நெல்லை மாவட்ட ஆட்சி தலைவர் விஷ்ணு அவர்கள் உருவாக்கிய காணி இனமக்கள் பற்றிய நான்காவது வீடியோ காணி மக்களின் உணவு மற்றும் மருத்துவ முறைகள் பற்றியதாகும்.
ஏற்கனவே காணி இன மக்களை பற்றியும் அவர்களின் இயற்கை மருத்துவம் பற்றியும் நாம் பல நூல்களில் கூறி வருகிறோம். மூலிகை மருத்துவம் செய்தவற்காக மயிலாறு பகுதியில் மூதாட்டி ஒருவர் மருத்துவர் சான்று வாங்கி வைத்திருந்தார். அதை வசந்த தொலைக்காட்சி தொடருக்காக செல்லும் போது எங்களிடம் காட்டினார். அவர் எங்களிடம் பேசும்போது பல விவரங்களை கூறினார். “தாங்களை எந்தெந்த விஷசந்துகள் தாக்கும் அதற்கு எந்த வகையான மூலிகை மருந்து கொடுக்கலாம்.” என அவர்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள்.
பெரும்பாலுமே விஷ சந்துகள் தங்கள் குடியிருப்புக்குள் வரவிடாமல் தடுக்க பல்வேறு மூலிகைகளை வீட்டை சுற்றி வளர்த்து வருகிறார்கள். இதனால் அவர்கள் குழந்தைகள் பயமின்றி வாழ முடிகிறது.
இதற்கிடையில் காணி இன மக்களை பார்க்கும் போது நமக்கு ஒரு உண்மை புலப்படும். எந்த ஆணோ அல்லது பெண்ணுக்கோ தொப்பை இருப்பதை பார்க்க இயலாது. அந்த அளவுக்கு அவர்கள் தங்கள் உடம்பை ஆரோக்கியமாக வைத்து இருக்கிறார்கள்.
அதற்கு காரணம் அவர் செய்யும் உடல் சம்பந்தப்பட்ட வேலையும் அவர்கள் உண்ணும் உணவுமே காரணம். இஞ்சுகுழியில் 103 வயதில் ஒரு பாட்டி தற்போதும் இருக்கிறார். தனது வேலைகளை தானே செய்கிறார். மசாலா அரைக்கிறார். சமையல் செய்கிறார். காட்டுக்குள் நடமாடிக் கொண்டிருக்கிறார்.
மசாலாவை இயற்கையாகவே அரைக்கிறார்கள். அதில் மிளகு உள்பட மூலிகை கலவைகள் அதிகமாக சேர்க்கப்படும். எனவே அவர்கள் உடல் ஆரோக்கியமாகவே விளங்கும்
அவரின் தெம்பான உடலுக்கு மேற்குதொடர்ச்சி மலையில் வனப்பு மற்றும் மூலிகை காற்றே காரணமாகும்.
பெரும்பலுமே அரிசி தான் இவர்களின் பிரதான உணவாக இருந்தாலும் தினையையும் மரவள்ளி கிழங்குகளையும் உணவாக பயன்படுத்துகிறார்கள். தேனும் தினைமாவும் இவர்களுக்கு சுவையான உணவு. விருந்துக்கு செல்பர்களுக்கும் தேனையும் தினைமாவையும் கொடுத்து மகிழ்கிறார்கள். மேற்கு தொடர்ச்சிமலையில் உள்ள காட்டுக்குள் இவர்கள் வலிமையாக வாழ முடிகிறது.
ஒரு காலத்தில் இவர்கள் வேட்டையாடி வாழ்ந்து வந்தார்கள் என்பது நாம் எல்லாம் அறிந்த ஒன்றே. குறிப்பாக அந்த காலத்தில் மிளா, காட்டு பன்றி போன்றவற்றை வேட்டையாடினார்கள். அதன் இறச்சியை தாங்கள் சாப்பிட பயன்படுத்தினார்கள். காலங்கள் கடந்தது. வனத்துறை வேட்டையாடுதலுக்கு தடை விதித்த காரணத்தினால் வேட்டையாடுவதை விட்டு விட்டனர்.
