தமிழகத்தில் அரசு துறையில் காலியாக பணியிடங்களை நிரப்ப வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
தூத்துக்குடியில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட பிரதிநிதித்துவப் பேரவை கூட்டம் மாவட்ட துணைத் தலைவர் சின்னத்தம்பி தலைமையில் நடைபெற்றது. இணைச் செயலாளர் உமாதேவி வரவேற்றார். மாநில துணைத் தலைவர் பெரியசாமி துவக்க உரையாற்றினார். மாவட்ட செயலாளர் முருகன் ஆண்டறிக்கை வாசித்தார். பொருளாளர் தமிழரசன் நிதிநிலை அறிக்கை சமர்ப்பித்தார். கூட்டத்தில் சங்கத்தின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில், பழைய ஒய்வூதிய திட்டத்தை அமல் படுத்த வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். முதல் அமைச்சரின் காலை உணவு திட்டத்தை சத்துணவு ஊழியர்களைக் கொண்டு நடத்த வேண்டும். அரசாணை 152, 139 ரத்து செய்து, மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் அடிப்படை பணிகள் நிரந்தர பணியிடங்களாக தொடர வேண்டும். காலியாக உள்ள 6 லட்சம் காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும். புதிய மருத்துவக் காப்பீடுத்திட்டத்தில் உள்ள குளறுபடிகளை களைய வேண்டும். தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் விடுபட்ட பட்டய மேற்படிப்புகளை துவங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.


