தூத்துக்குடி மாவட்டத்தில் மக்கள் களம் நிகழ்ச்சியில், 102 பயனாளிகளுக்கு ரூ.49 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை கனிமொழி எம்பி வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் வட்டத்திற்குட்பட்ட சோழபுரம், கன்னக்கட்டை, புங்கவர்நத்தம், போடுபட்டி மற்றும் டி.சண்முகபுரம் ஆகிய கிராமங்களில் நேற்று நடைபெற்ற மக்கள் களம் நிகழ்ச்சியில், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் முன்னிலையில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டு கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்கள்.
அதனைத்தொடர்ந்து, 2 பயனாளிகளுக்கு ரூ.2 இலட்சம் விபத்து நிவாரணத்தொகைக்கான காசோலைகளையும், 2 பயனாளிகளுக்கு ரூ.4000 கல்வி உதவித்தொகைக்கான காசோலைகளையும், 5 பயனாளிகளுக்கு ரூ.46 ஆயிரம் திருமண உதவித்தொகைக்கான காசோலைகளையும், 3 பயனாளிகளுக்கு ரூ.60 ஆயிரம் இயற்கை மரண உதவித்தொகைக்கான காசோலைகளையும், 64 பயனாளிகளுக்கு உழவர் பாதுகாப்பு உறுப்பினர் அடையாள அட்டைகளையும், 18 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் உத்தரவுகளையும் என மொத்தம் 94 பயனாளிகளுக்கு ரூ.3,10,000 மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளையும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் 08 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.46,34,000 சுயதொழில் கடனுதவிகளையும் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சிகளில், கனிமொழி எம்பி பேசும்போது தெரிவித்ததாவது: மாவட்டத்தில் ஒவ்வொரு பகுதியாக சென்று பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து மனுக்களாக வாங்கி விரைவில் நடவடிக்கை எடுப்பதுதான் மக்கள் களம் நிகழ்ச்சி. கடைக்கோடி கிராமங்களில் வசித்து வரக்கூடிய நீங்கள் உங்கள் கோரிக்கை மனுக்களை கொடுக்க வேண்டுமென்று சொன்னால் சம்பந்தப்பட்ட அரசு அலுவலகங்களுக்கு நேரில் சென்று கொடுக்க வேண்டும்.
ஆனால் இந்த மக்கள் களம் நிகழ்ச்சி வாயிலாக பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள், மக்கள் பிரதிநிதிகள் என அனைவரும் நாங்களே உங்கள் கிராமத்திற்கு நேரில் வந்து உங்களிடம் மனுக்களை பெற்று அதனை உடனடியாக பரிசீலனை செய்து விரைவாக நடவடிக்கை மேற்கொள்வது தான் இந்த மக்கள் களம் நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும். அந்த வகையில் இன்று 33ஆவது கிராமமாக சோழபுரம், 34 ஆவது கிராமமாக கன்னக்கட்டை, 35 ஆவது கிராமமாக புங்கவர்நத்தம், 36 ஆவது கிராமமாக போடுபட்டி, 37ஆவது கிராமமாக டி. சண்முகபுரம் ஆகிய கிராமங்களில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுள்ளோம்.
தமிழ்நாடு முதலமைச்சர் அனைத்துத்தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் பல்வேறு முன்னோடி திட்டங்களை அரசுத்துறைகள் வாயிலாக தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள். அந்தவகையில், அரசுப் பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியர்கள் பயன்பெறும் வகையில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தைத் தொடங்கி வைத்து, மாணவர்கள் மகிழ்ச்சியோடு பள்ளிக்கு செல்லக்கூடிய நிலையை உருவாக்கியவர் தமிழ்நாடு முதலமைச்சர்.