ஆகவே தான் மீன்களை பிடித்து சாப்பிட்டு வந்தனர். பெரும்பாலுமே இவர்கள் மீன் பிடிப்பதும் ஒரு கலையே. அதற்குரிய மூங்கில் கூடை தயார் செய்து அதை தண்ணீரை தேக்கிய இடத்தில் இருந்த வெளியேறும் தண்ணீரில் வைத்து மீன் பிடித்து சாப்பிடுவார்கள்.
தோட்ட வேலைக்கு செல்லும் ஆண்கள் மீன்களை பிடித்து, அதை ஒரு வகையான மசாலாவை பாறையில் வைத்தே அரைத்து, அந்த மசாலாவை மீன் மீது பூசுவர். அதன் பின் விறகுகளை அடுக்கி, அந்த விறகு மீது மீன்களை பரத்தி வைத்து அதன் மேலும் விறகுகளை அடுக்கி நெருப்பூட்டி, மீன் நன்றாக வெந்த பிறகு எடுத்து வைத்து சாப்பிடுவார்கள். அதை வீடியோவில் பார்க்கும் போதே நமக்கு நாவில் எச்சில் ஊறுகிறது. அந்த உணவை சாப்பிட்டால் எப்படி இருக்கும் என்பதை நாம் அங்கு சென்று அவர்கள் இயற்கையாக சுட்ட மீனை சாப்பிட்டால் அறியலாம்.
பெரும்பாலுமே தண்ணீர்களும் நீர்ஊற்றுகளும் உள்ள இடம் தான் மேற்குதொடர்ச்சி மலை என்று நாம் அறிவோம். ஆனாலும் இங்கே சில இடங்களில் தண்ணீர் பஞ்சம் உண்டு. குறிப்பாக ஆறுகளும் ஓடைகளும் இல்லாத இடத்தில் தண்ணீர் பஞ்சம் அதிகமாக ஏற்படும். அந்த மாதிரி நேரத்தில் காட்டுக்குள் செல்லும் காணிகள் வித்தியசமாக ஒரு கொடியை தேடிச்செல்வார்கள். அந்த கொடியின் பெயர் ஒடவெள்ளி என்கிறார்கள். அந்த கொடி உயரமான மரத்தில் பிண்ணி பிணைந்து கிடக்கிறது. அந்த இடத்தினை தேடி கண்டுபிடித்து அதை இரு துண்டாக வெட்டினால், அதனுள் இருந்து தண்ணீர் ஊற்று போல வருகிறது. அதை இளநீர் குடிப்பது போல காணிகள் குடிக்கிறார்கள். இந்த காட்சியை அருமையாக படம் பிடித்து இருக்கிறார்கள்.
என்னே இயற்கையின் விந்தை. குறிப்பாக காட்டுக்குள் செல்லும் மக்கள், அல்லது வனத்துறையினர் பசி தாகம் எடுக்காமல் இருக்க அல்வா பச்சிலை என்ற ஒரு மூலிகை தாவரத்தினை பயன்படுத்துவார்கள். அந்த அல்வா பச்சிலையை அரைத்து ஒரு கிண்ணத்தில் வைத்தால் அல்வாவை கிண்டி எடுத்தது போல உறைந்து கெட்டியாகி விடும். அதையும் சாப்பிடலாம். இது போல் அறியாத தெரியாத மூலிகைகள் பல இங்கே கொட்டிக்கிடக்கிறது.
காணிகள் இடத்தில் பெரிய மருத்துவர் பிலாத்திதான். இவரை பற்றி நான் ஏற்கனவே கூறியிருக்கிறேன். பிலாத்தி தான் அனைத்து நோயையும் தீர்க்கும் சக்தி வாய்ந்தவர். நோய்வாய் பட்டவர்களை அழைத்து வந்து அவர்களுக்கு சிகிச்சை அளிப்பார். அனைத்து மூலிகை பலன்களையும் நன்கு அறிந்தவர். எந்த மூலிகையை எந்த அளவோடு, எதோடு இணைத்தால் எந்த நோய் தீரும் என்பதை கை வந்த கலையாக கற்று வைத்திருப்பார்.
இதற்காக வெற்றிலை மீது வகை வகையாக மூலிகைகளை சேகரித்து வைத்திருப்பார். இவர்கள் முதுகு வலி, மற்றும் எலும்புமுறிவு மருத்துவத்தினை கூட சிறப்பாக செய்யக்கூடியவர்கள்.
