவர் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்தது.
“பெரும்பாலான இந்தியர்கள் போதிய உடைகள் இல்லாமல் இருக்கிறார்கள். தான் மட்டும் இவ்வளவு துணிகளை அணிவதா?” என்று சிந்தித்தார்.
அன்று இரவு முழுவதும் அவர் சிந்தனை ஓடியது. “என் மக்கள் அரை குறை ஆடை அணிகிறார்கள். நாம் மட்டும் இப்படி பிரமாண்டமான உடை உடுத்த வேண்டுமா?” என எண்ணினார்.
மறுநாள் முதல் அவர் தனது ஆடம்பர ஆடையை துறந்தார். இடுப்பில் வேட்டியும் மேலே ஒரு துண்டு மட்டுமே அணியத் தொடங்கினார். அவரது தோற்றத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய பெருமை தமிழ்நாட்டுக்கு உண்டு. அந்த எளியக் கோலத்திலேயே தம் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்தார்.
காந்தியடிகளின் உலகம் போற்றிய எளிமைத் திருக்கோலம் இதுவாகும். இந்த கோலம் வெளிநாட்டவர்களை யோசிக்க வைத்த கோலம். அடிமை படுத்தி அடக்கி ஓடுக்கிய ஆங்கிலேயர்களையும் ஆட்டங்காண வைத்த கோலம். காந்தியடிகளின் இந்த கோலமே, அழியாத கோலமாகி விட்டது.
காந்தியடிகள் ஒருமுறை காரைக்குடியைச் சுற்றியுள்ள ஊர்களில் சுற்றுப்பயணம் செய்தார். அப்போது கானாடுகாத்தான் என்னும் ஊரில் ஒருவர் வீட்டில் தங்கி இருந்தார்.
அந்த வீடு மிகவும் ஆடம்பரமாக இருந்தது. வீட்டில் எங்குப் பார்த்தாலும் வெளிநாட்டு அலங்காரப் பொருள்கள் நிறைந்து இருந்தன.
காந்தியடிகள் அந்த அன்பரிடம் “உங்கள் வீட்டை வெளிநாட்டுப் பொருள்களால் அழகு செய்து இருக்கிறீர்கள். அதற்குச் செலவு செய்த பணத்தில் பத்தில் ஒரு பங்கு பணத்தை என்னிடம் கொடுத்தால்போதும். இதைவிட அழகாகச் செய்துவிடுவேன்” என்று கூறினார்.
அதனைக் கேட்டு அன்பர் தலைகுனிந்தார். மறுநாளே தான் வெளிநாட்டு பொருள்களை பயன்படுத்துவதை தவிர்த்தார்.
அந்த வீட்டுக்குக் காந்தியடிகள் மறுமுறை வந்தபோது அங்கே வெளிநாட்டுப் பொருள்கள் ஒன்றுகூட இல்லை. அவரின் தன்மையை கண்டு காந்தியடிகள் மகிழ்வுடன் அவரைப் பாராட்டினார்.
அந்த அளவுக்கு காந்தியடிகள் தமிழகத்தினால் தானும் மாறினார். தமிழ்நாட்டில் உள்ள பலரை மாற்றினார்.
காந்தியடிகள் ஒருமுறை மதுரையில் தங்கி இருந்தார். மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் சென்று வரலாம் என்று தலைவர்கள் அவரை அழைத்தனர்.
“அந்தக் கோவிலுக்குள் செல்ல எல்லா மக்களுக்கும் அனுமதி உண்டா?” என்று காந்தியடிகள் கேட்டார்.
அங்கு இருந்தவர்கள் ‘இல்லை” என்றனர்.
“அப்படியானால் அங்கே வரமாட்டேன்” என்று கூறிவிட்டார்.
தீண்டாமையை அவர் எதிர்த்தார். ஆகவே தான் தீண்டாமை தலைவிரித்தாடிய அந்த தருணத்தில் “தாழ்த்தப்பட்ட மக்களை அனுமதிக்கவில்லையென்றால் நானும்செல்ல மாட்டேன்” என உறுதியாக இருந்தார்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு அந்தக் கோவிலுக்குள் செல்ல அனைவருக்கும் உரிமை உண்டு என்று அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு மதுரைக்கு வந்த போதுதான் காந்தியடிகள் மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் சென்றார்.
இது போன்ற பல சம்பவங்கள் நடந்தது.
குற்றாலத்திலும் இதுபோல ஒரு சம்பவம் நடைபெற்றது. குற்றால அருவியில் நீராட அனைவருக்கும் உரிமை அளிக்கப்பட்டு இருந்தது. ஆனால், அருவிக்குச் செல்லும் வழியில் ஒரு கோவில் இருந்தது. அதன் வழியாகச் செல்ல ஒருசாராருக்குத் தடை இருந்தது. எனவே அனைவரும் அருவியில் நீராட முடியாத நிலை இருந்தது. அதனை அறிந்த காந்தியடிகள் குற்றால அருவியில் நீராட மறுத்துவிட்டார். மனிதர்களிடம் உயர்வு தாழ்வு பாராட்டக் கூடாது என்பதில் காந்தியடிகள் உறுதியாக இருந்தார்.
