ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் திருக்கோயிலில் மாசி திருவிழாவை முன்னிட்டு தெப்ப உற்சவம் நடந்தது.
தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள நவதிருப்பதி கோயில்களில் ஒன்றான ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோயில் மாசி திருவிழா கடந்த மார்ச் 1ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நாட்களில் தினமும் மாலையில் சுவாமி நம்மாழ்வார் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா நடந்தது. மார்ச் ஐந்தாம் தேதி ஐந்தாம் திருவிழாவை முன்னிட்டு கருட வாகனத்தில் சுவாமி பொலிந்துநின்ற பிரானும், ஹம்ச வாகனத்தில் சுவாமி நம்மாழ்வார் எழுந்தருளும் வீதி உலா நடந்தது. நேற்று ஒன்பதாம் திருவிழாவில் திருத்தேரோட்டம் நடந்தது.
பத்தாம் திருவிழாவான இன்று தெப்ப உற்சவம் நடந்தது. தெப்ப உற்சவத்தை முன்னிட்டு இன்று அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூபம், திருமஞ்சனம், நித்தியல் கோஷ்டி நடைபெற்றது. மாலை 6:00 மணிக்கு உற்சவர் பொழிந்து நின்றபிரான் பல்லக்கில் எழுந்தருளினார். இரவு 7 மணிக்கு தெப்பத்தில் எழுந்தருளிய உற்சவர் பொலிந்துநின்றபிரான் மூன்று முறை தெப்பக்குளத்தில் சுற்றி வந்தார். தெப்ப உற்சவத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
நாளை சனிக்கிழமை இரவில் சுவாமி நம்மாழ்வார் தெப்ப உற்சவம் நடைபெறுகிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் பக்தர்களும் செய்துள்ளனர்.