தற்போது மயிலாறு பகுதியில் வித்தியாசமான ஒரு மருத்துவம் நடந்து வருகிறது. இந்த மருத்துவத்துக்கு மூலிகை குளியல் என்று பெயர். இந்த குளியலுக்கு பல்வேறு இடங்களில் இருந்து மக்கள் மயிலாறு பகுதியை தேடி செல்கிறார்கள். காரையாறு பாட்டி அன்னம்மாள் எப்படி மஞ்சள் காமாலை நோய்க்கு மருந்து கொடுத்தாரோ அதுபோலவே தான் இந்த மூலிகை குளியல் நடைபெறுகிறது. இதற்காக 102 மூலிகைகளை கலந்து, அவித்து அதில் வரும் நீராவியில் குளிக்க செய்கிறார்கள்.
அவர்களின் இந்த அறிவு மூலமாக ஒரு மனிதன் உடலில் தோன்றும் பல்வேறு நோய்கள் தீருகிறது. சரி, இந்த தலைமுறையுடன் அவர்களின் தொழில் நின்று விடக்கூடாது என்பதற்காக தனது அடுத்த தலைமுறையையும் உருவாக்கி வருகிறார்கள். அதற்கான மருத்துவத்தினை தனது வாரிசுகளுக்கு கற்று கொடுத்து வருகிறார்கள்.
இது சம்பந்தப்பட்ட காட்சிகளை 4 வீடியோவில் மிகச்சிற்பபாக காட்சி படுத்தியிருக்கிறார்கள்.
தொடர்ந்து 5 வது வீடியோவை காணுவோம்.
காணி இனமக்கள் தொழில் மற்றும் கல்வி என்ற தலைப்பிட்ட இந்த வீடியோவும் மிகப்பிரமாண்டமாக உள்ளது.
முன்பெல்லாம் காட்டுக்குள்ளே வாழ்ந்து வந்தவர்கள் காணி இன மக்கள். இவர்கள் காலம் மாற மாற எல்லாமே மாற ஆரம்பித்தது. நாம் ஏற்கனவே கூறிய படி பண்டமாற்று முறையில் அவர்கள் வாழ்ந்து வந்தார்கள். அரிசியை வாங்கி கொண்டு மரவள்ளி கிழங்கை பண்டமாற்றமாக கொடுத்தார்கள். பிற்காலத்தில் பணம் பற்றி காணி இனமக்களுக்கு தெரியவந்தது.
அதன்பிறகு இவர்கள் கந்துவட்டிக்குள் மாட்டி கடனுக்குள் சிக்கிக் கொண்டனர். இதனால் அரசு விழித்துக் கொண்டு இவர்களுக்கு பாதுகாப்பு கொடுத்தது. அதன்படி தங்களிடம் கிடைக்கும் பொருளை முறைப்படி சந்தை படுத்தினர். இயற்கை விவசாயம் செய்தனர். இதனால் நல்ல தரமான பொருள்களை உற்பத்தி செய்தனர். குறிப்பாக பாரம்பரிய மூலிகை கொண்டு மிக அருமையான முறையில் மருந்துகள் தயாரித்து அதை சந்தை படுத்தினர்.
பெரும்பாலுமே சுத்தமான தேனை சேகரித்து மக்களுக்கு கொடுத்து வந்தனர். தேன் சேகரிப்பு மிகவும் விஷேசமானதாகும். தேனீயை பொருத்தவரை சுமார் 200 வகை பூக்களில் இருந்து மகரந்த பூக்களை சேகரித்து தேன் ஈக்கள் கூட்டை உருவாக்கும். நீர் நிலைகளில் இருந்து மரங்களை தேடிச்சென்று தேனீக்கள் சென்று கூடுகட்டும். தேனீ செல்வதை அறிந்து அதன் பின்பே சென்று காணிகள்தேனீ கூடு கட்டும் இடங்களை இனம் கண்டு கொள்வார்கள்.
குறிப்பாக காணி ஓரிடத்தில் தேன் கூட்டை கண்டு பிடித்து அவ்விடத்தில் மரத்தினை ஊனி வைத்து விட்டால், அந்த தேன் கூடு அவருக்குத்தான் மற்ற யாரும் அந்த கூட்டை கண்டு கொள்ளவே மாட்டார்கள். எடுக்கவும் முயற்சி செய்ய மாட்டார்கள். அவர் தலைமையில் தான் அந்த தேன் கூட்டை எடுக்கவேண்டும்.