இந்த இடத்தில் மற்றுமொரு சம்பவத்தினை நினைவு கூற வேண்டும்.
‘குற்றால அருவியில் பார்ப்பனர்கள் மட்டும்தான் குளிக்க முடியும், ஏனைய சாதியைச் சார்ந்த யாரும் குளிக்க கூடாது”, என்றிருந்த ஜாதி வெறியை உடைத்து அனைவரும் குளிக்கலாம் என்று உத்தரவிட்டவர் “ஆஷ்” என்ற வெள்ளைக்கார கலெக்டர் .
ஒரு நாள் ஆஷ் துரை மாலை நேரத்தில் தனது குதிரையோட்டி முத்தா ராவுத்தர் உடன் நடைபயிற்சி போகிறார். நடந்து கொண்டிருந்தவர் காதில் ஏதோ அலறல் சத்தம் பலமாக கேட்கிறது ஓசை வந்த திசை நோக்கினார் ஆஷ் துரை.
அங்கு போவதற்காய் பாதையிலிருந்து இறங்கி குடிசை நோக்கி நடந்தார்.
பின்னால் வந்த ராவுத்தர் ஓடி வந்து “துரை அங்கு போகாதீர்கள்” என்று தடுக்கிறார்.
“ஏன்” என்று வினவினார் துரை.
“அது தாழ்த்தபட்டவர்களின் குடிசை உள்ள இடம். நீங்கள் அங்கு போகக் கூடாது” என்றார் ராவுத்தர்.
ஆஷ் துரை ராவுத்தரை பார்த்து “சரி நான் செல்ல கூடாது என்கிறாய். நீ போய் பார்த்து என்ன சத்தம் என்று தெரிந்து கொண்டு வா” என்றார்.
சேரிக்குள் போன முத்தா ராவுத்தர் திரும்பி வந்து சொன்னார், “முதல் பிரசவம் துரை. சின்ன பொண்ணு ரெண்டு நாளா கத்திக்கிட்டு இருக்காளாம், பிள்ளை வயித்துல தலை மாறிக் கிடக்காம். பரிதாபம், இனி எங்கிட்டு துரை பொழைக்கப் போகுது” என்றார்.
“ஏன் மருத்துவமனைக்கு அழைத்து செல்லலாமே” என்றார் துரை.
“அவங்க ஊருக்குள்ளேயே இவங்க வரக்கூடாதுங்க அய்யா. பின்ன எப்படி வண்டி கட்டி, பிராமண தெருவை தாண்டி டவுனுக்கு இந்த பெண்ணைக் கொண்டு போறது?”, என்றார் ரவுத்தர்.
இவர்கள் பேச்சை கேட்டு சாரட்டில் அமர்ந்திருந்த ஆஷ்துரையின் மனைவி அவசரமாக இறங்கினார். அந்த பெண் இருந்த குடிசையை நோக்கி வேகமாக போனார். அந்த பெண்ணை பார்த்து அதிர்ந்து போனார். அவளின் உடல் நிலமையை கணக்கிட்டார். மருத்துவமனைக்கு கொண்டு சென்றால் ஒரு உயிரையேனும் காப்பாற்றலாம் என முடிவு செய்தார்.
அவரசமாக ஓடிவந்து ஆஷ் துரையிடம். “துரையே அருகில் உள்ள ஊருக்கு இந்த பெண்ணை கொண்டு சென்றால் தாய் அல்லது சேயை காப்பாற்றி விடலாம்” என்றார்.
அதிர்ச்சி அடைந்த ஆஷ்துரை உடனே குதிரையோட்டியிடம் கட்டளையிட்டார்.
“உடனே போய் ஒரு மாட்டு வண்டியை கொண்டு வாருங்கள்”
ராவுத்தரும் ஓடிப்போனார். ஒரு மாட்டு வண்டியுடன் வந்தார். சேரிக்கு சென்று அங்கே மரணத்துக்கு போராடிக்கொண்டிருந்த அந்த கர்ப்பிணியை ஏற்றினர். அதன் பின் அந்த மாட்டு வண்டி அங்கிருந்து பிராமணர்கள் அக்ரஹாரத்துக்கு வந்தது.
அங்கே கூட்டமாக வந்த பிரமாணர்கள் அந்த மாட்டு வண்டியை தடுத்தனர். இதனால் வண்டி ஓட்டுபவர் என்ன செய்ய என்று தெரியாமல் தவித்தார்.
“ஒரு சேரிப்பெண்ணை ஏற்றிப் போகும் வண்டி இப் பாதை வழியே போகக் கூடாது”
குதிரையோட்டி அருகில் வந்தார், “வண்டி கொண்டு வரச் சொன்னது துரையும் அவரின் மனைவியும் தான். இது அரசு உத்தரவு. இதை தடுக்காதீர்கள். தடுத்தால் கலெக்டர் துரை நடவடிக்கை எடுத்து விடுவார் என்று கூறினார்.
