7. ஆலந்தலை தியாகி பெஞ்சமின்
ஒரு போராளியின் போராட்ட வாழ்க்கை என்பது சாதாரண விஷயமன்று. நித்தமும் கஷ்டங்கள் துயரங்கள், தான் ஏற்று கொண்ட இலட்சியத்தை நினைத்தே மனம் பாறையாக இறுகி எந்நேரமும் வெடித்து சிதற துடிக்கும். அதன் வலியை இப்போதுள்ள தலைமுறைகள் படித்தும் ஊடகங்களில் கண்டும் மனவலிவும், துணிவும் கொள்வது அவசியமாகும்.
எண்ணற்ற தமிழ் இளைஞர்கள் எழுச்சியுடன் வாழ்ந்து சரித்திரத்தில் இடம் பெறாமலே மடிந்து போயிருக்கின்றனர் அனேகர் உண்மை போராளிகளின் வாழ்க்கை பதிவுகள் வெளியுலகுக்கு வரா வண்ணம் மறைக்கப்பட்டு, மறக்கப்பட்டும் போயிருக்கின்றனர்.
இந்தியாவில் அப்படியரு மறைக்கப்பட்ட பரதர் குல போராளியும் ‘தென்னாட்டு வேங்கை’ என அழைக்கப்பட்ட தியாகி பெஞ் சமின் வாழ்க்கை சுவடுகள் மிகவும் விசேஷமானதாகும். சாதி மத வேறுபாடு இன்றி சுதந்திரத்திற்காக மட்டுமே உழைத்தவர் தியாகி பெஞ்சமின்.
தென் தமிழகத்தில் கடைக்கோடியில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை அடுத்துள்ள ஆலந்தலை எனும் கிராமத்தில் ஒரு நலிந்த மீனவர் குடும்பத்தில் சூசை எஸ்தேவு-& சூசை மாதவடியாள் தம்பதியருக்கு மகனாக 23 ஆகஸ்ட் 1919ம் வருடம் பெஞ்சமின்
பிறந்தார்.
அப்போது மக்களை அடிமைபடுத்திய ஆங்கிலேயர் ஆட்சி நடந்து கொண்டி ருந்தது. எதிர்ப்பின் காரணமாய் பள்ளி படிப்பை 8ம் வகுப்போடு நிறுத்திக்கொண்டு மாணவ பருவத்திலேயே போராட்ட களத்திற்கு வந்தார்.
நீலன் சிலை தகர்ப்பு மூலமாக போராட்ட தளபதி சோமயாஜூலு, பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஆகியோர் உடன் பெஞ்சமின் கைகோர்த்தார்.
பெஞ்சமின் ஆலந்தலையில் சத்யாகிரகம் செய்திட திருச்செந்தூர் காவல்துறையினர் கைது செய்து 6 மாதம் சிறை தண்டனை வழங்கப்பட்டது. முடிந்து திரும்பி வந்த பெஞ்சமின் பாரதமாதா தேசிய வாலிபர் சங்கம் ஒன்றை ஆலந்தலையில் நிறுவினார். ஏழு பொய் வழக்குகள் போடப்பட்டு மீண்டும் பெஞ்சமின் தூத்துக்குடி சப்-ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
அப்போது ஆங்கிலேயே அதிகாரிகள் பாரத மாதா வாலிப சங்கத்தை சேர்ந்த பெஞ்சமின் ஆதரவாளர்கள் சுமார் 50 குடும்பங்கள் ஆலந்தலை கிராமத்தை விட்டு உறவினர்களை உடுத்திய
ஆடைகளுடன் துரத்தி அடித்தார்கள். அவர்கள் வேறுவழியின்றி திருச்செந்தூர் கடற்பகுதிக்கு வந்து தங்கினர்.
இந்த தகவல் தெரியாமல் தூத்துக்குடி சிறையிலிருந்து விடுதலையாகி ஆலந்தலை கிராமத்திற்கு பெஞ்சமின் செல்ல அங்கே காத்திருந்த ஆங்கிலேயே அதிகாரிகள் இவரை அடித்து தாக்க வந்ததும் அவர்களிடமிருந்து லாவகமாக தப்பி திருச்செந்தூர் வந்து சேர்ந்தார்.
