மக்களுக்கான தேவைகளை அறிந்து, மக்களுக்காக பணி செய்யுங்கள் என்று கூட்டு குடிநீர் விநியோக கூட்டத்தில் அமைச்சர் பி.கீதா ஜீவன் பேசினார்.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பாக விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கிராமங்களுக்கு கூட்டு குடிநீர் விநியோகம் செய்வது தொடர்பான ஆலோசனை கூட்டம் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், முன்னிலையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அமைச்சர் பி.கீதா ஜீவன் தெரிவித்த்தாவது : மக்களுக்காக பணி செய்கின்ற அரசு அதிகாரிகள், மக்கள் நலனுக்கான திட்டங்களை நாமே முயற்சி எடுத்து செய்ய வேண்டும். அனைத்து செயல்களுக்கும் அனுமதி பெற்று, செயலூக்கத்துடன் நீங்கள் செய்கின்ற பொழுது எல்லா பிரச்சனைகளையும் எளிதாக தீர்த்து வைக்க முடியும். அதேப்போல் பொதுமக்களிடமிருந்து வரப்பெற்ற கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் சட்டமன்ற உறுப்பினர் அவர்களும் தொகுதி முழுமைக்குமான தேவைகளுக்கான பட்டியலை கொடுத்து விட்டார்கள். அரசு அலுவலர்கள் பொதுமக்களுக்கான தேவைகளை அவர்களது இடத்திற்கு சென்று நேரடியாக ஆய்வு செய்து, முன்னுரிமை அளித்து, சிறு சிறு பழுதுகள், மோட்டார், பைப், குடிநீர் தொட்டி, தண்ணீர் அளவு குறைந்தால் அதற்கான நடவடிக்கைகள் உள்ளிட்ட உடனடியாக செய்ய வேண்டும். மேலும் பணிகளுக்கு துரிதமாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மேல்நிலை நீர்த் தேக்கத்தொட்டி பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.. தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்த பணிகள் அனைத்தும் விரைவில் தொடங்க உள்ளது. அதற்கான அடிப்படை வசதிகளை அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தயார் செய்ய வேண்டும். எங்கெல்லாம் குடிநீர் தொட்டி கட்டப்பட்டுள்ளது ? ஏற்கனவே உள்ள தெரு குடிநீர் குழாய் அல்லது புதிய குழாய்களுக்கு எப்படி இணைப்பு கொடுப்பது? உள்ளிட்ட பணிகளுக்கு மதிப்பீடு தயார் செய்து தகவல் தெரிவியுங்கள். குடிநீர் பணிகளுக்கான வேலைகளை விரைவாக செய்யுங்கள்.
மக்களுக்கான தேவைகளை அறிந்து, மக்களுக்காக செய்யுங்கள். அதனை செய்வதற்கான அதிகாரத்தை மாவட்ட ஆட்சியர் உங்களுக்கு அளித்துள்ளார்கள். அதனை செய்ய உங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். அடுத்த ஆய்வுக்கூட்டத்தின் போது நல்ல முன்னேற்றம் இருக்கும் என்று நம்புகிறேன். 360 கூட்டு குடிநீர் திட்டப் பணிகள் தொடங்கப்படவுள்ளதால், அதன்மூலம் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வுகள் கிடைத்துவிடும். அனைத்து கிராமங்களிலும் உடனடியாக குடிநீர் தொட்டியிலிருந்து இணைப்புகளை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுங்கள்.
குடிநீர் தொடர்பான பணிகளை அனைவரும் இணைந்து உடனடியாக தீர்வு காண வேண்டும். விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட சுத்திகரிப்பு நிலையங்களை சரி செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். சுத்திகரிப்பு நிலையம் தேவைப்படும் இடங்கள் இருப்பின் தெரிவியுங்கள். அதனை சரிசெய்வதற்காக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். குடிநீர் தொடர்பான பணிகளில் நீங்கள் அனைவரும் இணைந்து செயல்பட்டால் கண்டிப்பாக சரிசெய்யலாம் என தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்கண்டேயன், கூடுதல் ஆட்சியர் செல்வி இரா.ஐஸ்வர்யா, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சாந்தி, பேரூராட்சி செயல் அலுவலர்கள், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள்,வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