ஆனால் அவர்கள் கேட்கவில்லை. யார் சொன்னால் என்ன? எங்கள் தெரு வழியாக சேரிகாரர்கள் செல்லக்கூடாது என தடுத்தனர்.
இனி நாம் போராடி பலன் இல்லை. என்று திரும்பினார் குதிரையோட்டி.
நடந்த விபரத்தை துரையிடம் போய் சொன்னார். இதைக் கேட்ட ஆஷ் துரை கோபமடைந்தார். “என்ன மேல்சாதி கீழ்சாதி. ஒரு பெண்ணை கொலை செய்து விடுவார்கள் போல” என கொதித்து எழுந்தார்.

“அடுத்தவர் மாட்டு வண்டியில் ஏற்றினால் தானே தடுப்பார்கள். நமது சாரட் வண்டியை கொண்டு வாருங்கள். அது அரசுக்கு சொந்தமானது. அதில் ஏற்றுங்கள் . யார் என்ன சொல்லுகிறார்கள் பார்க்கலாம்” என கூறினார்.
“அந்த வண்டியில் ஏற்றி விடலாம். இந்த பிராமணர்கள் விடுவார்களா?” குதிரையோட்டி யோசித்தார்.
அவரின் யோசனை ஆஷ் துரைக்கு புரிந்தது. தான் குதிரையோட்டியின் பக்கதிலேறி அமர்ந்து கொண்டார். அந்த பெண்ணுடன் தனது துணைவியாரை இருக்க செய்தார்.
“இப்போது குதிரையை ஓட்டு. என்ன நடக்கிறது என பார்த்துக்கொள்ளலாம்”. என்றார்.
சாரட் வண்டி அக்கிரஹாரத்திற்குள் நுழைகிறது. பிரமாணர்கள் கூட்டமாய் வந்து வழி மறிக்கிறார்கள். “ஒரு தாழ்த்தப்பட்ட பெண்ணை ஏற்றிக் கொண்டு இந்த அக்கிரஹாரத்துக்குள் வருவது யாராய் இருந்தாலும் அனுமதிக்கமுடியாது” என்கிறார்கள்.
ஆஷ்துரை அதிகாரமாக சொன்னார். “இங்கே பாருங்கள். தடுத்தால் உங்களை அரசு தரப்பில் தண்டனைக்கு உள்ளாக்குவேன்” என்றார்.
ஆனாலும் அவர்கள் வண்டியை மறித்தனர். “வண்டியைக் கிளப்பு” என்று உத்தரவிடுகிறார். மீறி வழி மறித்த பிராமணர்கள் மீது சவுக்கடி விழுந்தது. அவர்களின் முதுகுத் தோல் துரை வீசிய குதிரை சவுக்கால் புண்ணாக்கப்படுகிறது. “அய்யோ” என கத்தியப்படி அவர்கள் வழிவிட்டனர்.
அந்த பெண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு காப்பாற்றப்பட்டாள்.
குற்றாலத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் குளிக்க கூடாது என்பதை மாற்றி அவர்களை குளிக்க வைத்தவர் ஆஷ் துரைதான். ஆனாலும் குற்றாலத்தில் அனைவரும் குளிக்கலாம் என சட்டமிருந்தாலும் இங்குள்ள கோயில் வழியாக அருவிக்குள் நுழைய முடியாது என்ற நிலை அவர் காலத்துக்கு பிறகும் தொடர்ந்தது.
இந்த வேளையில்தான் காந்தியடிகள் குற்றாலம் வருகிறார். “தாழ்த்தப்பட்டவர்கள் நுழைய முடியாத இடத்திற்கு சென்று நான் குளிக்க தயாராக இல்லை” என அவர் திரும்பி விட்டார்.
காந்தியடிகள் தமக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பைப் பற்றிப் பலமுறை பல கூட்டத்தில் பேசியுள்ளார். தென்னாப் பிரிக்காவில் வாழ்ந்த காலத்தில் தமிழ்மொழியைக் கற்கத் தொடங்கியதாகக் கூறியுள்ளார். ஜி.யு.போப் எழுதிய தமிழ்க் கையேடு தம்மைக் கவர்ந்ததாகவும் குறிப்பிட்டு உள்ளார். திருக்குறள் அவரைப் பெரிதும் கவர்ந்த நூலாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மொத்தத்தில் அவர் தமிழை நேசித்துள்ளார்.

தமிழ்நாட்டில் காந்தியடிகள் வந்த போது நடந்த சம்பவங்களை வைத்துப்பார்க்கும் போது, ஏற்றத்தாழ்வு அற்ற சமுதாயம் மலர வேண்டும் என்னும் காந்தியடிகளின் உள்ளத்தில் ஏற்பட்ட உறுதியை அறிந்து கொள்ளலாம்.