தேன் எடுப்பதற்காக மிகவும் உயரமான மரத்தில் ஏறுவார்கள். தேன் கூட்டை எடுப்பதற்காக முன்கூட்டியே தழைகள் இலைகளை கொண்டு நீளமான கம்பில் நெருப்பை பற்ற வைத்து தேன் கூடு அருகில் கொண்டு செல்வார்கள். உயரமான மரக்கிளையில் படுத்துக் கொண்ட இவர்கள் அந்த பணியை செய்வது த்ரிலிங்காக இருக்கும். முகம் தலையை தேனீக்கள் தாக்கி விடக்கூடாது என்பதற்காக தலையில் துணியை போட்டு மூடிக்கொள்வார்கள்.
அதன்பின் அந்த தேனை எடுத்துக்கொண்டு கீழே இறங்குவார்கள். இதுபோலவே இயற்கை விவசாயம் மிகச்சிறப்பாக செய்து வருகிறார்கள். மருந்து அடித்து பூமியையும் உருவாக்கும் உணவு பொருளையும் வீணாடிக்க மாட்டார்கள். இயற்கையாகவே எலுமிச்சை, நார்த்தை, சீத்தாப்பழம் உள்பட பல பழவகைகளை உருவாக்கினார்கள். அதற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. எனவே விவசாயத்தினை செழிக்க செய்தனர். இயற்கனவே உழைப்பாளிகள், விவசாயம் செய்வதில் கைதேர்ந்தவர்கள் எனவே தொடர்ந்து விவசாயத்தினை செய்த காரணத்தினால் நிறைய வருவாய் ஈட்ட ஆரம்பித்தனர். இதுகுறித்து கணேசமூர்த்தி காணி கூறும்போது, நல்ல முறையில் விவசாயம் செய்து அரசிடம் சிறந்த இயற்கை விவசாயிகள் விருதை காணிகள் வாங்கி வைத்துள்ளோம் என்று கூறினார்.
ரசாயன கலவை, பூச்சி மருந்து என உணவே மருந்தாக கூடிய காலத்தில் உணவை விஷமாக்கி கொண்டிருக்கும் மக்கள் மத்தியில் இயற்கை விவசாயத்தினால் நல்லதொரு உணவை இந்த நாட்டுக்கு தரும் காணிகளை பாராட்டாமல் இருக்கமுடியாது.
காணிகள் தற்போது கல்வியிலும் சிறந்து விளங்கி வருகிறார்கள். இவர்கள் கல்வி பயில உண்டு உறைவிட பள்ளியை அகத்தியர் குடியிருப்பில் அரசு உருவாக்கி உள்ளனர். எனவே மக்கள் ஒரளவு கல்வி படித்து மேல் படிப்புக்காக அருகில் உள்ள டவுணுக்கு செல்கிறார்கள். அதோடு மட்டுமல்லாமல் அரசு வேலைகள் பல பெற்று வாழ்வில் உயர்ந்து உள்ளார்கள்.
காணிகள் காடுகளை பற்றி தெரிந்து வைத்திருக்கும் காரணத்தினால் அவர்களுக்கு வேட்டை தடுப்பு காவலர்கள் பணியை வனத்துறையினர் கொடுத்து வருகிறார்கள்.
பிறவிலேயே காட்டையும், மிருகங்களையும் பாதுகாக்கும் பண்பு கொண்ட காணிகள்,வேட்டை தடுப்பு காவலர்கள் பணி கிடைத்த பிறகு காட்டை காவல் புரியும் நல்ல பணியில் திருப்தியுடன் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுவரை காணிகள் குறித்து பேசிஎவந்தோம். அவர்கள் வாழ்வியல் நமக்கு வித்தியாசமான அனுபவத்தினை தந்தது. இவர்களை பற்றிய குறும்படம் தந்த மாவட்ட ஆட்சியர் விஷ்ணு அவர்களுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி கூறிவிட்டு, இந்த காட்டை ஆண்ட ராஜா ஒருவரைப் பற்றி தெடர்ந்து பேசுவோம்.
(பொருநை ரகசியத்தினை தேடிபயணிப்போம்)