இதனால் முன்பிலும் விட தீவிரமாக ஏகாதிபத்திய ஆங்கிலேயே அரசுக்கு எதிராக பெஞ்சமின் ஈடுபட்டார். திருச்செந்தூர் பகுதியில் தந்தி கம்பி அறுத்தல், தபால் நிலையங்களுக்கு தீ வைத்தல் என துணிந்து போராட்டம் செய்தார் பெஞ்சமின். தூத்துக்குடி மதுரை சிறைச்சாலைக்கு பலமுறை அனுப்பப்பட்டார்.
சுதந்திர போராட்டகாரர்களை அடக்கி ஒடுக்குவதில் மிக தீவிரமாக இருந்தார் அதிகாரியான வில்ப்ரட் என்பவர். அப்போது திருச்செந்தூர் சுற்றி உள்ள ஊர்களில் தனது கட்டுபாட்டில் ஆங்கிலேயே (வில்லி) லோன், உப்பு உதவி ஆய்வாளர். இவரை சுதந்திர போராட்ட வீரர்கள் குறி வைத்தார்கள். அதற்காக பெஞ்சமின் அவரது நண்பர்களான ஆறுமுகநேரி ராஜகோபால், காசிராஜன் ஆகிய மூவரும் .திருச்செந்தூரில் சந்தித்து ரகசிய திட்டம் தீட்டினர். அதன்படி ‘லோன் துரை’ குலசை என அழைக்கப்படும் குலசேகரபட்டினத்தில் சீனி ஆலைக்கு அருகே அமைந்திருக்கும் பங்களாவிற்கு தனது அன்பு குரியவளை சந்திக்க நள்ளிரவில் அவ்வழியாக வருவார் என தகவல் கிடைத்தது.
அதன்படி 19.-08.-1941 அன்று பெஞ்சமின் ராஜகோபால் காசிராஜன் ஆகிய மூவரும் குலசையில் உள்ள சீனி ஆலை பின்புறம் பகல் பொழுதினிலே வந்து மறைந்து கொண்டனர்.
நள்ளிரவு நெருங்கியதும் லோன் துரை இருகாவலர்களுடன் வந்து கொண்டிருந்தார். உடனே ஆயுதங்களுடன் மூவரும் தாக்க முன்தோன்றியதும் உடன் வந்த காவலர்கள் ஓட்டம் பிடித்தார்கள். லோன் துரையும் தப்பி ஓட முயன்றார். தப்பிக்க விடாமல் தங்கள் கையில் இருந்த அரிவாள் கத்தியுடன் விரட்டி பிடித்து சீனி ஆலை முன்பாக ஆங்கிலேயே அதிகாரியான லோன் துரையை மூவரும் வெட்டி கொன்றார்கள்.
எம் மக்களை அடிமைபடுத்த நினைப்பவனுக்கு இதுதான் கதி. ஜெய்ஹிந்த் என கூறியவாறு தப்பி சென்றார்கள்.
லோன் துரை கொலை ஆங்கிலேய ஆட்சி அதிகாரிகள் மத்தியில் பெரும் திகிலை அடைய வைத்தது. இதே கால கட்டத்தில் தான் தூத்துக்குடி மணியாச்சி இரயில்வே நிலையத்தில் கலெக்டர் ஆஷ்துரையை வாஞ்சிநாதன் என்ற சுதந்திர போராட்ட வீரர் துப்பாக்கியால் சுட்டு கொன்று, தானும் இறந்து போனார் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னர் 24.-08.-1942 அன்று பன்னம்பாறை காட்டுப்பகுதியில் காவல்துறை உட்புகுந்து அங்கே மறைந்திருந்த பெஞ்சமின், ராஜகோபால், காசிராஜன் ஆகிய மூவரையும் கைது செய்து அடித்து இழுத்து வந்தது. காவல்துறையின் சித்ரவதைகளை தாங்கமாட்டாமல் துடித்தார்கள்.
