இந்த கட்டுரையை படிக்க தவறாமல் ஞாயிறுதோறும் படிக்க, நெல்லை டைம்ஸ் நாளிதழை வாங்கி பயன்பெறுங்கள். கட்டுரையை மிகச்சிறப்பாக வெளியிட்டு வரும் நெல்லை டைம்ஸ் பொறுப்பாசிரியர் திரு. தம்பான் மற்றும் ஆசிரியர் குழு, நிர்வாகிகளுக்கு நன்றி நன்றி – அன்புடன் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு
10.
மழைக்காகத் தெய்வங்களை
தேடி ச்செல்லும் பக்தர்கள்
மணிமுத்தாறு தலையருவி பயணம்
மழை வேண்டி அற்புதபூஜைகள் பல தாமிரபரணி நதியிலும், அதன் துணை நதிகளிலும் நடைபெறுகிறது. இதுவும் மிகப்பெரிய அபூர்வம் தான். மணிமுத்தாறு நதி தோன்றும் அடர்ந்த காட்டுக்குள் உள்ள தலையருவிக்கு கடினமாக பயணம் சென்று மழை வேண்டும் என விவசாயிகளை செய்யும் அபூர்வ பூஜை ஒன்றைகாணலாம். கரடுமுரடான இருநாள் இரவு பகல் பயணத்தில் நாமும் கலந்துகொண்டோம்.
தாமிரபரணி, மணிமுத்தாறு, கோதையாறு இந்த மூன்றையும் உள்ளடங்கியது சிங்கம்பட்டி ஜமீன்தாரின் எல்கை. விளைநிலங்களை மிகுதியாகக் கொண்ட ஜமீன். எனவே விவசாயத்துக்கு மிக முக்கியத்துவம் கொடுப்பார்கள் ஜமீன்தார்கள். மும்மாரி பொழியவேண்டும். மக்கள் செழிப்பாக வாழ வேண்டும் என்பதே இவர்களின் நோக்கம். ஆண்டாண்டு காலமாக இந்தப் பண்பாடு மாறாமல் உள்ளது. ஜமீன் ஆளுமை முடிந்தாலும் இந்தியாவில் கடந்த வருடம் வரை பட்டங்கட்டி வாழ்ந்த ஒரே ஜமீன்தார் என்ற பெருமையை கொண்டவர் சிங்கம்பட்டி ஜமீன்தார் முருகதாஸ் தீர்த்தபதி ராஜா.
தாமிரபரணி நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்துக்கு விவசாயம், குடிதண்ணீர், தொழிற்சாலை ஆகிய மூன்றுக்கும் தாமிரபரணி நீரே ஆதாரம். தாமிபரணியில் நீர் வற்றி விட்டால் இந்த பகுதி பாலைவனமாகிவிடும். எனவே நதி வற்றும் நாள்களில் சொரிமுத்து அய்யனாருக்கு ஜமீன்தார் தலைமையில் மிகப் பெரிய வேள்வியே நடைபெறும்.
1989 & 1990 களில் தாமிரபரணியில் தண்ணீர் வற்றியது. பயிர்கள் வாடின. குடிதண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. தூத்துக்குடி அனல் மின் நிலையம் உள்பட தொழிற்ச் சாலைகள் முடங்கும் நிலை ஏற்பட்டது. சொரிமுத்து அய்யானர் கோயில் முன்பு சிறப்பு வேள்வியை நடத்தினார் சிங்கம்பட்டி ஜமீன்தார் முருகதாஸ் தீர்த்தபதி ராஜா. அப்போதைய நெல்லை ஆட்சி தலைவரும் முன்னாள் மத்திய ரயில்வே இணை அமைச்சருமான வேலு இந்த வேள்வியில் கலந்து கொண்டார். அவருக்கு பூர்ண கும்ப மரியாதை கொடுத்து ஜமீன்தார் அழைத்து வந்தார்.
ஆகவே மழைவேண்டி பூஜை என்பது , இந்த ஜமீன்தாருககும் , இந்த பகுதி மககளுககும் மழைவேண்டி பூஜை செய்வது என்பது கை வந்த கலையாகும்.
ஜமீன்தாரின் கட்டுப் பாட்டிலிருந்து, தற்போது வனத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும், மணிமுத்தாறு ஆற்றங்கரையில் நடுக்காட்டுக்குள் உயிரைப் பணயம் வைத்து மழைக்காக நடைபெறும் ஒரு வித்தியாசமான பூஜை உண்டு. அந்த பூஜைக்காகச் சிங்கம்பட்டி, ஜமீன்சிங்கம்பட்டி, பாப்பாங்குளம் மக்கள் மிகவும் சிரத்தையெடுத்துக்கொள்வார்கள். அந்தப் பயணம் மிகவும் சிறப்பான பயணம். இந்தப் பயணத்துக்காக சிங்கம்பட்டி ஜமீன்தார்கள் செலவு தொகையை ஏற்றுக்கொள்வார்கள்.
