தூத்துக்குடியில் கல்லூரி மாணவரை தாக்கி ரூ.20ஆயிரம் மதிப்புள்ள செல்போன் பறித்த 3பேரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி பகுதியைச் சேர்ந்த இளைஞர், சாயர்புரம் பகுதியில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். நேற்று அவர் தூத்துக்குடி சத்யா நகர் அருகே நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த மர்ம நபர்கள் அவரை தாக்கி அவரிடமிருந்த ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை பறித்து சென்றுள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட நபர் அளித்த புகாரின் பேரில் தென்பாகம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இச்சம்பவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில், தூத்துக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் சத்தியராஜ் மேற்பார்வையில் தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) மூக்கன் தலைமையில் உதவி ஆய்வாளர் கங்கைநாத பாண்டியன், பயிற்சி உதவி ஆய்வாளர் செல்வம், சிறப்பு உதவி ஆய்வாளர் கதிரேசன் மற்றும் தெர்மல்நகர் காவல் நிலைய தலைமை காவலர் மாணிக்கராஜ், முதல் நிலை காவலர் மகாலிங்கம், முத்தையாபுரம் காவல் நிலைய முதல் நிலை காவலர் சாமுவேல், காவலர் முத்துப்பாண்டி, மத்தியபாகம் காவல் நிலைய காவலர் செந்தில்குமார், தென்பாகம் காவல் நிலைய காவலர் திருமணிராஜன் ஆகியோர் அடங்கிய தனிப்படை தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இதில் தூத்துக்குடி சிலோன் காலனியைச் சேர்ந்த சிவபெருமாள் மகன் தங்ககுமார் (22), பிரையன்ட் நகரை சேர்ந்த தனுஷ்கோடி மகன் கார்த்திக் (22) மற்றும் முத்தையாபுரம் கீதா ஜீவன் நகரைச் சேர்ந்த ரஞ்சித் மகன் சக்திவேல் (20) ஆகிய 3 பேரும் சேர்ந்து செல்போன் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து திருடப்பட்ட ரூ.20ஆயிரம் மதிப்புள்ள செல்போனையும் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட தங்ககுமார் மீது தென்பாகம் காவல் நிலையத்தில் கொலை வழக்கு உட்பட 2 வழக்குகளும், புதுக்கோட்டை காவல் நிலையத்தில் 2 திருட்டு வழக்குகளும், ஓட்டப்பிடாரம் காவல் நிலையத்தில் 4 திருட்டு வழக்குகளும், பசுவந்தனை காவல் நிலையத்தில் ஒரு திருட்டு என 9 வழக்குகளும், கார்த்திக் மீது தென்பாகம் காவல் நிலையத்தில் கொலை மிரட்டல் திருட்டு உட்பட 12 வழக்குகளும், சிப்காட் காவல் நிலையத்தில் ஒரு திருட்டு வழக்கும், தெர்மல்நகர் காவல் நிலையத்தில் ஒரு திருட்டு வழக்கும் என 14 வழக்குகளும், சக்திவேல் மீது தென்பாகம் காவல் நிலையத்தில் கொலை மிரட்டல் உட்பட 3 வழக்குகளும், முத்தையாபுரம் காவல் நிலையத்தில் ஒரு கொலை முயற்சி வழக்கும் என 4 வழக்குகள் உள்ளது.


