தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் தீயணைப்பு நிலையங்களில் பொதுமக்களுக்கு தீத்தடுப்பு குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இது குறித்து தூத்துக்குடி மாவட்ட தீயணைப்பு அலுவலர் கணேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது: தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையானது காக்கும் பணி, எங்கள் பணி என்பதை முக்கிய குறிக்கோளாகக் கொண்டு மக்களுக்கு சேவையாற்றும் துறை ஆகும். பேரழிவை ஏற்படுத்தும் தீயில் இருந்து உயிர்களையும், உடமைகளையும் காப்பதோடு, இயற்கை இடர்பாடுகளான வெள்ளம், புயல், நிலச் சரிவுகள் போன்றவற்றில் இருந்தும், மனிதர்களால் ஏற்படுத்தப்படும் அழிவுகளில் இருந்தும் மக்களை காப்பதும் தீயணைப்பு துறையின் முக்கிய பணி ஆகும்.
இந்த நிலையில் தீ பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாருங்கள் கற்றுக் கொள்ளுங்கள் என்ற திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது. இதில் பொதுமக்களை அருகில் உள்ள தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்துக்கு அழைத்து சென்று, அத்தியாவசிய தீப்பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கப்பட உள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள தீயணைப்பு நிலையங்களில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தீயணைப்பு நிலையங்களில் நாளை (சனிக்கிழமை), நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாட்களில் தீயணைப்பு நிலையங்களுக்கு வரும் பொதுமக்களுக்கு தீயணைப்பு படை வீரர்கள் தீத்தடுப்பு குறித்து பயிற்சி வகுப்புகள் நடத்துகின்றனர். இந்த வகுப்புகள் ஒரு நாளைக்கு காலை 10 முதல் 11 மணி வரை, மதியம் 12 மணி முதல் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை என 3 வகுப்புகளாக நடத்தப்படுகின்றன. இது முற்றிலும் இலவசம் ஆகும். எந்த ஒரு முன்பதிவும் கிடையாது. இதனை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


