தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆழ்வார்திருநகரியை சேர்ந்தவர் குருஸ் அலெக்சாண்டர். இவரது மனைவி பிரான்சிஸ் விண்ணரசி. இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு சுமித் என்ற இரண்டரை வயது ஆண் குழந்தை உள்ளது.
பிரான்சிஸ் விண்ணரசி ஆழ்வார்திருநகரியில் உள்ள வேலன் காலனியில் உள்ள தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் வேலைக்கு செல்லும் சமயங்களில் இவரது கணவர் குரு அலெக்ஸாண்டர் தான் குழந்தையை பார்த்து வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று காலை பிரான்சிஸ் விண்ணரசி பள்ளிக்கு சென்றுள்ளார். பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீடு பூட்டி இருந்தது. தனது கணவருக்கு போன் செய்து பார்த்தபோது சுவிட் ஆப்பில் இருந்துள்ளது. தொடர்ந்து சுமார் ஐந்து மணி அளவில் கணவர் குரு அலெக்சாண்டருக்கு போன் செய்துள்ளார். அப்போது பேசிய குரு அலெக்சாண்டர் தான் ஒரு பிரச்சனையில் மாட்டியுள்ளதாகவும், 25 பவுன் நகை கொண்டு வந்தால் தான் விடுவார்கள் என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து உடனே பதறிய பிரான்சிஸ் விண்ணரசி ஆழ்வார்திருநகரி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து போலீசார் உடனே தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது மகன் சுமித் மட்டும் நாசரேத் அருகே ஒரு இடத்தில் நிற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து தனியாக நின்ற சுமித்தை போலீசார் மீட்டனர். மேலும் இதுகுறித்து ஆழ்வார்திருநகரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் செய்துங்கநல்லூர் காவல்ஆய்வாளர் பத்மநாபபிள்ளை தலைமையில் போலிசார் தனிப்படை அமைத்து கடத்தப்பட்டவரை தேடி வந்தனர்.
இந்த நிலையில் தனிப்படை போலீசார் விருதுநகர் மாவட்டம், சூலக்கரையில் ஒரு வாகனத்தை தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர். அப்போது குருஸ் அலெக்சாண்டரை கடத்திய வாகனம் என்பது தெரியவந்தது. அதில் இருந்த குருஸ் அலெக்சாண்டரையும் மீட்டனர்.
இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட கல்யாணி குமார், பூல்பாண்டி, டிரைவர் அகமது அக்ரம் ஆகிய மூவரையும் கைது செய்தனர்.
இதுகுறித்து பரபரப்பு தகவல் தெரியவந்ததுள்ளது.
கல்யாணிகுமார், பூல்பாண்டி உள்பட 5 நபர்களிடமிருந்து ரூபாய் 25 லட்சம் குருஸ் அலெக்சாண்டர் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அதற்கு கூடுதல் தொகை தருவாக கூறியுள்ளார். பணம் கொடுத்து பல ஆண்டுகளாகியும் இதுவரை அவர் பணம் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் தூத்துக்குடி குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் கல்யாணி குமார் பணத்தை பெற்றுத்தரும்படி புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக தூத்துக்குடு குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் குருஸ் அலெக்சாண்டர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.
இந்த நிலையில் பணம் தராமல் ஏமாற்றி வந்ததை அடுத்து நேற்று அவரை டிரைவர் உள்பட 5 பேர் சேர்ந்து வீட்டில் வைத்து காரில் கடத்தியுள்ளனர். இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்ததால் அனைத்து காவல்நிலையங்களுக்கும் தகவல் அளிக்கப்பட்டது.
இது தொடர்பாக விருதுநகர் சூலக்கரை காவல் நிலையத்திற்கும் தகவல் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் சூலக்கரை மேடு பகுதியில் தனிப்படை போலீசார் சூலக்கரை போலீசார் உதவியுடன் காரில் கடத்தி வரப்பட்ட குரூஸ் அலெக்சாண்டரை மீட்டனர். காரில் இருந்த கல்யாணிகுமார், பூல்பாண்டி, கார் ஓட்டுநர் அகமது அக்ரம் ஆகியோர் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.


