திருநெல்வேலி குறுக்குத்துறை முருகன் கோயிலை பொறுத்தவரை வைகாசி விசாகம் மிகவும் சிறப்பான நாள். இந்த நாள் தாமிரபரணி மற்றும் முருகப்பெருமான் ஆகியோரின் பிறந்தநாள். இந்த நாளில் தான் குபேரன் தாமிரபரணியில் குளித்து இழந்த பொருளை மீட்டான். எனவே வைகாசி விசாகத்தில் தாமி ரபரணியில் எங்கு குளித்தாலும் கும்பகோணம் மகாமகத்தில் குளித்த புண்ணியம் கிட்டும்.
அதே நேரத்தில் குறுக்குத்துறை முருகன் கோயிலில் முன்புள்ள தாமிபரணியில் குளித்தால், முருகப் பெருமானின் அறுபடை வீடுகளுக் குச் சென்று வந்த புண்ணியம் கிட்டும். எனவே, இந்த நாளில் தாமிரபரணியில் நீராடுவதை பெரும்பாக்கியமாக மக்கள் நம்புகிறார்கள்.
அது மட்டுமல்லாமல் மேலும் ஒரு பாக்கியம் இந்தக் பகுதிக்கு உண்டு. தன் தந்தையின் அஸ்தியைக் கலசத்தில் எடுத்துச் சென்ற ஒருவர், புண்ணிய தீர்த்தம் தேடி அலைந்துள்ளார். காசி, ராமேஸ்வரம் போன்ற இடங்களில் உள்ள புண்ணிய தலங்களுக்கு சென்று அஸ்தியை கரைத் தார். ஆனால், எந்தவொரு மாற்றமும் நிகழவில்லை. நெல்லை அருகே உள்ள கருப்பன்துறையில் அவர் தாமிர பரணி ஆற்றில் அஸ்தியை கரைத்தபோது வெண்மையாக இருந்த அது கருமை நிறத்துக்கு மாறியது. குறுக்குத்துறை வந்த போது அந்த அஸ்தி குருத்து விட்டது. சிந்து பூந்துறையில் கரைத்த போது மலர்ந்து மலர்களாகி விட்டதாம். எனவே, உலகத்தில் உள்ள அனைத்து தீர்த்தக்கட்டங்களில் மிக முக்கிய தீர்த்தகட்டமாக இந்த கோயில் அருகில் உள்ள இந்த மூன்று தீர்த்தக்கட்டங்களைக் கூறுகிறார்கள்.
ஒற்றைக்காலில் தவம் செய்வது, நீர்மேல் தவம் செய்வது, நெருப்பின் மீது நின்று தவம் செய்தல், கோயில் குளங்கள் கட்டுதல் ஆகியவற்றின் மூலம் முக்தி அடைய முடியும். ஆனால், குறுக்குத்துறை கோயிலை வலம் வந்து வணங்கி நின்றால் முக்தி கிடைக்கும். எனவே தான் இந்தக் கோயிலைக் குறுக்குத் துறை என்றழைக்கிறார்கள். திருச்செந்தூர் முருகனுக்கு நேர்ந்த நேர்ச்சையை நிறைவேற்ற முடியாதவர்கள் குறுக்குத்துறையில் வந்து நிறைவேற்றலாம். எனவே இக்கோயிலைக் குறுக்குத்துறை முருகன் கோயில் என்றழைக் கிறார்கள்.
கோயில் கிழக்கு பார்த்து உள்ளது. உள்ளே நுழைந்தால் விநாயகரும், பாலசுப்பிரமணியரும் வீற்றிருக்கின்றனர். இவர்களுக்கு பிறகு அனுக்ஞை விநாயகர், வீரபாகு, வீரமகேந்திரர் உள்ளனர். கருவறை யில் சுயம்பு மூர்த்தியாக சுப்பிரமணியர் வள்ளி தெய்வானை யுடன் காட்சி தருகிறார். அருகில் நெல்லையப்பர்& காந்திமதி, சொக்கர் & மீனாட்சி, நடராஜர் & சிவகாமி ஆகிய தெய்வங்கள் உள்ளனர். ஆறுமுகநயினார் தெற்குநோக்கி அமர்ந்து அருள்பாலிக்க அருகிலேயே சண்முகர் வள்ளி தெய்வானையுடன் காட்சி தருகிறார். இவர்களைத் தரிசித்த பிறகு பாறையில் குடையப்பட்ட உள்சுற்று வழியாகச் சுற்றி வந்தால் அன்னை பராசக்தியுடன் பஞ்சலிங்கத்தைத் தரிசிக்கலாம்.
