கடந்த ஒரு மாத காலமாக பருவமழை அவ்வப்போது பெய்து வருகிறது. இதன் காரணமாக திருநெல்வேலி, தென்காசி மாவட்டப் பகுதிகளில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உள்ள பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது. மேலும் நேற்றைய தினம் திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும், நகர்புற பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக தாமிரபரணி அதிக அளவில் வெள்ளநீர் வந்து கொண்டிருக்கிறது. மேலும் தொடர் மழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் உள்ள முக்கூடல் மற்றும் அரியநாயகிபுரம் அணைக்கட்டுகளில் இருந்து 5400 கனஅடி நீர் நேற்று இரவு திறந்து விடப்பட்டுள்ளது.
இந்த வெள்ள நீர் இன்று காலை தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றில் உள்ள மிக நீளமான சுமார் 4000 அடி நீளம் கொண்ட தடுப்பணையான மருதூர் அணைக்கட்டுக்கு தற்போது வந்து சேர்ந்துள்ளது. இதில் மருதூர் கீழக்கால்வாயில் 1500 கன அடி நீரும், மேலக்காலில் 400 கன அடி நீரும் திறந்து விடப்பட்டுள்ளது. ஆற்றில் அதிக அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கின்ற காரணத்தினால் ஏராளமான அமலைச்செடிகள் அடித்து வரப்படுகிறது. தாமிரபரணி ஆற்றில் உள்ள மருதூர் அணையில் வெள்ள நீர் அணையை தாண்டிச் விழுவது கண்கொள்ளா காட்சியாகும். அதை காண அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் வந்து பார்வையிட்டு செல்கின்றனர். சிலர் ஆபத்தை உணராமல் ஆற்றில் இறங்கி குளித்துக் கொண்டிருக்கின்றனர்.
ஏற்கனவே தாமிரபரணி ஆற்றில் அதிக அளவில் நீர் வரும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. மேலும் ஆற்றில் இறங்கவும், நீராடவும் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஆற்றில் பொதுமக்கள் இறங்குவதை தடுக்க அந்தந்த பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் கிராம உதவியாளர்கள் மூலம் கண்காணித்திட ஸ்ரீவைகுண்டம், ஏரல் மற்றும் திருச்செந்தூர் வட்டாட்சியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி அறிவுரை வழங்கியுள்ளார்.


