தூத்துக்குடி மாவட்டத்தில் மீன்பிடி தொழில் ஒரு முக்கிய வாழ்வாதாரமாக உள்ளது. ரிலையன்ஸ் அறக்கட்டளை மீனவர்கள் பாதுகாப்பாக தொழில் செய்வதற்காக கடல் காலநிலை குறித்த தகவல்களை இந்திய தேசிய கடல் தகவல் சேவை மையத்திலிருந்து பெற்று ஒலி வடிவில் மீனவர்களின் அலைபேசி எண்ணிற்கு கொடுத்துக் கொண்டிருக்கிறது. மேலும் கட்டணமில்லா அலைபேசி எண் 18004198800 மூலம் மீனவர்கள் தொடர்பு கொண்டு தொழில் செய்து வந்தனர். தற்போது ரிலையன்ஸ் அறக்கட்டளை “மச்சிலி” என்ற செயலியை அறிமுகப்படுத்தி உள்ளது. அந்த செயலி மூலம் கடலில் வீசும் காற்றின் வேகம், அலையின் உயரம், நீரோட்டம் மற்றும் மீன்கிடைக்கும் தகவல்களை பெறமுடியும். இந்த செயலியை பயன்படுத்தும் விதம் குறித்தும் மேலும் தேவையான தகவல்கள் குறித்தும் கலந்துரையாடல் நிகழ்ச்சி திருச்செந்தூர் வட்டாரத்தில் உள்ள ஆலந்தலை கிராமத்தில் நடைபெற்றது. ரிலையன்ஸ் அறக்கட்டளை தகவல் சேவையின் திட்ட தலைவர் பாலகுமார் மற்றும் மாநில ஒருங்கிணைப்பாளர் முகில்நிலவன் ஆகியோர் செயலி குறித்து விளக்கம் அளித்து கலந்துரையாடினர். இதில் 40 க்கும் மேலான மீனவர்கள் கலந்துகொண்டு தங்கள் அலைபேசியில் play store மூலம் download செய்து பயனடைந்தனர்.


