ஸ்ரீவைகுண்டம் அருகே பள்ளி மாணவன் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்து விசிகவினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள அரியநாயகிபுரத்தைச் சேர்ந்த 11 ஆம் வகுப்பு பள்ளி மாணவன் தேவேந்திரன் என்பவர் இன்று பள்ளியில் தேர்வு எழுதுவதற்காக தனியார் பேருந்தில் பயணம் செய்தபோது கெட்டியம்மாள்புரம் பகுதியைச் சேர்ந்த மூன்று இளம் சிறார்கள் சேர்ந்து தேவேந்திரனை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பியோடினர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தேவேந்திரனை மீட்டு ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு உயிரிக்கு ஆபத்தான நிலையில் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இதற்கிடையில் இந்த சம்பவம் தொடர்பாக கெட்டியம்மாள்புரத்தைச் சேர்ந்த மூன்று இளம் சிறார்களை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் பள்ளி மாணவன் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய சம்பவத்தை கண்டித்து ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூர் பேருந்து நிலையம் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கண்டன ஆர்ப்பாட்டத்தில் குற்றவாளிகளை குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்யவேண்டும், பாதிக்கப்பட்ட மாணவனுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும், மாணவன் குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் விசிக தூத்துக்குடி தென்காசி மண்டல செயலாளர் முரசு தமிழப்பன், தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் டிலைட்டா, முன்னாள் மண்டல செயலாளர் தமிழினியன், ஸ்ரீவைகுண்டம் தொகுதி செயலாளர் திருவள்ளுவன், தொண்டர் அணி மாநில துணை செயலாளர் சுதாகர், மகளிர் அணி மாவட்ட செயலாளர் தமிழ்செல்வி, நாடாளுமன்ற தொகுதி துணை செயலாளர் மணிகண்டராசா, ஆழ்வார்திருநகரி மேற்கு ஒன்றிய செயலாளர் செல்வக்குமார், இளஞ்சிறுத்தை எழுச்சிப்பாசறையின் ஆழ்வை ஒன்றிய அமைப்பாளர் மதன், விவசாய அணி மாவட்ட அமைப்பாளர் கன்னிமுத்து, தென்திருப்பேரை நகர செயலாளர் அய்யப்பன், விடுதலை கலை இலக்கிய பேரவை மாவட்ட அமைப்பாளர் சிறுத்தை சிவா, தொழிலாளர் விடுதலை முன்னனி பொறுப்பாளர் நந்தன், தொண்டர் அணி மாவட்ட துனை அமைப்பாளர் பாதகரை முத்து, மகிழன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதற்கிடையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் திடீரென திருநெல்வேலி திருச்செந்தூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். கோஷமிட்டபடி சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து போராட்டக்காரர்களை கைது செய்த போலீசார் வாகனத்தில் அனைவரையும் ஏற்றி தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.


