தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் தசரா திருவிழாவிற்கு புகழ் பெற்றது. மைசூருக்கு அடுத்தபடியாக குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும்.
10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் தென்மாவட்டங்கள் மற்றும் கோவை, சென்னை போன்ற வெளி மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பல்வேறு வேடங்கள் அணிந்து இந்த தசரா திருவிழாவிற்கு வருகை தருவார்கள்.
இந்த குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் 18 நிரந்தர உண்டியல் உள்ளது. இந்த கோவில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது.
இந்த கோவிலில் உள்ள இந்த 18 நிரந்தர உண்டியல்களும் மாதந்தோறும் எண்ணப்படும். இந்த நிலையில் கடந்த மாதம் 08 ஆம் தேதி முதல் இந்த மாதம் 06 ஆம் தேதி வரையிலான உண்டியல் காணிக்கைகளை எண்ணும் பணி இன்று நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.
இதில் பக்தர்கள் காணிக்கையாக ரூபாய் 56 லட்சத்து 3 ஆயிரத்து 640 ரூபாய் ரொக்கமாக வருவாய் வந்துள்ளது. மேலும் தங்கம் 210 கிராமும், வெள்ளி 1221 கிராம் கிடைத்துள்ளது.