பெஞ்சமினின் கை மற்றும் கால்களில் உள்ள அனைத்து நகங்களையும் ஒவ்வொன்றாக பிய்த்து எறிந்தார்கள். முதலில் 11 மாதங்கள் சிறையில் இருந்தார் பெஞ்சமின். இவ்வழக்கில் பெஞ்சமினுக்கு ஆதரவாக மூதறிஞர் ராஜாஜியும் அவரது உதவியாளரும் வழக்கறிஞர்களாக வாதாடினார்கள்.
6-.2.-1943 அன்று நெல்லை செசன்ஸ் ஸ்பெசல் கோர்ட் நீதிபதி பாலகிருஷ்ணன் அவசரகால குற்ற தண்டனை அதிகரிப்பு சட்டங்களின் படி 3 ஆயுள் தண்டனை, அதாவது 63 ஆண்டுகள் குற்றவாளி பெஞ்சமின் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கினார்.
பெஞ்சமின் தமிழகத்தில் இருந்தால் எப்படியாவது தப்பிவிடுவார் என ஆந்திரா மாநிலம் அலிப்புரம் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கே இந்தியாவின் முதல் ஜனாதிபதியாக பின்னாளில் இருந்த பாபு ராஜேந்திரப் பிரசாத் உடன் சிறையில் அடைக்கப்பட்டார்.
பெஞ்சமின் சிறையில் இருந்த போது அவரது தந்தையார் சூசை எஸ்தேவு இறந்து போனார். அவரது இறுதி சடங்கில் கலந்து கொள்ள அன்றைய ஆங்கிலேய அரசு மறுத்துவிட்டது. கலங்கினார் பெஞ்சமின். பின்பு இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்ததும் சிறையில் வாடிய அனைத்து சுதந்திர போராட்ட வீரர்களும் விடுதலை செய்யப்பட்டனர்.
அதன் பின்பும் தியாகி பெஞ்சமின் போராட்டம் தொடர்ந்தது. அந்த போராட்டம் சுதந்திர இந்தியாவுக்காக நடந்தது. இந்தியாவின் தலைநகர் டெல்லியில் நிஷாமுதின் இரயில்வே ஸ்டேஷன் அருகில் பிழைப்பு தேடி சென்ற தமிழர்கள் குடியிருப்பு ஆயிரக்கணக்கில் இருந்தது. அவற்றை அப்புறப்படுத்த டெல்லி அரசு முயன்றனர். அதை கண்டு கொதித்து போன தியாகி பெஞ்சமின் அனைவரையும் ஒன்று திரட்டி போராட்ட களத்தில் இறங்கி, தமிழர்களுக்கு அந்த இடத்தை திரும்ப கிடைக்க செய்தார்.
அதலால் அப்பகுதியை ‘தியாகி பெஞ்சமின் காலனி’ என பெயர் வைத்தனர். இன்றளவும் அந்த பெயர் விளங்கி வருகிறது. இந்தியாவின் தலைநகரிலும் பெஞ்சமின் புகழ் கொடிகட்டி பறந்து வருகிறது.
அதேபோல், திருச்செந்தூர் கடற்கரை பகுதியில் அரசு குடியிருப்புக்காக 9 ஏக்கர் 25 செண்ட் இடம் ஒதுக்கி வைத்து, அதற்கு ஆங்கில வைஸ்ராய் கான்வன்துரை நினைவாக ‘கான்மாநகர்’ பெயரில் இருந்து வந்தது. அதை மாற்றி ‘அமலிநகர்’ என மறுபெயர் வைக்கவும் பெஞ்சமின் காரணமாக இருந்தார். அடுத்து அமலிநகர் அருகே வறுமையில் உள்ள மக்களுக்காக தியாகி பெஞ்சமின் சொந்தமாக நிலத்தை வாங்கி கொடுத்தார். அதற்கும் பெஞ்சமின் காலனி என்றே பெயர் வைக்கப்பட்டுள்ளது.
