08. சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு தாலூகா தலைநகரில் நினைவு சின்னம்
சுதந்திரப் பேராட்ட வீரர்களுக்கு தாலூகாவின் தலைநகரில் நினைவு சின்னம் ஏற்படுத்தும் பணியை இந்தியாவிலேயே முதல் முதலாக திருச்செந்தூர் தாலூகாவில் மேற்கொண்டனர். இந்த பெருமையை திருச்செந்தூர் தாலூகா மக்கள் பெற காரணமானவர்கள் புகழ்பெற்ற மறக்கமுடியாத இரட்டையர்கள் கே.டி.கோசல்ராம், எம்.எஸ்.செல்வராஜ் ஆகியோர் ஆவர்.
6.05.1973 அன்று இந்த ஸ்தூபி திறக்கப்பட்டது. திருச்செந்தூர் தாலுகா சுதந்திர போரட்ட வீரர்களின் ஞாபகார்த்த ஸ்தூபி திருச்செந்தூர் பேரூராட்சி மன்றத்தின் டாக்டர் அம்பேத்கார் அவர்களின் ஞாபகார்த்த பூங்காவில் அமைக்க மன்றத்தினர் அனுமதித்தனர். அப்போது தியாகி சுதந்திரா கே .சுப்பையர் தலைவராக இருந்தார். உப தலைவராக ராஜரத்தினம் அவர்களும், நிர்வாக அதிகாரியாக மந்திரம் அவர்களும் பணியாற்றினர்.
திறப்பு விழாவிற்காக பாரத பாதுகாப்பு அமைச்சர் ஜெகசீவன்ராம், கோசல்ராமுடன் ஹெலிகாப்டரில் வந்து ஆறுமுகநேரி தாரங்கதரா கெமிக்கல்ஸ் மைதானத்தில் இறங்கினார். அவரை ஊர்வலமாக தியாகிகள் வரவேற்று வந்தனர். திருச்செந்தூர் தாலூகா தியாகிகள் சங்கத் தலைவர் தியாகி த தங்கவேல் நாடார் அவரை வரவேற்று மாலை அணிவித்தார். திருச்செந்தூர் பஞ்சாயத்து தலைவர் சுதந்திரா தியாகி சுப்பைய்யரும் நிர்வாக அதிகாரி மந்திரமும் அமைச்சரை வரவேற்றனர். இந்த ஸ்தூபி மிகச்சிறப்பாக விளங்கியது. இதில் சுதந்திர பேராட்ட தியாகி பி.எஸ் நாராயணன் நினைவு கொடியேற்று விழா 24.01.2011ல் நடந்தது. முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன் தலைமையில் முன்னாள் பாராளுமன்ற அமைப்பாளர் சந்திரசேகரன் முன்னிலையில் மத்திய கப்பல் துறை அமைச்சர் வாசன் இந்த நினைவு கம்பத்தில் தியாகி படத்தினை திறந்து வைத்து, கொடியேற்றி வைத்தார்.
பி.எஸ் நாராயணன் பிள்ளை திருச்செந்தூர் கீழ புதுத்தெருவை சேர்ந்த உல . பரமசிவன் பிள்ளை மகன். 1942 குலசை லோன் துரை கொலை வழக்கில் ஆறாவது எதிரியாகச் சேர்க்கப்பட்டு ஐந்து வருட கடுங்கால் தண்டனை விதிக்கப்பட்டு, தண்டனை காலம் பூராவையும் அலிப்புரம் முகாம் சிறையில் அனுபவித்து 1946 மார்ச்சு மாதம் விடுதலை யானார். 1950 ல் தியாகி பெஞ்சமின் சகோதரி புஷ்பம் அம்மாளை கலப்பு திருமணம் செய்து கொண்டார். மத்திய மாநில பென்சனை பெற்றவர். இவருடைய வாரிசுகள் தற்போதும் திருச்செந்தூர் குலசேகரபட்டினம் பகுதியில் வசிக்கிறார்கள்.
ஸ்தூபி அமைக்கும் போது திருச்செந்தூர் பஞ்சாயத்து போர்டு தலைவராக இருந்த சுதந்திரர் சுப்பையர் கணபதி ஐயர் மகன். திருச்செந்தூர் ஆகஸ்டு போராட்டம், தந்தி கம்பி அறுத்தல், ஒரு வருட கடுங்கால், 36 கசையடி, மருத்வாலாவில் ஒரு வருட கடுங்காவல் அலிப்புரம் சிறையில் இரண்டு தடவை அடைக்கப்பட்டார். இவர் மனைவி பெயர்கவேரியம்மாள், 1932முதல் தேச சேவையில் ஈடுபட்டுள்ளார்.
திருச்செந்தூர் தாலூகாவில் சுதந்திரபேராட்ட வீரர்கள் சங்கம் ஏற்படுத்தியிருந்தனர். தலைவராக ஆறுமுகநேரி தங்கவேல் நாடார், செயலாளராக நாசரேத் மகாராஜன், உபதலைவராக திருச்செந்தூர் சுதந்திரர் சுப்பையர், உதவி செயலாளராக ஆழ்வார்திருநகரி ராமன் ஆகியோர் இருந்துள்ளனர்.
திருச்செந்தூர் வந்த ஜெகஜீவன் ராமன் தேசிய வாசிப்பு அறை ஒன்றை திறந்து வைத்துள்ளார். இதை ஏ.கே.எஸ் சங்கரம்மாள் மற்றும் ஏ.கே.எஸ் கந்தசாமி ஆகியோர் இலவசமாக வழங்கியுள்ளார்கள். 6.05.1973ல் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
தற்போதும் திருச்செந்தூர் பேரூராட்சியில் காந்தி சிலை, எதிரே காமராஜர் சிலை, அருகில் சுதந்திர பேராட்ட வீரருக்கான ஆர்ச், அம்பேத்கார் பூங்காவில் எங்கு பார்த்தாலும் தியாகிகளின் கல்வெட்டு என பார்ப்போரை பிரமிக்க செய்வதாக உள்ளது.
இந்தியாவிலேயே முதல் முதலில் திறக்கப்பட்ட இந்த சுதந்திரபோராட்ட தியாகி ஸ்தூபி தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூரில் உள்ளது என்பது நமக்கு மிகவும் பெருமையாக உள்ளது.
(தொடரும்)


