தூத்துக்குடியில் அமைந்துள்ள ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில், மாணவர் பேரவையின் துவக்க விழா நடைபெற்றது.
இவ்விழாவிற்கு ஹோலி கிராஸ் கல்லூரிச் செயலாளர் அருட்சகோதரி பாத்திமா லூயிஸ், முதல்வர் அருட்சகோதரி எம். எஸ். ரூபா, துணை முதல்வர் முனைவர் எஸ். எம். டி. மதுரவள்ளி ஆகியோர் கூட்டுத் தலைமையேற்றுச் சிறப்பித்தனர்.
விழாவின் சிறப்பு விருந்தினராகத் தூத்துக்குடி பிஎம்சி மேல்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் பி. ஜே. அலாய் டொமினிக் சுபாஷ் கலந்து கொண்டு மாணவர் பேரவையைத் தொடங்கி வைத்தார். அப்போது மாணவர்களிடையே தலைமைத்துவம், ஒழுக்கம், பொறுப்புணர்வு, சமூக சேவையின் முக்கியத்துவம் குறித்து அவர் ஊக்கமளிக்கும் வகையில் சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் புதிய கல்வி ஆண்டிற்கான மாணவர் பிரதிநிதிகள் முறைப்படி அறிமுகப்படுத்தப்பட்டனர். தொடர்ந்து, மாணவர் பேரவையின் முக்கிய நோக்கங்கள், வரவிருக்கும் கல்வி ஆண்டிற்கான புதிய செயல்திட்டங்கள் குறித்து மாணவர்களுக்கு விரிவாக விளக்கப்பட்டது. கல்லூரி மாணவிகள் அனைவரும் இந்தத் துவக்க விழாவில் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.
விழாவின் நிறைவாக, மாணவர் பிரதிநிதிகளின் நன்றியுரையுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது. இந்த மாணவர் பேரவை துவக்க விழா மாணவிகளின் தலைமைத்துவத் திறனை வளர்க்கும் வகையில் மிகப்பயனுள்ள நிகழ்வாக அமைந்தது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