மணிமுத்தாறு காட்டு பகுதியில் ஓடி வரும் இடத்தில் ஒரு நாள் இரவு , இரண்டு நாள் பகல் பயணம் செய்து இந்த பூஜையை நடத்துவார்கள்.
மணிமுத்தாறு பாய்வதால் சிங்கம்பட்டி எப்போதுமே செழிப்பாகவே காணப்படுகிறது. சில வேளைகளில் அங்கேயும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டு விடும். நெற்பயிர் கதிர் வரும் வேளையில் தண்ணீர் இன்றி கருகும். காய்ந்து கிடக்கும் வயல்வெளிகளைப் பார்த்து விவசாயிகள் அதிர்ந்து விடுவார்கள். அருவி தலைக்குச் சென்று பூஜை செய்தால் மட்டுமே விவசாயம் செழிக்கும் என்பது விவசாயிகளின் நம்பிக்கை. எனவே ஊர் மக்கள் எல்லோரும் ஒன்று கூடுவார்கள். அரண்மனைக்குச் சென்று மகாராஜாவிடம், “மகராஜா.. அருவி தலை சென்று பூஜை செய்ய வேண்டும் உத்தரவு தாருங்கள்” என்று கேட்பார்கள். ராஜா உடனே அதற்கான ஏற்பாடுகளைச் செய்வார்.
அதன் பின்னே பயணம் தொடரும்..
ஆபத்தான பயணம் தான். ஆனாலும் விவசாயி நலன் கருதி இந்தப் பூஜைக்கு ஜமீன்தார் சம்மதிப்பார். ஏன் என்றால் பல நேரங்களில் இந்தப் பூஜைக்கு செல்லும் போது மோசமான சம்பவம் நடந்துள்ளது. இதுபோன்று சம்பவம் நடந்து அங்கு செல்லும் மக்கள் உயிர் இழந்து விடக்கூடாதே! என்பது தான் ஜமீன்தாரின் பயம்.
அதற்கு காரணமும் உண்டு. ஒரு காலத்தில் அருவிக் கரைக்குப் பூஜை செய்ய மேளதாளத்துடன் சென்றுள்ளனர். அப்போது அவர்களோடு சென்ற இரண்டு மேள கலைஞர்கள் அருவியில் தவறி விழுந்துவிட்டனர். தவறி போன மேளகலைஞர்கள் குடும்பம் வாடி வதங்கி போய்விடக்கூடாது என்று அவர்கள் குடும்ப வாழ்க்கைக்காக நிலங்களை ஜமீன்தார் எழுதி வைத்துள்ளார் என்பது வரலாறு.
கடுமையான பஞ்சம் எழும் போது 5 வருடத்துக்கு ஒருமுறைதான் இந்த பூஜை நடைபெறும்.
கடந்த 21.08.2017 அன்று மழை வேண்டி பயணம் நடந்தது. அந்த பயணத்தில் சுமார் 100 பேர்கள் கலந்துகொண்டனர். நாமும் கலந்துகொண்டோம். ஏன் என்றால் அருவி தலை பூஜையை பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். அதை நேரில் காணவேண்டும் என்ற ஆசை.
மணிமுத்தாறு தலையணையில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் தலையணை செல்லும் பாதை தென்பட்டது. அந்த இடத்துடன் கார் நின்று விட்டது.
தலையணைக்குச் செல்லும் பாதை வனத்துறையால் சுவர் கட்டி அடைக்கப்பட்டிருந்தது. ஒரு காலத்தில் வாகனம் மூலமாக இங்கிருந்து காட்டுக்குள் சுமார் 2 கிலோ மீட்டர் சென்று தலையணையில் மக்கள் ஆனந்தமாக குளித்து வந்தனர்.
ஆனால் காட்டை அவர்கள் நேசிக்காமல் பிளாஸ்டிக் பொருள் உள்பட பல பொருள்களை கொண்டு சென்று காட்டை மாசு படுத்தியுள்ளனர்.
எனவே இந்த இடத்துடன் வாகனங்களை நிறுத்த வனத்துறையினர் கட்டுபாடு விதித்துள்ளனர். பூஜைக்கு தேவையான பொருள்கள் இறக்கப்பட்டது.
