சாத்தான்குளம் அருகே பாதயாத்திரை பக்தர்கள் கூட்டத்தில் கார் புகுந்ததில் பள்ளி ஆசிரியை உள்பட 5 பேர் காயம் அடைந்தனர்.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசி திருவிழாவையொட்டி, நாகர்கோவில், திசையன்விளை, வள்ளியூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள், சாத்தான்குளம் வழியாக பாதயாத்திரையாக செல்கின்றனர்.
இந்நிலையில் நாகர்கோவில் பகுதியை சேர்ந்த பக்தர்கள், கடந்த 5ஆம் தேதி இரவு இட்டமொழி சாலையில் தனியார் கல்லூரி வழியாக பாதயாத்திரையாக சென்று கொண்டிருந்தபோது, முதலூர் ஏ.பி.நகரை சேர்ந்த ஆசீர்வாதம் மகன் யோவான் என்பவர் ஓட்டி வந்த கார், பாதயாத்திரை பக்தர்கள் கூட்டத்தில் புகுந்தது.
இதில், கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலத்தை சேர்ந்த பிரகாஷ் மனைவியான ஆசிரியை போகிஷா, மதுசூதனன் மகன் சிவபிரதீஷ் (33), நிவேஷ்குமார் மகன் சுதன்(29), தாணுமாலய பெருமாள் மகன் கிருஷ்ண பிரகாஷ்(27), நாகர்கோவிலைச் சேர்ந்த ராஜா மகன் குமார்(34) ஆகிய 5 பேர் காயம் அடைந்தனர்.
இவர்களுக்கு சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளித்து மேல் சிகிச்சைக்காக நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுதொடர்பாக சாத்தான்குளம் தலைமைக் காவலர் ஆனந்தகுமார் வழக்குப் பதிந்து காரை ஓட்டி வந்த யோவான் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