அது மட்டுமல்லாமல் தமிழ்நாடு முதலமைச்சர் மகளிர்க்கு மாதம் 1000 ரூபாய் உரிமைத்தொகையாக வழங்கப்படும் என அறிவித்தார்கள். அதனை நிறைவேற்றும் விதமாக வருகின்ற 15ஆம் தேதி கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தைத் தொடங்கி வைக்கவுள்ளார்கள். மக்களுக்கான பல்வேறு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்திக் கொண்டிருக்கக்கூடிய அரசு தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாடு முதலமைச்சர் தமிழகத்தில் அனைத்து கிராமங்களும் தன்னிறைவு பெற்ற கிராமங்களாக உருவாக வேண்டும் என்ற அடிப்படையில் பல்வேறு முன்மாதிரியான திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள். பெண்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு அடித்தளம் அமைத்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் வழியில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு பெண்களின் முன்னேற்றத்திற்கென்று பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
குறிப்பாக மகளிர்க்கு கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம், வருகின்ற 15ஆம் தேதி முதல் மகளிர்க்கு மாதம் 1000 ரூபாய் கிடைக்கக்கூடிய கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம், பெண்களிடையே உயர்கல்வி ஊக்குவிக்கும் விதமாக மாதம் 1000 ரூபாய் வழங்கக்கூடிய புதுமைப்பெண் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அறிவித்தும் செயல்படுத்தியும் வருகிறார்கள். அது மட்டுமல்லாமல் கல்லூரிப் படிப்பை முடித்த மாணவர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டுமென்ற அடிப்படையில் நான் முதல்வன் திட்டத்தின் வாயிலாக அவர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வேலை வாய்ப்புகள் கிடைக்க வழிவகை செய்யப்படுகிறது.
இது போன்ற பல்வேறு முன்னோடி திட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர் செயல்படுத்தி வருகிறார்கள். மேலும், சோழபுரம் ஊராட்சியில் மக்களின் கோரிக்கையை ஏற்று தார் சாலை வசதி, சிமெண்ட் சாலை வசதி, வாறுகால் வசதி, நீர்தேக்கத்தொட்டி போன்ற திட்டப் பணிகள் விரைவில் நிறைவேற்றப்படும். அதுபோல கன்னக்கட்டை கிராம மக்கள் இரண்டு தார் சாலைகள் அமைத்து தர வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளீர்கள் இப்பணிகள் இந்த ஆண்டே தொடங்குவதற்கு தேவையான வழிவகை செய்யப்படும். அதுபோல போடுபட்டி ஊராட்சியில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
குறிப்பாக ரூபாய் 40 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டடம் கட்டும் பணிகள், அது மட்டுமல்லாமல் இந்தப் பகுதி மக்களின் கோரிக்கைகளை ஏற்று உரக்கிடங்குகள் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. இந்தப் பகுதிகளில் அடிப்படை வசதிகளை மேலும் நிறைவேற்றும் விதமாக கிட்டத்தட்ட ரூபாய் 67 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. டி. சண்முகபுரம் ஊராட்சிப் பகுதியில் ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டிடம் கட்டுதல், நூலகத்தை மேம்படுத்துதல், முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் என சுமார் ரூபாய் 6 கோடி மதிப்பீட்டில் பல்வேறு திட்டப் பணிகள் நடைபெற்றுள்ளது.
மேலும், டி. சண்முகபுரம் கிராம மக்கள் உயர்மட்ட பாலம், மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி, குடிநீர் சுத்திகரிப்பு நிலையம், தடுப்புச் சுவர், சமுதாயக்கூடம் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வைத்துள்ளீர்கள் உங்களது கோரிக்கைகள் எவ்வளவு விரைவிலே செய்து தர முடியுமோ செய்து தருகிறேன் என்று எல்லோருக்கும் உறுதி அளிக்கிறேன்.
