கோவில்பட்டியில் இருந்து கேரளாவுக்கு லோடு ஆட்டோவில் கடத்த முயன்ற 1½ டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்து டிரைவரை கைது செய்தனர்.
கோவில்பட்டி பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக போலீஸ் துணை சூப்பிரண்டு ஜெகநாதனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின்பேரில், தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் மந்தித்தோப்பு பகுதியில் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கிருந்து கிருஷ்ணாநகர் வழியாக வேகமாக வந்த லோடு ஆட்டோவை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். அப்போது அதில் தலா 60 கிலோ எடை கொண்ட 24 மூட்டைகளில் மொத்தம் 1,440 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து லோடு ஆட்டோ டிரைவரான கயத்தாறைச் சேர்ந்த மாடசாமி மகன் முத்துகனியிடம் (வயது 29) விசாரித்தனர். இதில் அவர் கோவில்பட்டியில் இருந்து ரேஷன் அரிசியை வாங்கி கயத்தாறுக்கு கொண்டு சென்று, அங்கிருந்து கேரளாவுக்கு கடத்தி செல்ல முயன்றது தெரிய வந்தது. லோடு ஆட்டோவுடன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். லோடு ஆட்டோவுடன் ரேஷன் அரிசியை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.