ஆகவே தான் மேகநாதனுக்கு காந்தியடிகள் மீது மிகுந்த பற்று ஏற்பட்டது. ஆஷ் துரை தடையை நீக்க பாடுப்பட்ட குற்றாலம் அருவி குளியல் பிரச்சனையில் பாதிக்கப்பட்டவர்கள் நாடார்களும் ஆவர்.
குறிப்பாக நாடார்கள் தாழ்த்தப்பட்டவர்கள் என கருதப்பட்டு அவர்களும் குற்றாலத்தில் குளிக்க தடுக்கப்பட்டார்கள். அவர்களை குற்றாலத்தில் குளிக்க வைத்தவர் ஆஷ் துரை என்றால், அவர்கள் நடமாட முடியாத கோயில் வழியாக சென்று குற்றாலத்தில் குளிக்கமாட்டேன் என்று முடிவு செய்தவர் காந்தியடிகள். எனவே தான் மேகநாதனுக்கு காந்தியை மிகவும் பிடிக்கும். விடுதலைப்போராட்டம் ஒரு புறம் இருந்தாலும், தன்னை ஈன்றெடுத்த நாடார் சமுதாயம் மீதும் அவருக்கு பற்றி இருந்தது. எனவே அவர்களுக்கு இழிவு செய்யும் செயல் செய்பவர்களை கண்டித்த காந்தியடிகள் மீது கூடுதலாக பாசம் இருந்தது. எனவே தான் காந்தியடிகளை பார்க்க திசையன் விளையில் இருந்து கிளம்பினார்கள்.
மாலையப்பபிள்ளை மேநாதனை அழைத்துக்கொண்டு நாங்குநேரிக்கு சென்றார். சில இடத்தில் சிறுவனான மேகநாதனுக்கு சைக்கிள் அழுத்த முடியவில்லை. எனவே மாலையப்பிள்ளை சைக்கிளை அழுத்தினார். இருவரும் ஒருவர் மாறி ஒருவர் சைக்கிளை அழுத்திக்கொண்டு நாங்குனேரி வந்து சேர்ந்தார்.
நாகர்கோவிலிலிருந்து வில்லுவண்டியில் திருநெல்வேலிக்குச் சென்ற காந்தியடிகள் வழியில் நாங்குநேரியில் நின்றார்.
அவரை கண்டவுடன் அங்கிருந்தவர்கள் முண்டியடித்துக் கொண்டு முன்னேறி சென்றனர். மேகநாதனும் விடவில்லை. முண்டியடித்துக்கொண்டு முதல் ஆளாக போய் நின்றார்.

சிறுவன் ஒருவன் தன்னை பார்க்க வந்திருக்கிறான் என்றவுடன் காந்தியடிகள் அவனை நோக்கி புன்னகை வீசினார்.
அந்த புன்னகை மேகநாதனை அவர் மீது பாசத்தில் கட்டிப்போட்டது. ஏற்கனவே விடுதலை வேட்கையில் சிக்கி தவித்த மேகநாதன் மகாத்மாவின் புன்சிரிப்பில் விடுதலை போராட்டம் எனும் நீரோடையில் மூழ்கியே போய் விட்டான்.
அவர் பேசியது சிறிது நேரம் தான். அந்த நேரத்தில் அவர் பேசியது என்ன என்று கூட அவனுக்கு புரியவில்லை. சாதிகளை போக்க வேண்டி நமக்காக குற்றால அருவியில் கூட குளிக்காமல் வந்தவர்கள் அல்லவா இவர். தமிழ்நாட்டில் உள்ள மக்களை பார்த்து, ஏழைகளை பார்த்து தன்னுடைய பகட்டான உடைகளையெல்லாம் துறந்து சாதாரணமான வேஷ்டி துண்டில் இருக்கும் காந்தியடிகளை பார்க்கிறான்.
இவர் அல்லவா மகாத்மா. இவர் வழியில்தான் நாம் செல்ல வேண்டும். இந்தியாவை அந்நியர்களிடம் இருந்து மீட்க வேண்டும். மீட்பதற்காக எந்த நடவடிக்கையும் எடுக்க தவறகூடாது என உறுதி பூண்டான் மேக நாதன்.
அதன் பின் முழுநேர விடுதலைபோராட்ட வீரர் ஆனான் மேகநாதன்.
சில நாள்கள் தான் சென்று இருந்தது.-
நாங்குநேரி வட்ட காங்கிரஸ் கட்சியின் அரசியல் மாநாடு திசையன் விளையில் நடந்தது.
அந்த மாநாட்டை துவங்கி வைக்க இராஜாஜி வந்திருந்தார். அந்த சமயத்தில் பாப்பான் குளம் சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.
அவ்விடத்துக்கு சென்றார் மேகநாதன்.
சொக்கலிங்கம் அவர்களிடம் நான் தொண்டனாகச் சேர வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். நான் ராஜாஜியை பார்க்க வேண்டும் எனவும் கூறினார்.