மும்பையில் தமிழ் சங்கம் வைத்து தமிழர்களுக்கு பாதுகாப்பு உதவி செய்து வந்த வேலு நாயக்கர், பெஞ்சமினின் நெருங்கிய நண்பராவார். அதனால் மும்பைக்கு பெஞ்சமின் அவரை சந்திக்க செல்வதுண்டு. ஒரு சமயம் காங்கிரஸ் அரசியல்வாதியான கருப்பையா மூப்பனார் மும்பையில் தமிழருக்கு எதிரான 50 பேர் கொண்ட கலவரகாரர்களிடம் அகப்பட்டுக் கொண்டார். அப்போது பெஞ்சமின் மட்டுமே இருந்து எதிரிகளை அடித்து துரத்தி மூப்பனார் உயிரை காப்பாற்றினார். இந்த சம்பவத்தை மூப்பனார் தியாகி பெஞ்சமின் இறப்புக்கு பின் அவரது குடும்பத்தினரிடம் கூறியிருக்கிறார்.
தியாகி பெஞ்சமின் 1953களில் இலங்கைக்கு சென்றிருக்கிறார். அங்கே அவருக்கு யாழ்பாணம் தமிழ் சங்கம் சிறப்பான வரவேற்புடன் பரிசளித்திருக்கிறது. எப்போதும் இலங்கை தமிழர் மீது தனிப்பிரியம் கொண்டிருந்தார். தேசபற்றோடு தமிழ் பற்றே மேலோங்கி இருந்த தியாகி பெஞ்சமின். கடைசி காலத்தில் தனது ஈழ தமிழர்களின் கண்ணீரையும், துயரத்தையும் அறிந்து தீரா வேதனையில் இருந்திருக்கிறார் .
தியாகி பெஞ்சமின் கிறிஸ்தவராக இருந்த காரணத்தினால் அவருக்கு அளிக்கப்பட்ட தூக்கு தண்டனை மூன்று ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது என்றும் கூறுவர்.
இவர் கிறிஸ்தவ குடும்பத்தினை சேர்ந்தவராக இருந்தாலும் சாதி சமயத்துக்கு அப்பாற்பட்டவர் என்பதற்கு உதாரணம் அவர் தன் குழந்தைகளுக்கு அசோகன், குமரன், பரதன், வாசுகி, ஜானகி, ரோகிணி, நவரத்தினம், ஸ்டாலின், வீரபாண்டி, பாபு ராஜேந்திர பிரசாத்,தமிழ்செல்வம் என பெயரிட்டனர்.
இவ்வூரில் ஒரு கிறிஸ்தவ பள்ளிகூடம் உள்ளது. அந்த பள்ளி உருவாக காரணம் தியாகி பெஞ்சமின் அவர்கள் தான். அந்த பள்ளி அன்னை அமலி சுதந்திர ஞாபக கர்த்தா பாட க சாலை என தற்போதும் கல்வி பணி செய்து கொண்டிருக்கிறது.
இதுபோன்று தியாகி பெஞ்சமின் இன்று இந்தியாவினை தாண்டி உலகமுழுவதும் உள்ள தமிழர்கள் மத்தியில் தலை நிமிர்ந்து நிற்கிறார். அவரை நினைவு கொள்வதில் நாம் மகிழ்ச்சி அடைகிறோம்.
அவருடைய மனைவி பெட்லா பெஞ்சமீன் தற்போதும் உயிரோடு உள்ளார். அவர் வாழ்ந்த வீட்டில் தற்போது பெஞ்சமின் புகைப்படத்தின் அருகில் அவர் அமர்ந்து வந்தோர்களை வரவேற்றுக்கொண்டிருககிறார். அமலிநகர் கல்லறை தோட்டத்தில் பெஞ்சமின் அவர்கள் கல்லறை மிக ஒய்யரா மாக உள்ளது.
தற்போதும் இவரது மூத்த மகன் அசோகன் பெஞ்சன் மின் அவர்களின் சுவடுகளை தன்னோடு வைத்து வந்தவர்களிடம் காட்டி மகிழ்ந்து வருகிறார். அவர் எழுதிய சிலேடு தற்போதும் அசோகன் வசம் உள்ளது.
அமலி நகரில் முழுமையாக பெஞ்சமின் அய்யாவின் சுவடுகளை கண்ட நாம் அங்கிருந்து மகிழ்ச்சியோடு அடுத்த ஊருக்கு நடைபோட்டோம்.
(தொடரும்)