வந்தவர்களிடம் ஒவ்வொரு பொருளாக தலைச்சுமையாக ஏற்றப்பட்டது. தங்களால் தூக்ககூடிய பொருள்களை ஒவ்வொருவராகத் தூக்கிக் கொண்டனர். அரிசி உள்பட மூட்டைகளை சுமக்க சம்பளத்துக்கு ஆள்களை நியமனம் செய்திருந்தார்கள்.
வனத்துறை தடுப்புச் சுவர் தாண்டி நடக்க ஆரம்பித்தோம். தலையணைப் பகுதியை 2 கிலோ மீட்டரில் அடைந்தோம். கோடை காலத்தில் இங்கு வந்து தான் பொழுது போக்குவார்களாம் இப்பகுதி மக்கள். உள்ளூர்காரங்களுக்குதான் இந்த இடம் மிகப் பரிச்சையமான இடம். எனவே இவர்கள் ஓய்வு நேரத்தில் இங்கு வந்து ஒரு குளியலை போட்டு விட்டு கிளம்பி விடுவார்கள். குழந்தைகளோடு குடும்பத்துடன் வருபவர்களும் உண்டு.
ஜமீன்தார்கள் காலத்தில் மிகவும் ரம்மியமாக இருந்த இடம். இந்த வழியாக தாமிரபரணியின் துவக்க இடமான பாணதீர்த்தம் கூடச் சென்று விடலாம். வில்லு வண்டி, மற்றும் குதிரைகளில் ஜமீன்தார்கள் இந்த வழியில் சென்று வந்துள்ளார்கள். அவர்கள் ஆற்றைக் கடந்து செல்ல பாலங்கள் அமைக்கப் பட்டிருந்திருக்கிறது. ஆனால் தற்போது அதன் சுவடுகள் மட்டும் ஆங்காங்கே காணப்படுகிறது.
சுமை தூக்கிச்செல்பவர்கள் நடந்து சென்றுக் கொண்டிருந்தார்கள். எந்த ஆண்டும் இல்லாத நிலையில் அப்போது சுமார் 20 அர்ச்சகர்களும் அந்த குழுவில் இருந்தனர். கரடு முரடான சாலையில் மூன்று தடவை மணிமுத்தாறு ஆற்றை கடந்து சென்றோம்.
ஒரு காலத்தில் இந்த ஆற்றங்கரையில் காணிகளின் மிகப் பெரிய குடியிருப்பு இருந்தது என்றும், ஒரு சமயம் ஏற்பட்ட காலரா நோயில் மிக அதிகமான உயிரிழப்பு ஏற்பட்ட காரணத்தினால் இங்குள்ள காணி இன மக்கள் தங்கள் குடியிருப்புகளைத் தாமிரபரணி கரையான காரையாறு மற்றும் மயிலாறு பகுதிக்கு மாற்றி விட்டார்கள் என்றும் உடன் வந்த ஜமீன் தலைமை காவலர் கட்டபொம்மன் அய்யா நம்மிடம் கூறினார்.
தொடர்ந்து சுரைக்காய் ஓடை, கீழ கண்டம்பாறை, மேலகண்டம்பாறை உள்பட பல பகுதியை கடந்தோம். மிக கடினமான பாதை. பல குகைகள் இருந்தன. அதையும் கடந்தோம். மணிமுத்தாற்றை மூன்று தடவை கடக்கவேண்டும் என்று கூறினோமே. அப்படிக் கடக்கும் போது மிகப் பெரிய பாறைகளில் இங்கிருந்து மறுபுறத்துக்கு தாண்டி குதிக்க வேண்டும். நாமும் குதித்தோம். சில இடங்களில் இளைஞர்கள் மற்றவர்களின் கையைப் பிடித்து தாங்கி மறுபுறம் அழைத்துச் சென்றனர்.
குறிப்பாக ஒவ்வொரு இடத்திலும் ஆறு வரும் போது செங்குத்தான இறக்கத்தில் இறங்க வேண்டியதிருந்தது. இந்த இறக்கத்தில் இறங்கும் போது தலை கீழாகத் தான் இறங்க வேண்டும். ஆற்றைக் கடந்தவுடன் சரியான முட்டு ஏத்தம் ஏறவேண்டும். இதில் ஏற முடியாதவர்கள் கம்பு ஒன்றை கையில் வைத்து தரையில் ஊன்றித்தான் ஏறுவார்கள்.