பழைய சேலம் மாவட்டத்தின் ஓசூருக்கு அருகில் உள்ள தொரப்பள்ளி கிராமத்தில் பிறந்தவர் ராஜாஜி. இவரைபற்றி நாம் அறிந்துகொள்ள வேண்டும். ஏன் என்றால் குலசேகரபட்டினத்தில் லோன் துரை கொலை செய்யப்பட்ட வழங்கில் மாட்டிக்கொள்ள போகும் நம்மவர்களை காப்பாற்ற இவர்உதவியாக இருந்தவர். அதோடு மட்டுமல்லாமல் இவர் உதவி கிடைக்க காரணமாகஇருந்தவர் நமதுமேகநாதன் தான். எனவே மேகநாதன் வரலாற்றில் ராஜாஜி ஒரு அங்கம் வகிப்பவர். எனவே தான் ராஜாஜி வரலாற்றை இவ்விடத்தில் காணப்போகிறோம். ராஜாஜியின் தந்தை சக்கரவர்த்தி வெங்கடார்யா தாயார் சிங்காரம்மா ஆவார். ராஜாஜியின் பள்ளிக் கல்வி ஒசூரிலும், உயர்நிலைக் கல்வி பெங்களூரில். கல்லூரிக் கல்வி பெங்களூரு சென்னை மாகாணக் கல்லூரியிலும் கழிந்தது. 1898 இல் சித்தூர் திருமலை சம்பங்கி ஐயங்கார் மகள் அலர்மேலு மங்கம்மாளை மணந்தார். மூன்று ஆண்பிள்ளைகள், இரண்டு பெண்பிள்ளைகள் பிறந்தனர். 1900 இல் தமது வழக்கறிஞர் தொழிலை நன்கு நடத்தி வந்தார். பின்னர் அரசியலில் ஈடுபட்டு 1917 இல் சேலம் நகராட்சி உறுப்பினராகவும் பின்னர் நகர தந்தையாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
காங்கிரசில் சேர்ந்து ரெளலத் சட்டத்திற்கெதிரான இயக்கம், ஒத்துழையாமை இயக்கம், வைக்கம் சத்தியாகிரகம் போன்றவற்றில் ஈடுபட்டார். 1930 ஆம் ஆண்டு மகாத்மா காந்தியின் தண்டி யாத்திரையை ஒட்டி வேதாரண்யத்தில் உப்பு சத்தியாகிரகம் நடத்தி சிறை சென்றார்.
இதைப்பற்றியெல்லாம் அறிந்திருந்தார் மேகநாதன். மேலும் ராஜாஜி செய்யும் வழக்கறிஞர் தொழிலையும் அறிந்து வைத்திருந்தார். எனவே அவரை சந்திக்க வேண்டும் என ஆசைப்பட்டார்.
எதிர்பார்த்தபடியே சொக்கலிங்கம் அவர்கள் மேகநாதனை ராஜாஜியிடம் அறிமும் செய்தார். முதல் அறிமுகம் இருவருக்கும் நல்ல அறிமுகமாக அமைந்தது. அதை உற்சாகமாக ஏற்றுக்கொண்டு, அதன் பின் சுதந்திர போரட்டத்தில் ஈடுபட ஆரம்பித்தான். இப்போது கூட இவன் சிறுவன் தான் .
மேகநாதன் வாலிப வயதை தொட வில்லை. ஆனாலும் விடுதலை வேட்கைக்கு குறைவில்லை. விடுதலை போராட்டமும் வலுத்துக்கொண்டே இருந்தது. இவரது போராட்ட குணமும் மாறமல் இருந்தது.
இந்த காலகட்டத்தில் இந்திய விடுதலைப் போராட்டம் தொடர்பாக ஊர்வலங்களோ, பொதுக்கூட்டங்களோ நடத்தக் கூடாதென ஆங்கில அரசால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
மேலை நாட்டுக்காரன் நம் நாட்டில் ஆதிக்கம் செலுத்திக்கொண்டு நம்மை தடை உத்தரவு போடுவதா? தடை உத்தரவு மீறி நாட்டில் உள்ள அனைத்து தலைவர்களும் ஊர்வலங்களும் போராட்டங்களும் நடத்த தயாரானார்கள். அதை கேள்வி பட்டான் மேகநாதன். விடுதலை தாக்கம் கொண்டு கொதித்து எழுந்தான் மேகநாதன். தன்னுடன் நண்பர்களை சேர்த்துக் கொண்டான்.
தேரிக்காட்டில் சிறுவர்கள் அனைவரும் மேகநாதன் தலைமையில் ஒன்று கூடினார்கள். அவர்கள் தடை உத்தரவை மீறி ஊர்வலம் நடத்த வேண்டும் என்று திட்டமிட்டனர்.
“எங்கு நடத்துவது?. எப்படி நடத்துவது?”.
சரியான திட்டத்தினை மேகநாதன் அவர்களிடம் கூறினான்.
மறுநாள்.
திசையன்விளை பஜாரில் அந்தச் சிறுவர்கள் ஒன்று கூடினர். வந்தே மாதரம் என்று முழங்கியபடியே ஊர்வலத்தினை தொடங்கினர்.