திருமணத் தடை உள்ளவர்கள் இங்கு வந்து செவ்வாய்க் கிழமை தோறும் பாலாபிஷேகம் செய்து, செவ்வரளி மாலை சாற்றி வணங்கினால் தடை நீங்கும். புத்திர தோஷம் இருப்பவர்கள் இந்த ஆலயத்துக்கு வந்து குழந்தையைத் தவிட்டுக்கும் கருப்பட்டிக்கும் முருகன் முன்னால் கொடுத்து வாங்கிச் செல்வார்கள். தார தோஷம் உள்ளவர்கள் இக்கோயிலில் வந்து வாழை பரிகாரம் செய்வார்கள். கோயிலில் சித்திரா பவுர்ணமி, ஆவணி திருவிழாவின் போது தேரோட்டம் நடக்கும். வைகாசி விசாகம், ஆனி உத்திராடம், ஆடி 18ம்பெருக்கு, புரட்டாசி நவராத்திரி, ஐப்பசி கந்தசஷ்டி, மார்கழி திருவாதிரை விழா, தைப்பூசம், பங்குனி உத்திரம் ஆகிய லிழாக்கள் சிறப்பாக நடைபெறும். மாசி அமாவாசையில் பத்தாயிரம் தீபமும், 6 வருடத்துக்கு ஒரு முறை இந்த நாளில் லட்ச தீபமும் ஏற்றப்படும்.
இந்த கோயிலுக்கு இணையாக மேலக்கோயில் ஒன்றுள்ளது. தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் வந்து குறுக்குத்துறை முருகன் கோயில் மூழ்கினால் மேலக்கோயிலில் வைத்து தான் பூஜை நடைபெறும். திருமணம் போன்ற சடங்குகள் நடைபெறும்.
இந்த கோயில் நிர்வாகத்தினை திருவாவடுதுறை ஆதினம் சார்பில் செய்து வருகிறார்கள்.
குறுக்குத்துறை ரகசியம் என்ற பெயரில் எழுத்தாளரும், பேச்சாளரு மான நெல்லைகண்ணன் ஒரு புத்தகம் எழுதி வெளியிட்டுள்ளார். இதே போல் குறுக்குத்துறை முருகன் கோயில் நெல்லையை பற்றி எழுதும் எழுத்தாளர்களுக்கும், நெல்லை எழுத்தாளர்களுக்கும் முக்கியமான ஒன்றாக மாறிவிட்டது.
திருநெல்வேலியைப்பற்றி எழுதுபவர்கள் நெல்லையப்பரையும், குறுக்குத்துறை முருகனையும் விட்டு விட்டு எழுத முடியாது. அந்த அளவுக்கு முருகன் மிகவும் பிரபலமாக பேசப்படுபவர்.
இந்த கோயிலுக்கும் திருவாவடுதுறை ஆதினத்துக்கும் எந்த அளவுக்கு சம்பந்தம் உண்டோ. அதுபோலவே குளத்தூர் ஜமீன் தாருக்கும் சம்பந்தம் உண்டு. 1815 ஆம் ஆண்டு குளத்தூர் ஜமீன்தார்கள் ஆங்கிலேயர் களிடம் இந்த ஜமீனை ஏலத்துக்கு எடுத்துள்ளார்கள். வீரபாண்டிய கட்டபொம்மன் கலகத்துக்கு பிறகு ஆங்கிலேயர்கள் கையில காசு வாயில தோசை என்ற பழமொழிக்கு ஏற்ப ஏலத்தில் முன்பணம் தருவோருக்கு ஜமீனை ஒப்படைத்தார்கள். இப்படித்தான் திருநெல்வேலி நகரில் வாழ்ந்த கார்காத்த பிள்ளை இனத்தை சேர்ந்தவர்கள், தூத்துக்குடி அருகில் உள்ள குளத்தூர் ஜமீனை ஏலம் எடுத்து ஆட்சிப்புரிந்துள்ளனர். இவர்களின் வாரிசுதாரர்கள் குறுக்குத்துறை முருகன் கோயிலுக்கு நிறைய நன்கொடை வழங்கியுள்ளார்கள்.
திருச்செந்தூர் முருகன் கோயிலில் வரலாற்றிலும் குறுக்குத்துறை முருகன் கோயில் வரலாற்றிலும் சிறப்பாக பேசப்படுபவர் வடமலையப்ப பிள்ளை. இவர் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு குறுக்குத்துறையில் இருந்து தான் முருகன் சிலையை அடித்துக்கொண்டு சென்றுள்ளார்.
அந்தவரலாறு மிகவும் சிறப்பாக பேசப்படுகிறது.
ஒரு சமயம் டச்சுக்காரர்கள் திருச்செந்தூர் முருகன்கோயிலில் உள்ள முருகன் சிலையை கடத்தி பாய்மரக் கப்பல் மூலமாக கொண்டு சென்றார்கள். அப்போது முருகப்பெருமான் பெரும் காற்றையும் புயலையும் ஏவி விட்டார். இதனால் டச்சு காரர்கள் சென்ற பாய்மரக்கப்பல் தண்ணீரில் மூழ்கும் நிலைக்கு சென்றது.
இதனால் டச்சு காரர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுவரை அமைதியாக இருந்த கப்பல் புயலில் சிக்கியது. எதிர்பாராத விதமாக எப்படி புயல் வந்தது என யோசித்தனர். உடன் இருந்த ஒருவன், நாம் இந்த சிலையை கடத்திக்கொண்டு செல்வதால் தான் இந்த பிரச்சனை. எனவே சிலையை கடலில் தூக்கி போட்டு விடுங்கள். எல்லாம் சரியாகிவிடும் என்று கூறினான்.
உடனே பயந்து போன டச்சு காரர்கள் முருகன் சிலையை தூக்கி கடலில் எரிந்தனர்.
அதன் பிறகு புயல் நின்றதா?
( நதி வற்றாமல் ஓடும்)