இன்று நடைபெற்ற மக்கள் களம் நிகழ்ச்சிகளில் 94 பயனாளிகளுக்கு கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, இயற்கை மரண உதவித்தொகை, விபத்து நிவாரணம், உழவர் பாதுகாப்பு உறுப்பினர் அடையாள அட்டை, பட்டா மாறுதல் உத்தரவு என ரூபாய் 3 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளோம். எல்லாவற்றிக்கும் முத்தாய்ப்பாக 8 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.46,34,000 சுய தொழில் கடன் உதவிகளையும் வழங்கியுள்ளோம். மக்கள் களம் நிகழ்ச்சி வாயிலாக பொதுமக்களிடமிருந்து பெறக்கூடிய அனைத்து மனுக்களையும் பரிசீலனை செய்து தகுதியான மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சிகளில், அமைச்சர் பி.கீதாஜீவன் பேசும்போது தெரிவித்ததாவது: தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் நமது மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு கிராமங்களுக்கும் நேரில் சென்று பொது மக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்று கோரிக்கைகளை நிவர்த்தி செய்து தருவதற்காக இன்று சோழபுரம், கன்னக்கட்டை, புங்கவர்நத்தம், போடுபட்டி மற்றும் டி.சண்முகபுரம் ஆகிய கிராமங்களுக்கு வருகை தந்துள்ளார்கள். நமது மாவட்டத்தில் மொத்தம் 408 ஊராட்சிகள் உள்ளது. தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் மக்கள் களம் நிகழ்ச்சி வாயிலாக ஒவ்வொரு ஊராட்சிக்கும் நேரில் சென்று பொதுமக்களை சந்தித்து மனுக்களைப் பெற்று வருகிறார்கள்.
அதுமட்டுமல்லாமல், தூத்துக்குடி மாவட்ட வளர்ச்சிக்கு தேவையான திட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் தெரிவித்து சர்வதேச அறைகலன் பூங்கா, மினி டைட்டல் பார்க் போன்ற பல்வேறு தொழில் நிறுவனங்கள் உருவாவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். பெண்களின் உரிமைக்காகவும், தமிழகத்தின் வளர்ச்சிக்காகவும், தமிழர்களின் நலனுக்காகவும் பாராளுமன்றத்தில் குரல் கொடுக்கக் கூடியவர் நமது தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் . தமிழ்நாடு முதலமைச்சர் சொன்ன வாக்குறுதிகளை தொடர்ந்து நிறைவேற்றி வருகிறார்கள். அதில் ஒன்று கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் இத்திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் வருகின்ற 15ஆம் தேதி தொடங்கி வைக்க உள்ளார்கள்.
இத்திட்டத்தின் மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு மகளிர்கள் பயன்பெறவுள்ளீர்கள். அதுபோன்று அரசுப் பள்ளியில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்று கலை மற்றும் அறிவியல் கல்லூரி, வேளாண் கல்லூரி, மருத்துவக் கல்லூரி, தொழில்நுட்பக் கல்லூரி போன்ற எந்த ஒரு கல்லூரியிலும் சேர்ந்தாலும் புதுமைப்பெண் திட்டத்தின் வாயிலாக பயன் அடைந்து கொள்ளலாம்.
அதுமட்டுமல்லாமல், தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு முதியோர் உதவித் தொகையை 1000 ரூபாயிலிருந்து 1200 ரூபாயாகவும், மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம் 1000 ரூபாயிலிருந்து 1500 ரூபாயாகவும், மாற்றுத்திறனாளிகள் பராமரிப்பு உதவித்தொகை 1500 ரூபாயிலிருந்து 2000 ரூபாயாகவும் உயர்த்தி வழங்கி வருகிறது. மேலும், மக்களைத்தேடி மருத்துவம் திட்டம், கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம், நம்மைக் காக்கும் 48 மணி நேரம் திட்டம், இல்லம்தேடிக் கல்வி திட்டம், நான் முதல்வன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு மகத்தான திட்டங்களை செயல்படுத்தி வருகின்ற அரசு தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு என தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி. மார்க்கண்டேயன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பெ.ஜெகன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் சு.கஸ்தூரி, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் தங்கமாரியம்மாள், எட்டயபுரம் வட்டாட்சியர் மல்லிகா, போடுபட்டி ஊராட்சி மன்றத் தலைவர் ராமகிருஷ்ணன், போடுபட்டி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கோமதியம்மாள், புங்கவர்நத்தம் ஊராட்சி மன்றத் தலைவர் லட்சுமி, கன்னக்கோட்டை ஊராட்சி மன்றத் தலைவர் சீனிவாசன், சோழபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் விஜயா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