சிறுவர்கள் தடை உத்தரவை மீறி -ஊர்வலம் வருகிறார்கள். அவர்களை எப்படி போலீஸ் கட்டுப்படுத்தும். அவர்களை சிறையில் அடைக்க முடியாது எனவே போலிசார் அவர்களை விரட்டித்தான் விடவேண்டும்.
மேகநாதனை போலவே அவனின் நண்பர்களும் முரண்டு பிடிப்பவர்கள். போலிசை பார்த்து பயந்து ஓடுபவர்கள் அல்ல. எனவே அவர்களை விரட்டி விட மிகவும் கஷ்டப்பட்டனர் போலிசார்.
இதனால் போலிசுக்கு கோபம் அதிகமாக இருந்தது. “சின்ன பயலுவ இப்படி நமக்கு தண்ணீ காட்டுறானுவளே” என கோபம் கொண்டனர்.
திசையன்விளையில் ஊர்வலமாக வந்த சிறுவர்களை மடக்கி பிடித்து, அவர்களை முட்டுக்கு கீழ் தாக்கினார்கள். ஆனால் “வந்தே மாதரம்” என்றும் “ஜெய்ஹிந்த்” என்றும் சத்தமிட்டு தேசிய கொடியை பிடித்துக்கொண்டே சிறுவர்கள் அசையாமல் நின்றனர்.
போலிசாருக்கு அதிர்ச்சியாக இருந்தது.
அனைவரும் சிறுவர்கள். இவர்களை முறைப்படி கைது செய்ய முடியாது. பிடித்து தண்டனையும் கொடுக்க முடியாது. கலைத்துதான் விட வேண்டும். மேலிருந்தே உத்தரவு . ஆனால் இந்த சிறுவர்கள் அசையாமல் நிற்கிறார்களே. அடியை கண்டு அஞ்சவில்லையே என நினைத்தனர்.
அவர்களை எப்படி விரட்ட என தெரியவில்லை. அடித்து அடித்து பார்த்து கைகள் ஓய்ந்து போன நிலையில் போலிசாருக்கு அலுப்பு ஏற்பட்டது. இதற்கிடையில் சூரியனும் மறைந்து விட்டான். இனி என்ன செய்ய என்று அவர்களை அப்படியே விட்டு விட்டு சென்று விட்டனர்.
ஆனால் இவர்களுக்கெல்லாம் சிறு வயதிலேயே தலைமை பொறுப்பை ஏற்று இருந்த மேகநாதனை பார்த்து கோபம் வந்தது. ஒரு போலீஸ் காரன் அருகே வந்தான். மேகநாதனை முறைத்துப் பார்த்தான். தனது பூஸ்ட் காலால் அவனை உதைத்து விட்டு சென்றார்.
சிறுவர்கள் எல்லாம் எழுந்து நடக்க முடியாமல் நடந்தனர். முழங்காலுக்கு கீழே அடி விழுந்த காரணத்தினால் நடக்க முடியாமல் தவித்தனர்.
ஆனாலும் மனதில் வலு விருந்தது. “ஜெய்ஹிந்த்” என கத்தியப்படியே வீடு வந்து சேர்ந்தனர். அன்று இரவு வலி தாங்க முடியாமல் தவித்தனர். ஆனாலும் சுதந்திர தாகம் மட்டும் தனியவே இல்லை.
மேகநாதன் திசையன் விளை இரட்சண்ய மூர்த்தி பாடசாலையில் படித்துக்கொண்டிருந்தான்.
அந்தப் பள்ளியில் நடைபெற்ற நாடகங்கள், கலைநிகழ்ச்சிகள், பேச்சுப் போட்டி மற்றும் பாட்டுப் போட்டி அனைத்திலும் பங்கு பெறுவான். அதில் இவன் தான் முன் நின்று நடத்துவான். அதோடு மட்டுமல்லாமல் பாட்டு, ஆடல் கலைநிகழ்ச்சி என பிரமாண்டப்படுத்துவான்.
அந்த சமயத்தில் தான் அந்த பாடல் பட்டித்தொட்டி எங்கும் ஒலித்துக்கொண்டிருந்தது. அது ஒரு சுதந்திர பாடல்.
“வெள்ளைக்கார சைக்கிளுக்குப் பெல் இல்லை, பிரேக் இல்லை. மக்கார்டு இல்லை.”
இந்த பாட்டு மேகநாதனுக்கு ரொம்ப பிடிக்கும். எனவே பிரபலமான அந்த பாடலை பள்ளி மேடையில் இவர் பாடும் போது கைத்தட்டு பறந்தது.
இது இவருக்கு மேலும் உற்சாகத்தினை ஏற்படுத்தியது.

சாதாரணமாக பள்ளியை விட்டு வெளியே செல்லும் போது கூட, வெள்ளக்கார சைக்கிளுக்குப் பெல் இல்லை, பிரேக் இல்லை, மக்கார்டு இல்லை எனப் பாடிக்கொண்டே செல்வான். அவனுடன் படிக்கும் மாணவர்களும் அந்தப்பாடலை பாடுவார்கள்.
