ஏரலில் பைக் மீது மினிலாரி மோதிய விபத்தில் தனியார் நிதி நிறுவன ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார். மினி லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே உள்ள கீழமங்கலகுறிச்சி தேவர் தெருவை சேர்ந்த முத்துக்குமார் மகன் முத்துவேல்ராஜ் (23). இவர் ஏரல் பஸ்நிலையம் அருகில் ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். நேற்று மதியம் வேலை பார்க்கும் நிறுவனத்தில் இருந்து வீட்டில் சாப்பிடுவதற்காக மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றார்.
பாரதியார் ரோட்டில் காவல் நிலையம் அருகில் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த மினிலாரி ஒன்று எதிர்பாராத விதமாக அவரது பைக் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த முத்துவேல்ராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஏரல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அவரது உடலை கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து ஏரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து மினி லாரி டிரைவரான சேதுக்குவாய்த்தான் சர்ச் தெரு மரியஜோசப் கிளாட்வினை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