மழை இல்லா விட்டால் மட்டுமே இதுபோன்ற பூஜை நடத்துவார்கள். இதற்கு முன்பு பூஜை முடிந்து 5 வருடங்கள் கடந்து விட்டது. பூஜை இல்லாத காரணத்தினால் இங்கு யாரும் வரவில்லை. இதனால் பாதை முழுவதுமே அடர்ந்து காணப்பட்டது. மனிதர்கள் நடந்தே செல்ல முடியாத இந்த பாதையில் பக்தர்கள் மிகவும் கஷ்டப்பட்டு, உயிரை பணயம் வைத்து பயணம் செய்து கடந்தனர். எங்குமே ஓய்வு எடுக்க முடியவில்லை.
இந்த சமயத்தில் சுமை தூக்கிகளில் சுமார் 10 பேர் கொண்ட குழுவினர் பாதை மாறிச் சென்றுவிட்டனர். இவர்கள் மேலகண்டம்பாறை என்னும் இடத்தில் இருந்து பாதை தவறுதலாக தாமிரபரணி நதி தோன்றும் காரையாறு பாணதீர்த்தம் செல்லும் பகுதிக்கு சென்று விட்டனர். அவர்களை காணாமல் குழுவினர் பதைபதைக்க ஆரம்பித்து விட்டனர். செல் போனில் தொடர்ப்பு கொள்ளலாம் என்றால், அதற்கான டவர் காட்டுக்குள் கிடைக்கவில்லை. இதனால் மேலும் பரபரப்பு ஏற்பட்டது.
அவர்கள் காட்டு பாதை வழி தெரியாமல் எங்கே சென்றார்கள் என்று தெரியவில்லை. ஒரு குறிப்பிட்ட இடத்தில் வழித்தடம் நாலு பக்கம் பிரிந்தது. இடது பக்கம் பிரிந்தால் மாஞ்சோலைக்கும், வலது புறம் திரும்பினால் பாணத்தீர்த்தமும் சென்று விடலாம். இந்த வழியில்தான் அவர்கள் தவறி சென்றிருக்கவேண்டும் என அவர்களை தேடி ஒரு குழுவினர் பாணதீர்த்தம் நோக்கி சென்றனர்.
மற்றவர்கள் அருவி தலையை நோக்கி நடை பயணம் செய்தனர். அவர்களை முன்னும் பின்னும் அரணாக நின்று கூட்டிச் சென்றனர்.
பின்னால் வருபவர்கள் பாதை மாறி சென்று விடக்கூடாது என்று மற்ற பாதைகளை அங்குள்ள மரங்களில் உள்ள கிளைகளை தூக்கி போட்டு அடைத்து வைத்தனர். அதன் பின் அங்கே கிடந்த ஒரு பாறாங்கல்லை வைத்து விட்டு, அதில் போகக்கூடாது என அடையாளம் போட்டு விட்டு, பூஜைக்கு போகும் இடம் நோக்கி அம்பு குறியிட்டனர்.
மூன்றாவது ஆற்றை கடக்கும் போது தான் மிக கடினமாக இருந்தது. ஆற்றில் இறங்கும் போது கிளைகளைப் பிடித்துக்கொண்டு தலைகீழாய் இறங்கினர். சருக்கி விளையாடுவது போலவே சருகிக் கொண்டே சென்றனர். இடையில் குச்சி ஏதாவது இருந்து குத்தி விட்டால் நமது உடலில் உள்ள பாகங்கள் கிழிந்து விடும். ஆனால் யாருக்கும் அப்படி நடக்கவில்லை. நானும் சருக்கி கொண்டு தான் சென்றேன். என்னை விட வயதான அர்ச்சகர் ஒருவரும் என் பின்னால் சரிக்கிய படியே ஆற்றுக்குள் வந்து சேர்ந்தார். ஆற்றில் சிறிது நேரம் இளைப் பாறினோம். இன்று இரவு பூஜை முடிந்த பிறகு இங்கு தான் தங்கவேண்டும். இந்த இடத்துக்குத் ‘தாழ்வாரம்’ என்று பெயர் என்று கூறினார் கட்டபொம்மன் அய்யா.
அடுத்த பயணம் மிகக் கடுமையாக இருந்தது. இந்த பயணத்தில் எங்கள் முன்னால் பலிகொடுக்க அழைத்து சென்ற கிடாய் மிக வேகமாக ஓடிச்சென்றது. அதோடு மட்டுமல்லாமல் கயிற்றைப் பிடித்தவரை இழுத்துக் கொண்டு சென்றது.
“கிடாய் வாசம் நுகர்ந்தால் புலி எங்கே இருந்தாலும் வந்து விடும் கவனம்” என்று அங்குள்ளவர்கள் கூறிய போது எங்களுக்கெல்லாம் பயம் தொற்றிக்கொண்டது.
(பொருநை ரகசியத்தினை தேடி பயணிப்போம்)
&&&&&&