இதைப்பற்றி யெல்லாம் கேள்விப்பட்ட பெற்றோர் களுக்கு பயமாகத்தான் இருந்தது. ஆனாலும் பையனின் ஆசைக்கு அவர்களால் தடை போட இயலவில்லை.
திசையன்விளைப்பள்ளியில் 8 வது வகுப்பு படித்து முடித்தான். அடுத்து 9 வது வகுப்பு படிக்க வேண்டும். இவரை எந்த பள்ளியில் படிக்க வைக்க என பெற்றோர்கள் யோசித்தனர். அந்த சமயத்தில் மெஞ்ஞானபுரம் பள்ளியை தேர்ந்தெடுத்தார் அவரது தந்தையார்.
இவருக்கு அந்த பள்ளிக்கு போக தயக்கமாகத்தான் இருந்தது. அவ்வூரில் ஆங்கிலேயர்களுக்கு ஆதரவு அதிகமாக இருப்பதை அறிந்திருந்தான். எனவே தான் மேகநாதன் தயக்கம் காட்டினான். அவர் தயங்கியப்படியே அந்த பள்ளியில் ஒரு சம்பவம் நடந்தது.
அந்தப் பள்ளியில் தம்பான் என்ற ஆசிரியர் இருந்தார். அவர் எப்போதும் வெள்ளையரின் புகழ் பாடிக் கொண்டேயிருப்பார். இங்கிலாந்தின் சிறப்புக்கள் குறித்து அடிக்கடி பேசுவார். ஒருநாள் அவர் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அந்த வகுப்பில் மேகநாதனும் இருந்தான்.
அவர் வகுப்பு எடுக்கும் போது “ஆஸ்திரேலியாவில் கங்காரு என்ற பிராணி தன் குட்டியை வயிற்றில் சுமந்து கொண்டிருக்கும்” எனக் கூறினார்.
அவர் மீது வெறுப்புற்றிருந்த மேகநாதன் எழுந்தான். “நம் ஊரில் இருக்கும் வெள்ளாட்டிற்கும், செம்மறி ஆட்டிற்கும் வித்தியாசம் தெரியாத மாணவர்கள் மத்தியில் ஆஸ்திரேலியா விலுள்ள பிராணியைப் பற்றிப் பேசுவது என்ன நியாயம்?” என்றான்.
தம்பான் வாத்தியாருக்கு கோபம் வந்தது. தன்னை எதிர்த்து மாணவன் பேசுகிறான் என்றவுடன் கோபமடைந்தார். “அதிகப் பிரசங்கி! பெஞ்ச் மீது ஏறி நில்” என்றார்.
அதைப்பற்றி கவலைப்படாமல் பெஞ்சு மேல் ஏறி நின்றான் மேகநாதன். அன்று மாலை வரை பெஞ்சு மேலே நிறுத்தி வைத்திருந்தார் வாத்தியார். ஆனால் அவன் கவலைப்படவில்லை. நம்ம நாட்டைப்பற்றி பேசாமல் மற்ற நாட்டைப் பற்றி பேசும் வாத்தியாரை கடுமையாக கண்டித்தார்.
இந்தச் சம்பவம் நடைபெற்ற சில தினங்கள் கழித்து. மாணவர்களை குற்றாலத்திற்கு அழைத்துச் சென்றனர் ஆசிரியர்கள். அங்குச் சென்ற பின்னர் ஒரிடத்தில் மாணவர்களை கூடச்செய்தனர். அங்கு இந்து மாணவர்களையும், கிறிஸ்தவப் பாடல்களைப் பாடச் சொன்னார்கள்.
அதோடு மட்டுமல்லாமல் அங்குச் சென்றிருந்த அனைத்து இந்து மாணவர்களுக்கும் ஞானஸ்நானம் கொடுப்பதற்கு ஏற்பாடு செய்திருந்தனர். நிலைமையைப் புரிந்து கொண்டான் மேகநாதன். இந்து மாணவர்கள் அனைவரையும் தனியாக அழைத்தான். நம்மை மதம் மாற்றப்பார்க்கிறார்கள். நாம் தப்பித்து விடுவோம்” எனக் கூறினான். ஆனால் ஆசிரியர்களுக்கு பயந்து போன பல மாணவர்கள் அவர் கருத்தைக் கேட்க மறுத்து விட்டனர்.
இராமசாமி என்ற ஒரேயொரு மாணவன் மட்டும் மேகநாதனுடன் வருவதற்குச் சம்மதம் தெரிவித்தான்.
மறு நாள் காலையில் தேனருவி அருகே வைத்துதான் ஞானஸ்தானம் எடுக்க வேண்டும். எனவே அந்த சமயத்தில் எப்படி தப்புவது என மேகநாதன் யோசித்துக்கொண்டே இருந்தான்.
மறுநாள் காலை மாணவர்களைத் தேனருவிக்கு அழைத்துச் சென்றார்கள். மிகவும் கடுமையான காடு. குற்றாலத்துக்கு மேலே சென்று, அதன் பின் சிற்றாறங்கரைகரையில் அவர்களை நடத்தித் கூட்டிச்சென்றனர். செண்பகாதேவி அருவி, செண்பகாதேவி அம்மன் கோயில் வழியாக காட்டுக்குள் அழைத்துச்சென்றனர்.
ஆங்கிலேயர்கள் இங்கு செல்லும் பாதையில் இரும்பு பாலம் அமைத்து வைத்திருந்தனர். சில இடங்களில் சங்கிலி போட்டு அதை பிடித்துக்கொண்ட நடக்க ஏற்பாடு செய்திருந்தனர். அங்கே மாணவர்கள் மிகவும் கடினமாக பயணம் மேற்கொண்டனர். அப்போது மேகநாதனும், இராமசாமியும் எல்லோருக்கும் பின்னால் கடைசியாகச் சென்றார்கள். வேகமாக நடங்கடா என ஆசிரியர் கூறும்போது, “எங்களுக்கு நடக்க கஷ்டமாக இருக்கிறது” என்று பொய் கூறினர்.
ஆசிரியர்களும், மற்ற மாணவர்களும் வெகுதூரம் முன்னால் சென்றனர். ஆனால் மேகநாதனும் இராமசாமியும் மெதுவாக நடந்தனர். ஏற்கனவே கையில் தீப்பெட்டியை வைத்திருந்தார்கள். ஓரிடத்தில் உயரமான இடத்தில் இருந்து தேனருவி பொங்கி பெருக்கெடுத்து பாய்ந்தது. அதன் ஓ என்ற இறைச்சல் யாரும் சத்தம் போட்டால் கூட ஒருவருக்கு ஒருவர் கேட்காது. அந்த சமயத்தில் இருவரும் தரையில் படர்ந்திருந்த காய்ந்த புற்களின் மீது தீயைப் பற்ற வைத்தனர். அங்கிருந்த புற்களில் சரசரவென்று தீப்பற்றியது. முன்னால் சென்றவர்கள் என்ன நடக்கிறது என்று தெரியாமல் தவித்தனர்.
இந்த சமயத்தினை பயன்படுத்தி அங்கிருந்து மலைக்கு கீழே ஒடி வந்தனர். அதன் பின் குற்றாலம் மெயினரு விக்கு வந்தனர். அங்கே தயார் நிலையில் வந்து நின்ற பேருந்தில் ஏறி தென்காசிக்கு ஓடி விட்டனர்.
தென்காசி போய் இறங்கிய இருவரும் எதைப்பற்றியும் கவலை படவில்லை. நல்லவேளை அவர்களிடம் இருந்து தப்பித்து வந்து விட்டோம் என சந்தோசப்பட்டனர். அதன் பின் தென்காசியில் ‘பயாஸ் கோப்’ படம் பார்த்தனர்.
அங்கிருந்து திருநெல்வேலிக்கு பஸ் ஏறி, திசையன் விளை வந்து படுக்கப்பத்தில் உள்ள வீட்டுக்கு வந்து சேர்ந்தனர்.
அவர்களிடம் நடந்த விஜயத்தினை கேள்விப்பட்டனர் பெற்றோர். இனி மெஞ்ஞான புரத்துக்கு பள்ளியில் கல்வி கற்க அனுப்பினால் பிரச்சனை ஏற்படும் என்று முடிவு செய்தனர்.
அதன் பின்பு சில நாட்கள் வீட்டிலேயே மேகநாதன் இருந்தான். படிப்பு இல்லாமல் இருந்தால் இவன் வாழ்க்கை வீணாகி விடும் என பெற்றோர் மன வருத்தம் பட்டனர்.
இவரது தந்தையார் திருச்செந்தூர் அரசுப் பள்ளிக்கு அழைத்துச்சென்று மீண்டும் 9 ஆம் வகுப்பில் சேர்த்தார். தகவல் அறிந்த அவரது நண்பன் இராமசாமியும் 9ஆம் வகுப்பிற்குத் திருச்செந்தூர் அரசுப்பள்ளிக்கு வந்து சேர்ந்து விட்டான்.
ஆனாலும் அங்கே பிரச்சனை இவர்களை விட்டபாடில்லை.
திருச்செந்தூர் அரசுப் பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்தவர் அருணகிரி முதலியார். அவர் இந்தியத் திருநாட்டிற்கு விடுதலையே வேண்டாம் எனக் கூறி வந்த நீதிக் கட்சியைச் சேர்ந்தவர். அவர் காங்கிரஸ் கட்சியில் ஈடுபாடு கொண்ட மாணவர்களுக்கு அதிக தண்டனை கொடுப்பார்.
அப்படியென்றால் மேகநாதன் நிலை என்னவாகும்.
(குலசேகரபட்டினம் லோன் துரை கொலை வழக்கு தொடரும்)


